வலிமையான நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா? இன்று காலிறுதியில் மோதல்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் வலிமையான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.
வலிமையான நெதர்லாந்தை சமாளிக்குமா இந்தியா? இன்று காலிறுதியில் மோதல்


உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் வலிமையான நெதர்லாந்தை எதிர்கொள்கிறது இந்தியா.
கடந்த நவ. 28-ஆம் தேதி புவனேசுவரத்தில் தொடங்கிய 14-ஆவது உலகக் கோப்பை ஹாக்கி போட்டி தற்போது முக்கியமான காலிறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வியாழக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது காலிறுதியில் இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
கடந்த 1975-இல் இந்தியா ஓரே முறை உலகக் கோப்பையை வென்றது. ஆனால் நெதர்லாந்தோ 3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. 
உலகின் முதல் 5 அணிகளில் தொடர்ந்து நீடித்து வருகிறது. 
இதுவரை நடைபெற்ற உலகக் கோப்பைகளில் நெதர்லாந்தை ஒருமுறை கூட இந்திய அணி வென்றதில்லை. 5 முறை நெதர்லாந்து வென்றது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. 
மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தற்போது புவனேசுவரத்தில் நடைபெறும் போட்டியில் நெதர்லாந்தை வென்று வரலாற்றை மாற்றி எழுதுவார்களா என ஹாக்கி ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர். இரு அணிகளும் இதுவரை 105 முறை மோதியதில் இந்தியா 33 முறையும், நெதர்லாந்து 48 முறையும் வென்றுள்ளன. மீதி ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
எனினும் தற்போதைய தரவரிசை மற்றும் அணிகள் பலத்தின்படி பார்த்தால் இரு அணிகளும் சமமாகவே உள்ளன. நெதர்லாந்து 4 மற்றும் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளன. 
கடந்த ஜூலை மாதம் பிரெடாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இரு அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. கடந்த 2013-இல் இருந்து இரு அணிகளும் 9 முறை மோதியதில் இரு அணிகளும் தலா 4 வெற்றிகளை பெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிவுற்றது.
இதுதொடர்பாக மன்ப்ரீத் சிங் கூறியதாவது:
முந்தைய போட்டி முடிவுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நெதர்லாந்து பலமுறை நம்மை வென்றுள்ளனர். நாமும் அவர்களை வென்றோம். தற்போது இந்திய ஹாக்கி தரம் சிறப்பாக உள்ளது. இந்த ஆட்டம் மிகவும் கடினமாகஇருக்கும். எந்த அணி சிறப்பாக ஆடுகிறதோ அதுவே வெல்லும் என்றார்.
குரூப் பிரிவு ஆட்டங்களில் இந்தியா மொத்தம் 12 கோல்களை அடித்து 3 கோல்களை மட்டுமே எதிர்வாங்கியது. நெதர்லாந்து 18 கோல்களை அடித்து, 5 கோல்களை எதிர்வாங்கியது. 
நெதர்லாந்து அணியில் பில்லி பேக்கர், வேன் ஆஸ், ஹெர்ஸ்பெர்கர், மைக்ரோ, கெம்பர்மேன், பிரிங்க்மேன் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர். அதே நேரத்தில் இந்திய அணியில் மந்தீப் சிங், சிம்ரஞ்சித் சிங், லலித் உபாத்யாய, அக்ஷதீப் சிங், மன்ப்ரீத் சிங், ஸ்ரீஜேஷ் ஆகியோர் உள்ளனர்.
நெதர்லாந்து பயிற்சியாளர் மாக்ஸ் கால்டாஸ் கூறியதாவது:
கலிங்கா மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்களால் நிரம்பியிருக்கும். இதனால் இந்திய அணிக்கு கூடுதல் நிர்பந்தம் உள்ளது. ஆனால் நாங்கள் எந்த அழுத்தமும் இல்லாமல் ஆடுவோம் என்றார்.
முதல் ஆட்டத்தில் வலிமையான ஜெர்மனி-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com