பாண்டியா மிரட்டல் பந்துவீச்சு - 161 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து 

இந்தியாவுடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி

இந்தியாவுடனான 3-ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-ஆவது டெஸ்ட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணிக்கு குக் மற்றும் ஜென்னிங்ஸ் நல்ல தொடக்கம் தந்தனர். 2-ஆம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்திருந்தது. 

இதையடுத்து, 2-ஆம் நாள் ஆட்டத்தின் 2-ஆவது செஷன் தொடங்கியது. இந்த செஷனில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங்கில் மிரட்டினர். முதல் விக்கெட்டாக 29 ரன்கள் எடுத்திருந்த குக் இஷாந்த் சர்மா ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து பும்ரா வீசிய ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இதனால், இங்கிலாந்து அணி நெருக்கடிக்கு உள்ளானது. இங்கிலாந்து அணியின் இளம் வீரரான போப்பை இஷாந்த் சர்மா 10 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார்.

இதன்பிறகு, பாண்டியா மிரட்டலில் களமிறங்கினார். முதலில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டை சர்ச்சைக்குள்ளான கேட்ச் மூலம் வீழ்த்தினார். இவரைத்தொடர்ந்து ஸ்டோக்ஸை ஷமி வீழ்த்தினார். 

அதன்பிறகு பேர்ஸ்டோவ், வோக்ஸ், ரஷீத், பிராட் என வரிசையாக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை பாண்டியா பெவிலியனுக்கு அனுப்பினார். இதன்மூலம், அவர் டெஸ்ட் அரங்கில் முதன்முறையாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்காரணமாக, அந்த அணி 128 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் என்ற மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து, இங்கிலாந்தின் துணை கேப்டன் அதிரடியில் மிரட்டி இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை உயர்த்தினார். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களை கடந்தது.  

இந்நிலையில், பட்லர் 39 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்தில் ஷர்துல் தாகூர் வசம் கேட்ச் ஆனார். இதன்மூலம், அந்த அணி 161 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரே செஷனில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி சார்பில் பாண்டியா 5 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும், ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதன்மூலம் இந்திய அணி தற்போது வலுவான 168 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, 2-ஆம் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை எடுக்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com