வாழ்வா -சாவா' ஆட்டத்தில் இங்கிலாந்துடன் இன்று மோதும் இந்தியா

வாழ்வா சாவா என்ற நிலையில் தொடரை கைப்பற்ற கட்டாயம் வென்றே தீர வேண்டும் என இங்கிலாந்துடன் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.
பயிற்சியின் இடையே கேப்டன் கோலி.
பயிற்சியின் இடையே கேப்டன் கோலி.


வாழ்வா சாவா என்ற நிலையில் தொடரை கைப்பற்ற கட்டாயம் வென்றே தீர வேண்டும் என இங்கிலாந்துடன் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணி ஏற்கெனவே டி 20 தொடரை வென்று, ஒரு நாள் போட்டித் தொடரை இழந்தது. பின்னர் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் இரு டெஸ்ட்களில் இந்தியா தோல்வியடைந்தது. இங்கிலாந்து 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரை யார் கைப்பற்றுவது என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது டெஸ்ட் டிரெண்ட்பிரிட்ஜில் நடக்கிறது. இந்திய அணியின் கேப்டன் விரோட் கோலி முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார். அதே போல் காயமடைந்திருந்த அஸ்வின், ஹார்திக் பாண்டியா ஆகியோரும் தயாராகி விட்டனர்.
இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் விரலில் காயமுற்று முதல் இரண்டு டெஸ்ட்களை தவறவிட்ட மிதவேகப்பந்து வேச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவும் இப்போட்டியில் விளையாடுகிறார். லார்ட்ஸ் மைதானத்தில் படுதோல்வியடைந்த நிலையில் இந்த டெஸ்டில் வென்றால் தான் தொடரை கைப்பற்றுவது குறித்து இந்திய அணி சிந்திக்க முடியும். சோபிக்காத விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு இளம் வீரர் ரிஷப் பந்த் சேர்க்கப்படுவது உறுதியாகி விட்டது.
இந்திய அணி தனது வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை நினைத்தே கவலைப்பட வேண்டியுள்ளது. லார்ட்ஸ் டெஸ்டில் 2 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது இந்திய அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தி விட்டது. இது தவறானது என பயிற்சியாளர் சாஸ்திரி ஒப்புக் கொண்டுள்ளார்.
துவக்க வீரரான முரளி விஜய்யின் ஆட்டமும் கவலை தருவதாக உள்ளது. அவருக்கு இந்த டெஸ்டில் மேலும் ஒரு வாய்ப்பு தரப்படலாம் எனத்தெரிகிறது. ஷிகர் தவன் மீண்டும் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் எந்த மாறுதலும் செய்யப்படாது. உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் நிலவுகிறது.
டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் உள்ள பிட்ச் கடந்த 2014-இல் இருந்ததைக் காட்டிலும் மாறுபட்டுள்ளது. அப்போது நடைபெற்ற டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்திய அணியின் ரன் வேட்டைக்கு உறுதுணையாக இருந்தது. முதல் நான்கு நாள்கள் மேகமூட்டத்துடன் வானிலை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிட்ச் ஸ்விங் பந்துவீச்சுக்கு உறுதுணையாக இருக்கும்.
இந்திய அணியில் புஜாரா, ரஹானே, கேஎல் ராகுல், முரளி விஜய் ஆகியோர் இன்னும் ஆடத்தொடங்கவில்லை என்ற நிலையில் உள்ளனர். இங்கிலாந்தின் ஸ்விங் பந்துவீச்சாளர்கள் ஆண்டர்சன், பிராட் ஆகியோரை எதிர்கொள்ள வேண்டும். சீரான வானிலை போன்றவை இந்திய அணியின் கவலையாக உள்ளது.
இங்கிலாந்துக்கு புதிய தலைவலி
அதே நேரத்தில் 2 டெஸ்ட் வெற்றியோடு உற்சாகமாக உள்ள இங்கிலாந்துக்கு அணி தேர்வு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற விசாரணை காரணமாக லார்ட்ஸ் டெஸ்டில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். 
அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டார். அவர் அபார சதமடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதே நேரத்தில் வழக்கில் இருந்து ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டதால், அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட வேண்டும். இதனால் அணி நிர்வாகத்துக்கு சிக்கல் நிலவியது.
ஆனால் முதல் டெஸ்ட் வெற்றிக்கு வித்திட்ட சாம் கரன் விடுவிக்கப்பட்டு ஸ்டோக்ஸ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேறு எந்த மாறுதலும் இங்கிலாந்து அணியில் செய்யப்படவில்லை.
உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியான இந்தியா மீண்டும் வீறு கொண்டு எழுந்து நாட்டிங்ஹாம் டெஸ்டை வெல்லுமா என இந்திய ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
விராட் கோலி கூறியது
போட்டியில் சிறப்பாக விளையாட வீரர்களின் எதிர்காலம் குறித்து நான் தற்போது எதுவும் கூற முடியாது. அவர்களுக்கு நான் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. எங்களது முக்கிய நோக்கம் இந்த டெஸ்டில் வெல்வது தான். 
6-வது பேட்ஸ்மேனை களமிறக்க வேண்டும் என ஆலோசித்துள்ளோம். ஒவ்வொருவரும் தங்களுக்கான ஆட்டத்தை ஆட வேண்டும். ஒருவருடைய எதிர்காலம் தொடர்பாக தற்போது கவலைப்பட நேரமில்லை. பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இருக்க வேண்டும். தங்கள் பொறுப்பை உணர வேண்டும். பும்ரா வருகை மகிழ்ச்சியைத் தருகிறது. பந்துவீச்சாளர்களை பற்றி கவலையில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com