அசத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்: 2-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலியா 191/7

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது...
அசத்திய இந்தியப் பந்துவீச்சாளர்கள்: 2-ம் நாளின் முடிவில் ஆஸ்திரேலியா 191/7

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. 

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்துள்ளது. இன்று ஆட்டம் தொடங்கியபோது ஹேஸில்வுட் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார் ஷமி. இதனால் இன்று கூடுதலாக ஒரு ரன்னும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இந்திய அணி. ஆஸ்திரேலியத் தரப்பில் ஹேஸில்வுட் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த, ஸ்டார்க், கம்மின்ஸ், லயன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.

இதன்பிறகு முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸி. அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி கிடைத்தது. ரன் எதுவும் எடுக்காமல் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார் ஃபிஞ்ச். இதன்பிறகு ஹாரிஸும் கவாஜாவும் நன்கு விளையாடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். ஆனால் தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய அஸ்வின், ஹாரிஸை 26 ரன்களில் வெளியேற்றினார். உணவு இடைவேளைக்குப் பிறகு ஷான் மார்ஷ் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆகி 2 ரன்களில் வெளியேறினார். 125 பந்துகள்வரை எதிர்கொண்டு நிதானமாக விளையாடிய கவாஜா, அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சினால் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 87 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி உற்சாகமடைந்தது. எனினும் மேலும் விக்கெட் விழாமல் ஹேன்ட்ஸ்காம்பும் ஹெட்டும் பார்த்துக்கொண்டார்கள். 

2-ம் நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 117 ரன்கள் எடுத்தது. ஹேண்ட்ஸ்காம்ப் 33, ஹெட் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இந்திய அணியின் ஸ்கோரை எட்ட ஆஸி. அணி மேலும் 133 ரன்கள் எடுக்கவேண்டியிருந்தது. 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஆஸி. அணிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள் இந்தியப் பந்துவீச்சாளர்கள். ரன்களைக் கட்டுப்படுத்தியதன் மூலம் ஆஸி. அணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. வழக்கமாக ஆரம்பம் முதல் முத்திரை பதிக்கும் பூம்ரா இந்தமுறை தாக்கத்தை ஏற்படுத்த சிறிது நேரமானது. அவருடைய அற்புதமான பந்தில் நன்கு ஆடிவந்த ஹேண்ட்ஸ்காம்ப் 34 பந்துகளில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்தச் சில ஓவர்களில் கேப்டன் பெயினின் விக்கெட்டை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். பெயின் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். 127 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி எவ்விதத்தில் கடைசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தப் போகிறது என்கிற ஆர்வம் ஏற்பட்டது. பெரும்பாலான ஆட்டங்களில் எதிரணியினர் கடைசி 4 விக்கெட்டுகளில் அதிக ரன்கள் எடுத்து தப்பித்துள்ளதால் இந்தமுறை அதுபோல நடந்துவிடக்கூடாது என்று இந்திய ரசிகர்கள் எண்ணினார்கள். 

80 ஓவருக்குப் பிறகு புதிய பந்தினைத் தேர்வு செய்தது இந்திய அணி. புதிய பந்தின் முதல் ஓவரிலேயே கம்மின்ஸை எல்பிடபிள்யூ முறையில் 10 ரன்களுடன் வெளியேற்றினார் பூம்ரா. 

2-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61, மிட்செல் ஸ்டார்க் 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். இந்திய அணித் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் இஷாந்த் சர்மா, பூம்ரா தலா 2 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்கள். மூன்று விக்கெட்டுகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்திய அணியின் ஸ்கோரை எட்ட ஆஸி. அணிக்கு மேலும் 59 ரன்கள் தேவைப்படுவதால் நாளைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com