மனைவியையும் கிரிக்கெட் வாழ்வையும் மீட்டெடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர் கோனி!

என் மனைவி எனக்குத் திரும்பக் கிடைத்த பிறகுதான் குடும்பத்தைத் தவிர வேறெதுவும் முக்கியமில்லை...
மனைவியையும் கிரிக்கெட் வாழ்வையும் மீட்டெடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர் கோனி!


சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் மன்ப்ரீத் கோனியை மறக்கமுடியுமா? 2008 ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர். உடனடியாக, இந்தியாவுக்காக இரு ஒருநாள் ஆட்டங்களிலும் விளையாடினார். ஆனால் அந்த நிலையை அவரால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. 2008-ல் 16 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடிய கோனி அடுத்த வருடம் 7-ல் மட்டுமே விளையாடினார். இதுவரை மொத்தமாக 44 ஐபிஎல் ஆட்டங்களில் மட்டுமே விளையாடி நல்ல தொடக்கத்தால் கிடைத்த வாய்ப்புகளை வீணடித்தார். கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் சொந்த வாழ்க்கையிலும் நிறைய இறக்கங்களைச் சந்தித்தார். 

காதல் திருமணம் செய்துகொண்டதால் குடும்பத்தை விட்டு வெளியேறினார். 15 நாள்களே ஆன முதல் குழந்தையை இழந்தார். அடுத்ததாகத் திருமண வாழ்க்கையிலும் அவருக்குச் சோகம் ஏற்பட்டது. கருத்துவேறுபாடுகளால் 2013-ல் மனைவியைப் பிரிந்தார். இதனால் மகனையும் பிரிந்து வாழவேண்டிய சந்தர்ப்பம் உருவானது. இதையடுத்து விவகாரத்துக்கு விண்ணப்பித்தார். குடும்ப வாழ்க்கையில் தோல்வி ஏற்பட்டதால் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்தமுடியாமல் சில மாதங்கள் அமெரிக்காவுக்குச் சென்று வந்தார். 

ஆனால் எதையெல்லாம் இழந்தாரோ அவையெல்லாம் கோனிக்குத் திரும்பக் கிடைத்ததுதான் ஆச்சர்யம். 2016-ல் பிரிந்துபோன மனைவி மகனுடன் திரும்பவந்தார். இதனால் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் கோனி. ஐபிஎல், ரஞ்சி என முக்கியமான போட்டிகளில் விளையாடினார். மூன்று வருடங்கள் கழித்து கடந்த வருடம் ஐபிஎல்-லில் (குஜராத் அணி) இடம்பெற்றார். ஆனால் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினார்.

எனினும் காயம் காரணமாக கடந்த ஒருவருடமாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த 34 வயது கோனிக்கு மீண்டுமொரு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இந்தமுறை பஞ்சாப் அணியின் ரஞ்சி ஆட்டத்தில் இடம்பிடித்தார். மொஹலியில் நடைபெற்று வரும் ரஞ்சி ஆட்டத்தில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில், கோனி 5 விக்கெட்டுகளை எடுத்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.

என் மனைவி எனக்குத் திரும்பக் கிடைத்த பிறகுதான் குடும்பத்தைத் தவிர வேறெதுவும் முக்கியமில்லை என்பதை உணர்ந்தேன். என் மகன் ரன்வீருக்குத் தற்போது 9 வயது. கடந்த வருடம் எனக்கு ஜீவன் என்றொரு மகள் பிறந்தாள். இப்போது அவளுக்கு ஒரு வயது. தமிழக அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் எடுத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறுகிறார் கோனி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com