இந்திய அணி பந்துவீச்சாளர்களின் நெருக்கடியைச் சமாளித்த ஆஸி. அணி: முதல் நாளில் 277/6

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாளன்று 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது...
இந்திய அணி பந்துவீச்சாளர்களின் நெருக்கடியைச் சமாளித்த ஆஸி. அணி: முதல் நாளில் 277/6

முதல்நாள்: ஆஸ்திரேலியா 277/6 (ஹாரிஸ் 70, ஹெட் 58, ஃபிஞ்ச் 50; இஷாந்த் சர்மா 2/35, விஹாரி 2/53) vs இந்தியா

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாளன்று 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது.

அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது. இதன் தொடர்ச்சியாக பெர்த்தில் 2-வது டெஸ்ட் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் விஹாரியும் உமேஷ் யாதவும் இடம்பிடித்துள்ளார்கள். முதல் டெஸ்டில் இடம்பெற்ற அதே வீரர்களே ஆஸி. அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

உமேஷ் யாதவுக்குப் பதிலாக ஜடேஜாவையோ அல்லது புவனேஸ்வர் குமாரையோ கோலி தேர்வு செய்திருக்கலாம் என்று சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்துகள் தெரிவித்துள்ளார்கள். தவறான அணித் தேர்வால் இந்திய அணி 2-வது டெஸ்டில் தோல்வியடையுமோ என்றும் பலர் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

முதல் நாளின் முதல் பகுதியில் வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தாலும் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களான ஆரோன் ஃபிஞ்சும் ஹாரிஸும் நன்கு விளையாடினார்கள். முதல் 10 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தார்கள். எனினும் இதன்பிறகு இந்திய அணியின் பந்துவீச்சு பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுத்ததால் நிதானப் போக்கைக் கடைப்பிடித்தார்கள்.

உணவு இடைவேளையின்போது ஆஸி. அணி 26 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்தது. ஹாரிஸ் 36, ஃபிஞ்ச் 28 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

உணவு இடைவேளைக்குப் பிறகு இருவரும் நன்கு விளையாடினார்கள். 90 பந்துகளில் ஹாரிஸும் 103 பந்துகளில் ஃபிஞ்சும் அரை சதத்தைக் கடந்தார்கள். 33.3 ஓவரின்போது இந்தக் கூட்டணி 100 ரன்களை அடைந்தது. பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளம் என்பதால் இந்தத் தருணத்தில் இந்திய ரசிகர்கள் மிகவும் கவலையடைந்தார்கள்.

அரை சதமெடுத்த ஃபிஞ்ச் கூடுதலாக ஒரு ரன்னும் சேர்க்காமல் பூம்ராவின் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். 10 ஓவர்களுக்குப் பிறகு இந்திய அணி நன்கு பந்துவீசியதால் அதன் அழுத்தத்தை உணர ஆரம்பித்தார்கள் ஆஸி. வீரர்கள். அடுத்து வந்த கவாஜா மிகவும் தடுமாறினார். 38 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார். ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடி வந்த ஹாரிஸ், விஹாரி வீசிய பந்து எதிர்பாராதவிதமாக உயரமாக எழுந்ததால் தடுமாறி ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து 70 ரன்களில் ஆட்டமிழந்தார். 

முதல்நாள் தேநீர் இடைவேளையின்போது ஆஸ்திரேலிய அணி 53 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள்  எடுத்தது. ஷான் மார்ஷ் 8, ஹேண்ட்ஸ்காம்ப் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணிக்கு உடனடியாக ஒரு விக்கெட் கிடைத்தது. 16 பந்துகளில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கோலியின் அற்புதமான கேட்சினால் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஹேண்ட்ஸ்காம்ப். தலைக்கு மேலே சென்ற பந்தை எம்பிப் பிடித்து அசத்தினார் கோலி. ஆஸி. அணி 148 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்கிற நிலையில் ஷான் மார்ஷும் ஹெட்டும் நன்கு விளையாடி அடுத்த 22 ஓவர்களுக்கு மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். எனினும் 98 பந்துகளில் 45 ரன்கள் எடுத்த ஷான் மார்ஷ், எதிர்பாராதவிதமாக விஹாரி பந்துவீச்சில் ஸ்லிப் பக்கம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 80 ஓவருக்குப் பிறகு இந்திய அணிக்குப் புதிய பந்து கிடைத்தது. அதற்கும் உடனடியாகப் பலன் கிடைத்தது. அரை சதமெடுத்த ஹெட் 58 ரன்களில் தவறான ஷாட்டால் ஷமியிடம் கேட்ச் கொடுத்து இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

முதல் நாளன்று ஆஸ்திரேலிய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. டிம் பெயின் 16, கம்மின்ஸ் 11 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

இந்தியத் தரப்பில் விஹாரி, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் பூம்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com