ரஞ்சியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹார்திக் பாண்டியா: ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்குத் தேர்வாக வாய்ப்புண்டா?

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது... 
ரஞ்சியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹார்திக் பாண்டியா: ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்குத் தேர்வாக வாய்ப்புண்டா?

மும்பைக்கு எதிரான ரஞ்சி ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா.

மும்பை - பரோடா அணிகளுக்கு எதிரான ரஞ்சி ஆட்டம் மும்பையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பரோடா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக சில மாத காலமாக இந்திய அணியில் இடம்பெறாத ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, இந்த ஆட்டத்தில் இடம்பெற்றுள்ளார்.

புதிய பந்தை எடுத்துக்கொண்டு பந்துவீச ஆரம்பித்த பாண்டியா, முதல் நாளிலேயே முத்திரை பதித்தார். முதல் நாள் முடிவில் மும்பை அணி, 85.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 439 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் அந்த அணி இன்று 465 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். பார்கவ் பட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இரண்டு நாள்களில் 18.5 ஓவர்கள் வீசி தன் உடற்தகுதியை அவர் நிரூபித்துள்ளதால் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் அடுத்த இரு டெஸ்டுகளுக்கு பாண்டியா தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியாவும் அந்த நம்பிக்கையில் உள்ளார்.

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது. இடுப்பில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மைதானத்துக்கு ஸ்டெரச்சர் கொண்டு வரப்பட்டு பாண்டியா அழைத்துச் செல்லப்பட்டார். அக்காயம் காரணமாக ஆசியக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகிய பாண்டியா இதுவரை இந்திய அணிக்குத் தேர்வாகவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் தேர்வு செய்யப்படவுள்ளார். இந்நிலையில் டெஸ்ட் தொடரில் தான் விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் அதனால் தான் ரஞ்சி ஆட்டத்தில் கலந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்டுகளுக்கு பாண்டியா தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com