கங்குலி, தோனியை விடவும் சிறந்த கேப்டனா விராட் கோலி?: புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மைகள்!

கங்குலி, தோனியை விடவும் சிறந்த கேப்டனா விராட் கோலி?: புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மைகள்!

உலகின் நெ.1 பேட்ஸ்மேன் இந்தியாவின் சிறந்த கேப்டனாகவும் இருப்பது இந்திய அணிக்கு இதுவரை கிடைக்காத ஒரு வசதி...

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. மேலும், ஆஸ்திரேலியாவில் முதல்முறையாக டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி.

தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குறைந்தபட்சம் ஒரு வெற்றியையாவது அடைந்த முதல் இந்திய கேப்டன், முதல் ஆசிய கேப்டன் என்கிற பெருமையை அடைந்துள்ளார் விராட் கோலி. ஒரே வருடத்தில் இதைச் சாதித்த முதல் ஆசிய அணியும் இந்தியாதான். 

இதையடுத்து கங்குலி, தோனியை விடவும் விராட் கோலி சிறந்த கேப்டனா என்கிற விவாதம் சமூகவலைத்தளங்களில் எழுந்துள்ளது. வெளிநாடுகளில் கங்குலி, தோனியை விடவும் கோலி அதிக வெற்றிகளை அடைந்துள்ளாரா என்கிற கேள்வியைப் பலரும் எழுப்பியுள்ளார்கள்.

உண்மையிலேயே இதர இந்திய கேப்டன்களை விடவும் விராட் கோலி சிறந்த கேப்டனா என்கிற கேள்விக்குப் புள்ளிவிவரங்கள் என்ன விடையளிக்கின்றன?

அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்துள்ள இந்திய கேப்டன்கள்

எம்எஸ் தோனி - 27 வெற்றிகள் (60 டெஸ்டுகளில்)
விராட் கோலி - 25 வெற்றிகள் (43 டெஸ்டுகளில்)
எம்எஸ் தோனி - 21 வெற்றிகள் (49 டெஸ்டுகளில்)

வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை அடைந்த இந்திய கேப்டன்கள்

கங்குலி - 11 வெற்றிகள் (28 டெஸ்டுகளில்)
விராட் கோலி - 10 வெற்றிகள் (22 டெஸ்டுகளில்)
எம்எஸ் தோனி - 6 வெற்றிகள் (30 டெஸ்டுகளில்)

ஆசியாவுக்கு வெளியே அதிக வெற்றிகளை அடைந்த இந்திய கேப்டன்கள்

கங்குலி - 6 வெற்றிகள் (21 டெஸ்டுகளில்)
விராட் கோலி - 5 வெற்றிகள் (15 டெஸ்டுகளில்)
எம்எஸ் தோனி - 4 வெற்றிகள் (26 டெஸ்டுகளில்)

25 டெஸ்ட் வெற்றிகளை விரைவாக எடுத்த கேப்டன்கள்

ரிக்கி பாண்டிங் - 33 டெஸ்டுகள்
ஸ்டீவ் வாஹ் - 35 டெஸ்டுகள்
விராட் கோலி - 43 டெஸ்டுகள்
விவியன் ரிச்சர்ட்ஸ் - 44 டெஸ்டுகள்

***

* இதன் அடிப்படையில் பார்க்கும்போது வெளிநாட்டு வெற்றிகளில் கங்குலியின் சாதனைகளின் அருகில் வந்துவிட்டார் விராட் கோலி. மொத்த டெஸ்ட் வெற்றிகளில் தோனியைத் தாண்ட இன்னும் 3 வெற்றிகளே போதும். அதை அடுத்த வருடம் சாதித்துவிடுவார் கோலி.

* வெளிநாடுகளிலும் ஆசியாவுக்கு வெளியிலும் கங்குலியின் வெற்றிகளைத் தாண்ட கோலிக்கு இன்னும் 2 வெற்றிகளே தேவை. கங்குலியை விடவும் ஆறு டெஸ்டுகள் குறைந்த அளவில் விளையாடியுள்ளார் கோலி. எனவே இந்த இலக்கை இந்த டெஸ்ட் தொடரிலோ அல்லது அடுத்த வெளிநாட்டு டெஸ்ட் தொடரிலோ நிச்சயம் அவர் அடைந்துவிடுவார் என்கிற அளவுக்குத்தான் இந்திய அணியின் ஆட்டத்திறன் சமீபகாலமாக உள்ளது. 

* ஒட்டுமொத்த அளவில் 3 டெஸ்ட் வெற்றிகளையும் வெளிநாடுகளிலும் ஆசியாவுக்கு வெளியிலும் 2 டெஸ்ட் வெற்றிகளையும் அடைந்துவிட்டால் இந்திய டெஸ்ட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன் என்கிற பெருமையை விராட் கோலி அடைவார்.

* உலகளவில் 25 டெஸ்ட் வெற்றிகளை விரைவாக அடைந்த கேப்டன்களில் 43 டெஸ்டுகளில் அடைந்து 3-ம் இடம் பிடித்துள்ளார் கோலி. இந்தச் சாதனை ஆஸ்திரேலிய கேப்டன்களுக்கு எளிதில் கிடைத்துவிடும். அந்த அணி பல வருடங்களாகச் சிறப்பாக விளையாடி வருகிறது. ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன்களுக்கு அடுத்த இடத்தைப் பிடித்து இந்திய அணியின் ஆதிக்கத்தையும் நிலைநாட்டியுள்ளார் கோலி.

உலகின் நெ.1 பேட்ஸ்மேன் இந்தியாவின் சிறந்த கேப்டனாகவும் இருப்பது இந்திய அணிக்கு இதுவரை கிடைக்காத ஒரு வசதி. பல விமரிசனங்கள், சர்ச்சைகள், ஏன் பல தோல்விகளுக்கு மத்தியிலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த கேப்டனாகவும் கோலி சாதித்துக் கொண்டிருக்கிறார். கங்குலி-தோனியின் ரசிகர்கள் பல்வேறு காரணங்களைக் கொண்டு ஒரு கேப்டனாக கோலியின் பங்களிப்பை, அவருடைய சாதனைகளை மறுக்கலாம். ஆனால் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இந்திய கேப்டனாக கோலிதான் இடம்பிடிக்கவுள்ளார். அடுத்தவருடம் அதற்கான கிரீடம் அவருக்கு அளிக்கப்பட்டுவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com