அரையிறுதியில் பெல்ஜியம், நெதர்லாந்து

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்டவை தகுதி பெற்றுள்ளன.
அரையிறுதியில் பெல்ஜியம், நெதர்லாந்து

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியின் அரையிறுதிக்கு பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்டவை தகுதி பெற்றுள்ளன. வலுவான ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பெல்ஜியம். அதே நேரத்தில் நெதர்லாந்து 2-1 என இந்தியாவை வீழ்த்தியது.

கடந்த நவ. 28-ஆம் தேதி புவனேசுவரத்தில் தொடங்கிய 14-ஆவது உலகக் கோப்பை போட்டிகள் தற்போது முக்கியமான அரையிறுதி கட்டத்தை எட்டியுள்ளன. புதன்கிழமை நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் வென்று அரையிறுதிக்கு முன்னேறின.

வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு கலிங்கா மைதானத்தில் இந்திய-நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.

43 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் உலகக் கோப்பையை சொந்த மண்ணில் வெல்ல வேண்டும் என்ற துடிப்பில் இந்தியாவும்-4-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் நெதர்லாந்தும் களமிறங்கியதால் தொடக்கம் முதலே ஆட்டம் பரபரப்பாக காணப்பட்டது.

இரு அணி வீரர்களும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்த தலைப்பட்டனர். இந்தியாவின் தொடர் தாக்குதல் ஆட்டத்தின் பலனாக 12-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஹர்மன்ப்ரீத் சிங் அனுப்பிய பந்தை பிசகின்றி கோலாக்கினார் அக்ஷதீப் சிங்.  இதனால் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது. ஆனால் 15-ஆவது நிமிடத்திலேயே நெதர்லாந்து வீரர் தியரி பிரிங்க்மேன் தனது அணிக்கு முதல் கோலை அடித்தார்.

முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் முடிந்தது. 

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் முன்னிலை பெற இரு அணிகளும் போராடின. 50-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் நெதர்லாந்து வீரர் வேன் டெர் வீடன் இரண்டாவது கோலை அடித்தார். இதன் மூலம் 2-1 என அந்த அணி முன்னிலை பெற்றது.

கடைசி நிமிடங்களில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் இல்லாத நிலையில் இந்திய டிபன்டர்களே கோல் பகுதியை பாதுகாக்க நேர்ந்தது.

கடைசி கட்டத்தில் கேப்டன் மன்ப்ரீத் சிங், கோலடிக்க மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது, நெதர்லாந்து. வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இதனால் இந்தியாவின் சாம்பியன் கனவு தகர்ந்தது.

பெல்ஜியம் வெற்றி: முன்னதாக மாலை நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம்-ஜெர்மன் அணிகள் மோதின. முன்னாள் உலக சாம்பியன் ஜெர்மனி இழந்த பெருமையை மீட்டு விட வேண்டும் என்ற நோக்கிலும், ஒலிம்பிக் வெள்ளி வென்ற பெல்ஜிய அணி முதன்முறையாக உலகக் கோப்பையில் முத்திரை பதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடனும் மோதின.

இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர போராடியதால் பரபரப்பாக இருந்தது. எனினும் ஆட்டத்தின் முதல் கோலை 14-ஆவது நிமிடத்தில் ஜெர்மன் வீரர் கிராம்புஸ்ச் அனுப்பிய பாûஸ அற்புதமாக கோலாக்கினார் லைன்கோஜெல். 

இதனால் பெல்ஜிய வீரர்கள் தங்கள் ஆட்டத்தை தீவிரப்படுத்தினர். இதன் பலனாக 18-ஆவது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் கோலடித்தார் அலெக்சாண்டர் ஹென்ட்ரிக்ஸ். முதல் பாதி 1-1 என சமனில் முடிந்தது.

இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பெல்ஜிய அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஜெர்மனியின் தாக்குதல் முயற்சிகள் பலன் தரவில்லை. 50-ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் டாம் பூன் தனது அணியின் இரண்டாவது மற்றும் வெற்றி கோலை அடித்தார். இறுதியில் 2-1 என வென்ற பெல்ஜியம் வரும் சனிக்கிழமை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் மோதுகிறது.

பார்வையாளர்கள் சோகம்

15,000 பேர் அமரக்கூடிய கலிங்கா மைதானம் முழுவதும் இந்திய பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. இந்தியா வென்று அரையிறுதிக்கு முன்னேறும் என நம்பிக்கையுடன் காத்திருந்த அவர்கள் இந்தியா தோல்வியடைந்ததால் சோகத்துடன் வெளியேறினர்.

அரையிறுதி ஆட்டங்கள்

வெள்ளிக்கிழமை 14ஆம் தேதி ஓய்வு நாளாகும். சனிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி  ஆட்டங்களில் இங்கிலாந்து-பெல்ஜியம், ஆஸ்திரேலியா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com