காலிறுதியில் ஜெர்மனி

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு டி பிரிவில் இருந்து ஜெர்மனி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. மலேசியாவை 5-3 என்ற கோல் கணக்கில் அந்த அணி வென்றது.
காலிறுதியில் ஜெர்மனி

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு டி பிரிவில் இருந்து ஜெர்மனி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. மலேசியாவை 5-3 என்ற கோல் கணக்கில் அந்த அணி வென்றது.
 புவனேசுவரத்தில் 14-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் கடந்த நவ. 28-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன. தற்போது மூன்றாவது சுற்று ஆட்டங்கள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற குரூப் ஆஃப் டெத் எனப்படும் டி பிரிவு முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனியும்-மலேசியாவும் மோதின.
 ஜெர்மனி அணி தொடக்கத்திலேயே தனது ஆதிக்கத்தை செலுத்தி 2 கோல்களை துரிதமாக அடித்தது. ஹெர்ஸ்புருச் 2-ஆவது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்தார். ரூர் 14 மற்றும் 18-ஆவது நிமிடங்ளில் அபாரமாக கோல்களை அடித்தார். இதனால் ஜெர்மனி 3-0 என முன்னிலை பெற்றது.
 இதனால் அதிர்ச்சி அடைந்த மலேசிய அணியும் பதிலுக்கு கோலடிக்க முயன்றது. இதன் பலனாக அதன் வீரர் ரஸி 26-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். அதற்கடுத்த சிறிது நேரத்திலேயே 28-ஆவது நிமிடத்தில் நபீல் நூர் இரண்டாவது கோலை அடித்தார். முதல் பாதி நிறைவில் ஜெர்மனி 3-2 என முன்னிலை பெற்றது.
 இரண்டாம் பாதியிலும் ஜெர்மனியின் துடிப்பான ஆட்டத்துக்கு மலேசியா ஈடுகொடுத்து ஆடியது. எனினும் 39-ஆவது நிமிடத்தில் ஜெர்மன் வீரர் மில்ட்கவ் தனது அணிக்கு 4-ஆவது கோலை அடித்தார். பதிலுக்கு மலேசிய வீரர் ரஸியும் 42-ஆவது நிமிடத்தில் கோலடித்ததால் 4-3 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி முன்னிலை பெற்றிருந்தது. நேரடித் தகுதி பெற வேண்டும் என்ற உந்துதலில் ஜெர்மன் வீரர்கள் ஆட்டத்தை தீவிரப்படுத்தியதால் 59-ஆவது நிமிடத்தில் ஹெர்ஸ்புருச் 5-ஆவது கோலை அடித்தார். இறுதியில் 5-3 என ஜெர்மனி அபார வெற்றி பெற்று காலிறுதிக்கு நேரடியாக முன்னேறியது.
 பாக்.கை சாய்த்தது நெதர்லாந்து (5-1)
 கிராஸ் ஓவர் பிரிவுக்கு முன்னேற வேண்டிய நிலையில் இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வரபோராடின.
 6-ஆவது நிமிடத்திலேயே நெதர்லாந்து வீரர் தியரி பிரிங்க்மேன் முதல்கோலடித்தார். 9-ஆவது நிமிடத்தில் பாக். வீரர் உமர் புட்டா தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். 27-ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் வலேன்டின் வெர்கா இரண்டாவது கோலை அடித்தார்.
 முதல் பாதி முடிவில் நெதர்லாந்து 2-1 என முன்னிலை பெற்றிருந்தது.
 இரண்டாவது பாதி ஆட்டத்திலும் பாக். அணி பதில் கோலடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் அதை முறியடித்து நெதர்லாந்து வீரர் ஜெரோன் ஹெர்ட்ஸ்பெர்கர் 37-ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்தார். 47-ஆவது நிமிடத்தில் குரூன் 4-ஆவது கோலையும், 59-ஆவது நிமிடத்தில் சான்டெர்பார்ட் 5-ஆவது கோலையும் அடித்தனர். இறுதியில் 5-1 என்ற கோல்கணக்கில் நெதர்லாந்து வென்றது. இதன் மூலம் இரு அணிகளும் கிராஸ் ஓவர் பிரிவுக்கு முன்னேறின. மலேசியா சோகத்தோடு வெளியேறியது.
 கிராஸ் ஓவர் ஆட்டங்கள் இன்று தொடக்கம்
 உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் இரண்டாவது கட்டமான கிராஸ் ஓவர் ஆட்டங்கள் திங்கள்கிழமை தொடங்குகின்றன.
 ஏ பிரிவில் ஆர்ஜென்டீனா நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. பிரான்ஸ் மற்றும் நியூஸிலாந்து கிராஸ் ஓவர் பிரிவுக்கு முன்னேறியுள்ளன.
 பி பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணி 9 புள்ளிகளுடன் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது. அதே பிரிவில் இங்கிலாந்து, சீன அணிகள் கிராஸ் ஓவர் பிரிவுக்கு முன்னேறின.
 சி பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றது. மேலும் பெல்ஜியம், கனடா அணிகள் கிராஸ் ஓவர் பிரிவுக்கு முன்னேறின.
 டி பிரிவில் நேரடியாக தகுதி பெற்றுள்ளது. மேலும் இரு அணிகளும் கிராஸ் ஓவர் பிரிவுக்கு தகுதி பெற்றன.
 கிராஸ் ஓவர் ஆட்டம்:
 திங்கள்கிழமை தொடங்கும் கிராஸ் ஓவர் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூஸிலாந்தும், இரண்டாவது ஆட்டத்தில் பிரான்ஸ்-சீன அணிகள் மோதுகின்றன.
 செவ்வாய்க்கிழமை முதல் ஆட்டத்தில் பெல்ஜியம்- பாகிஸ்தான் அணிகளும், இரண்டாவது ஆட்டத்தில் கனடா-நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன.
 இன்றைய ஆட்டம்
 கிராஸ் ஓவர்-1
 இங்கிலாந்து-நியூஸிலாந்து, மாலை 4.45.
 கிராஸ் ஓவர்-2
 பிரான்ஸ்-சீனா, இரவு 7.00.
 நேரடி ஒளிபரப்பு:
 ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டி.டி.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com