சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ்: 3-ஆவது சுற்றில் ஃபெடரர்

அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3-ஆவது சுற்றுக்கு
பீட்டருக்கு பந்தை சர்வீஸ் செய்யும் ஃபெடரர்.
பீட்டருக்கு பந்தை சர்வீஸ் செய்யும் ஃபெடரர்.


அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2-ஆவது சுற்றில் தோற்று வெளியேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிக்கான முன்னோட்டமாக பார்க்கப்படும் இப்போட்டியில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஃபெடரர் தனது 3-ஆவது சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்ஸிக்கை வீழ்த்தினார்.
ஃபெடரர் தனது அடுத்த சுற்றில் ஆர்ஜென்டீனாவின் லியோனார்டோ மேயரை சந்திக்கிறார். முன்னதாக மேயர், 7-6(9/7), 6-4 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 16-ஆவது இடத்தில் இருந்த பிரான்ஸின் லூகாஸ் புய்லேவை வீழ்த்தினார்.
கனடாவின் டெனிஸ் ஷபோவெலாவ் 6-4, 7-5 என்ற செட்களில் போட்டித் தரவரிசையில் 14-ஆவது இடத்தில் இருந்த பிரிட்டனின் கைல் எட்மன்ட்டை வீழ்த்தினார். 
இதனிடையே, போட்டித் தரவரிசையில் 11-ஆவது இடத்தில் இருக்கும் பெல்ஜியத்தின் டேவிட் காஃபின் 7-5, 6-3 என்ற செட்களில் கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார். சிட்சிபாஸ், சமீபத்தில் ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறி, அதில் நடாலிடம் தோற்றிருந்தார்.
இதர, முதல் சுற்றுகளில் ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரேவ் 6-3, 6-4 என்ற செட்களில் போஸ்னிய வீரர் டாமிர் ஜும்ஹூரை வீழ்த்தினார். ஹங்கேரியின் மார்டன் ஃபக்சோவிக்ஸ் 4-6, 6-3, 7-6(8/6) என்ற செட்களில் போலாந்தின் ஹுபர்ட் ஹுர்காக்ஸை வென்றார்.
செரீனா தோல்வி


இதனிடையே, சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2-ஆவது சுற்றில் தோல்வி கண்டார்.
அவர், போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருந்த செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவாவிடம் 3-6, 6-2, 3-6 என்ற செட்களில் வீழ்ந்தார். பெட்ரா தனது 3-ஆவது சுற்றில் பிரான்ஸின் கிறிஸ்டினா மெலாடெனோவிச்சை சந்திக்கிறார். முன்னதாக கிறிஸ்டினா, 6-3, 6-0 என்ற செட்களில் ஸ்லோவேகியாவின் விக்டோரியா குஸ்மோவாவை வென்றார்.
இதர 2-ஆவது சுற்றுகளில் போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருக்கும் பிராஸின் கரோலின் கார்சியா 6-4, 7-5 என்ற செட்களில் பெலாரஸின் விக்டோரியா அஸரென்காவை வீழ்த்தினார். போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 7-6(7/1), 4-6, 6-4 என்ற செட்களில் ரஷியாவின் ஸ்வெட்லனா குஸ்நெட்சோவாவை தோற்கடித்தார்.
இதனிடையே, முதல் சுற்றுகளில், போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் ரஷியாவின் டரியா கசாட்கினா, 6-4, 4-6, 3-6 என்ற செட்களில் குரோஷியாவின் பெட்ரா மார்டிச்சிடம் தோல்வி கண்டார். நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் 6-2, 6-0 என்ற செட்களில் அமெரிக்காவின் கோகோ வான்டெவெக்கை வீழ்த்தினார்.
இத்தாலியின் கமிலா ஜியார்ஜி 6-2, 6-3 என்ற செட்களில் லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவை தோற்கடித்தார். வெற்றி பெற்றவர்களில், கிகி பெர்டன்ஸ்-டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியையும், பெட்ரா மார்டிச்-அமெரிக்காவின் அமான்டா அனிசிமோவாவையும் அடுத்த சுற்றுகளில் எதிர்கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com