விராட் கோலிக்கு நிகராக சாதித்த இந்திய கேப்டன் வேறு யாராவது உண்டா?: அடிலெய்ட் டெஸ்ட் வெற்றியின் சாதனை விவரங்கள்!

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குறைந்தபட்சம் ஒரு வெற்றியையாவது அடைந்த முதல் இந்திய கேப்டன்...
விராட் கோலிக்கு நிகராக சாதித்த இந்திய கேப்டன் வேறு யாராவது உண்டா?: அடிலெய்ட் டெஸ்ட் வெற்றியின் சாதனை விவரங்கள்!

அடிலெய்டில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.

ஆஸ்திரேலிய அணி தனது 2-வது இன்னிங்ஸில், 119.5 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி முதல் டெஸ்டை 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது. இந்திய அணித் தரப்பில் பூம்ரா, ஷமி, அஸ்வின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இதன்மூலம், ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. இரு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக விளையாடிய புஜாராவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியும் கேப்டன் விராட் கோலியும் நிகழ்த்திய சாதனைகள்:

* டெஸ்ட் ஆட்டத்தில் டாஸ் வென்றபிறகு ஒருமுறைகூட கேப்டன் விராட் கோலி தோற்றதில்லை. 20 டெஸ்டுகளில் டாஸ் வென்ற கோலி 17-ல் வெற்றி அடைந்து, 3 டெஸ்டுகளை டிரா செய்துள்ளார். 

* கடந்த 50 வருடங்களில் ஆஸ்திரேலியாவில் முதல் டெஸ்டை வென்ற அணி டெஸ்ட் தொடரில் தோற்றதாகச் சரித்திரமில்லை.

* ஆசியாவுக்கு வெளியே முதல்முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுள்ளார் புஜாரா. 2003-ல் டிராவிடும் இப்போது புஜாராவும் அடிலெய்டில் ஆஸ்திரேலிய மண்ணில் தங்களது முதல் சதத்தைப் பதிவு செய்தார்கள். இருவரும் இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதமெடுத்தார்கள். இருவருமே அணியின் வெற்றிக்கு உதவியதோடு 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை பெற உதவினார்கள். 

* இந்த வருடம் ஜோகனஸ்பர்க், டிரெண்ட் பிரிட்ஜ், அடிலெய்ட் ஓவல் ஆகிய இடங்களில் நடைபெற்ற டெஸ்டுகளை இந்திய அணி வென்றுள்ளது. மூன்று டெஸ்டுகளிலும் புஜாரா எடுத்த ரன்கள்: 50, 72, 123 & 71. மூன்று டெஸ்டுகளிலும் அரை சதமெடுத்த ஒரே இந்திய வீரர் - புஜாரா. 

* 2-வது இன்னிங்ஸில் அனைத்து ஆஸ்திரேலிய வீரர்களும் குறைந்தபட்சம் 35 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்கள். குறைவான பந்துகளை எதிர்கொண்டவர் தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச் - 35 பந்துகள்!

* ஆஸ்திரேலியாவில் இந்திய அணி அடைந்துள்ள 6-வது டெஸ்ட் வெற்றி இது. கடந்த 35 வருடங்களில் இது மூன்றாவது வெற்றி. இதற்கு முன்பு 2008, 2003-ம் ஆண்டுகளில் இந்திய அணி வென்றது. 1977-78 தொடரில் இரண்டு வெற்றிகளும் 1980-81-ல் ஒரு வெற்றியும் பெற்றது இந்திய அணி. 

* இதற்கு முன்பு 11 முறை ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது இந்திய அணி. ஒருமுறைகூட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டை இந்திய அணி வென்றதில்லை. 11 டெஸ்டுகளில் 9-ல் தோற்று 2-ஐ டிரா செய்துள்ளது. 

* ஆசியாவுக்கு வெளியே விளையாடிய முதல் டெஸ்டுகளில் இந்திய அணி வெற்றி பெறுவது அரிதான விஷயமே. நியூஸிலாந்தில் மூன்று முறையும் (1968, 1976, 2009) மேற்கிந்தியத் தீவுகளில் இருமுறையும் (2011, 2016), இங்கிலாந்தில் ஒருமுறையும் (1986), தென் ஆப்பிரிக்காவில் ஒருமுறையும் (2006) இந்திய அணி முதல் டெஸ்டை வென்றுள்ளது. இப்போது இந்தப் பட்டியலில் அடிலெய்ட் டெஸ்ட் வெற்றியும் இணைந்துள்ளது. 

* கடந்த 100 வருடங்களில் எந்தவொரு ஆஸ்திரேலிய அணியும் 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக அடைந்ததில்லை. 15 தருணங்களில் 7-ல் தோற்றும் 8-ஐ டிராவும் செய்துள்ளது ஆஸ்திரேலிய அணி. 

* கடந்த 10 வருடங்களில் எந்தவொரு அணியும் இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை வெற்றிகரமாக அடைந்ததில்லை. 2007-08-ல் கேப் டவுனில் தென் ஆப்பிரிக்கா இச்சாதனையைச் செய்தது. அதன்பிறகு 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை 34 முறை இந்திய அணி அளித்ததில் 23-ல் வென்று, 11 டெஸ்டுகளை டிரா செய்துள்ளது. 

* குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவின் 3-வது வெற்றி இது. 2004-05-ல் மும்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 13 ரன்கள் வித்தியாசத்திலும் 1972-73-ல் இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தாவில் 28 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி கண்டது. 

* இந்தியாவுக்கு வெளியே விளையாடியதில், முதலில் பேட்டிங் செய்தபோது 50 ரன்களுக்குக் குறைவான நிலையில் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்தபோது பிறகு வெற்றியடைவது இதுவே முதல்முறை. இந்த நிலையில் இதற்கு முன்பு இரு வெற்றிகளை அடைந்தாலும் அவ்விரண்டும் சென்னையிலும் மும்பையிலும் கிடைத்தன. 

* தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குறைந்தபட்சம் ஒரு வெற்றியையாவது அடைந்த முதல் இந்திய கேப்டன், முதல் ஆசிய கேப்டன் என்கிற பெருமையை அடைந்துள்ளார் விராட் கோலி. ஜோகனஸ்பர்க், டிரெண்ட் பிரிட்ஜ், அடிலெய்ட் ஓவல் என மூன்று இடங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்றது இந்த வருடத்தில்தான். ஒரே வருடத்தில் இதைச் சாதித்த முதல் ஆசிய அணியும் இந்தியாதான். 

* இந்த டெஸ்டில் 11 கேட்சுகள் பிடித்து உலக சாதனையைச் சமன் செய்துள்ளார் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். ஜேக் ரஸல், டி வில்லியர்ஸ் ஆகியோர் 11 கேட்சுகள் பிடித்து முதலிடத்தில் உள்ள நிலையில் அவர்களுடன் ரிஷப் பந்தும் இணைந்துள்ளார். இந்திய விக்கெட் கீப்பர்களில் சாஹா 10 கேட்சுகள் பிடித்துள்ளதே இதற்கு முன்புவரை சாதனையாக இருந்தது. அதை முறியடித்துள்ளார் ரிஷப் பந்த்.

* இந்த டெஸ்டில் 35 கேட்சுகள். இது ஓர் உலக சாதனை. இதற்கு முன்பு இந்த வருடம் கேப் டவுனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்டில் 34 கேட்சுகள் என இருந்ததே சாதனையாக இருந்தது. அதை அடிலெய்ட் டெஸ்ட் முறியடித்துள்ளதும். மேலும் இரு அணிகளின் 2-வது இன்னிங்ஸில் 20 விக்கெட்டுகளும் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தன. 

* 25 டெஸ்ட் வெற்றிகளை விரைவாக எடுத்த கேப்டன்கள்

ரிக்கி பாண்டிங் - 33 டெஸ்டுகள்
ஸ்டீவ் வாஹ் - 35 டெஸ்டுகள்
விராட் கோலி - 43 டெஸ்டுகள்
விவியன் ரிச்சர்ட்ஸ் - 44 டெஸ்டுகள்

* அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த இந்திய கேப்டன்கள்

27 - தோனி (60 டெஸ்டுகளில்)
25 - கோலி (43 டெஸ்டுகளில்)
21 - கங்குலி (49 டெஸ்டுகளில்)
14 - அசாருதீன் (47 டெஸ்டுகளில்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com