உலகக் கோப்பை ஹாக்கி: அரையிறுதியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா

ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 14-ஆவது உலகக் கோப்பை
வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்கள்.
வெற்றி மகிழ்ச்சியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்கள்.

* ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனா அதிர்ச்சி தோல்வி
* ஜெர்மனி-பெல்ஜியம் இன்று மோதல்

ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 14-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற சிறப்பை இங்கிலாந்து பெற்றது. தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது அந்த அணி.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 3-0 கோல் கணக்கில் பிரான்ஸை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
புவனேசுவரம் கலிங்கா மைதானத்தில் புதன்கிழமை மாலை முதல் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் ஆர்ஜென்டீனா-முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து மோதின.
உலகின் இரண்டாம் நிலையில் உள்ள ஆர்ஜென்டீனா தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த முனைந்தது. ஆனால் இங்கிலாந்து அணியும் சளைக்காமல் சவால் விடுத்து ஆடியது.
ஆனால் முதல் பாதி ஆட்டம் ஆர்ஜென்டீனாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அதன் 
நட்சத்திர வீரர் கோன்ஸாலோ பெய்லட் 17-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த இங்கிலாந்து ஆட்டத்தை தீவிரப்படுத்தியதால் 27-ஆவது நிமிடத்தில் பேரி மிடில்டன் தனது அணிக்கு முதல் கோலை அடித்தார். இதன் மூலம் முதல் பாதி நிறைவில் 1-1 என சமநிலை ஏற்பட்டது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதும் இரு அணிகளும் பதிலுக்கு பதில் கோலடிக்க முயற்சிகள் மேற்கொண்டன. இங்கிலாந்து வீரர் சான்போர்ட் அனுப்பிய பந்தை 45-ஆவது நிமிடத்தில் கோலாக்கினார் வில் கால்னன். 
மீண்டும் ஆர்ஜென்டீனா நட்சத்திர வீரர் பெய்லட் பெனால்டி கார்னர் மூலம் 48-ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார்.
உடனே இங்கிலாந்து வீரர் ஹாரி மார்ட்டின் 49-ஆவது நிமிடத்தில் தனது அணியின் மூன்றாவது மற்றும் வெற்றி கோலை அடித்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 3-2 என ஆர்ஜென்டீனாவை வென்று அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது. 
ஜெர்மனி-பெல்ஜிய அணிகள் மோதும்ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் இங்கிலாந்து அரையிறுதியில் மோதும்.


ஆஸ்திரேலியா அபாரம்: 11-ஆவது முறையாக அரையிறுதிக்கு தகுதி
இரவு 7 மணிக்கு நடைபெற்ற இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா-பிரான்ஸ் அணிகள் மோதின.
தொடர்ந்து ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ள ஆஸி. அணி, முதன்முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்ற பிரான்ஸை எதிர்கொண்டது.


தொடக்கம் முதலே ஆஸி. அணி ஆதிக்கம் செலுத்தியது. 4-ஆவது நிமிடத்திலேயே அதன் வீரர் ஜெரேமி ஹேவர்ட் முதல் கோலை அடித்தார்.
19-ஆவது நிமிடத்தில் பிளேக் கோவர்ஸ் இரண்டாவது கோலை அடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்ட நிறைவில் ஆஸி. 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாம் பாதி ஆட்டமும் ஆஸி. அணி கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அதன் வீரர் ஸலேவ்ஸ்கி 37-ஆவது நிமிடத்தில் மூன்றாவது கோலை அடித்தார்.
பிரான்ஸ் அணி பதிலுக்கு கோலடிக்க முயன்ற போதும், ஆஸி. அணி கோல்பகுதி அருகிலேயே அதன் வீரர்களால் நெருங்க முடியவில்லை. இறுதியில் 3-0 என வென்ற ஆஸி.அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. இந்தியா-நெதர்லாந்து அணிகளின் காலிறுதி ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் அரையிறுதியில் ஆஸி. மோதும்.
11-ஆவது முறையாக தொடர்ந்து உலகக் கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது ஆஸி. அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com