இன்று அரையிறுதி ஆட்டங்கள்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் சனிக்கிழமை இரு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
இன்று அரையிறுதி ஆட்டங்கள்

உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் சனிக்கிழமை இரு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெறுகின்றன. முதல் அரையிறுதியில் இங்கிலாந்து - பெல்ஜியம் அணிகளும், 2-ஆவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகளும் மோதுகின்றன. 
இதில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகளிடையேயான ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த இரு முறை தொடர்ந்து கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, தற்போது "ஹாட்ரிக்' முத்திரை பதிக்கும் முனைப்பில் உள்ளது.
உலகின் முதல்நிலை அணியாக இருந்தாலும், ஆஸ்திரேலியா எதிர்கொள்ள இருக்கும் நெதர்லாந்து சற்று சவால் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உலகின் 4-ஆம் நிலையில் இருக்கும் நெதர்லாந்து, இதுவரை 3 முறை சாம்பியனாகியுள்ளது. கடைசியாக 1988-ஆம் ஆண்டு சாம்பியனான நெதர்லாந்து, 20 ஆண்டுகால கோப்பை தாகத்தை தணிக்கும் உத்வேகத்துடன் இருக்கிறது. 
ஆஸ்திரேலியா தாக்குதல் ஆட்டத்தை பிரதானமாகக் கொண்டுள்ள நிலையில், தடுப்பு ஆட்டத்தையே முன்னிறுத்துகிறது நெதர்லாந்து. எனினும், திடீரென ஆக்ரோஷமாக தாக்குதல் தொடுக்கும் வியூகம் கொண்டுள்ளது. 2013-க்குப் பிறகு இரு அணிகளும் 11 முறை நேருக்கு நேர் மோதியதில், ஆஸ்திரேலியா 5, நெதர்லாந்து 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளன. இரு ஆட்டங்கள் டிரா ஆனது.
இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா முறையே அயர்லாந்து (2-1), இங்கிலாந்து (3-0), சீனா (11-0), பிரான்ஸ் (3-0) அணிகளுக்கு எதிராக தொடர் வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. மறுபுறம் நெதர்லாந்து அணி, மலேசியா (7-0), பாகிஸ்தான் (5-1), இந்தியா (2-1) அணிகளை வீழ்த்திய நிலையில், ஜெர்மனியிடம் மட்டும் 1-4 என வீழ்ந்தது.
இங்கிலாந்து-பெல்ஜியம்: இந்நிலையில், முதல் அரையிறுதியில் இங்கிலாந்து-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. உலகின் 3-ஆம் நிலையிலுள்ள பெல்ஜியம், முந்தைய ஆட்டங்களில் கனடா (2-1), தென்னாப்பிரிக்கா (5-1), பாகிஸ்தான் (5-0), ஜெர்மனியை (2-1) வீழ்த்தியுள்ளது. இந்தியாவுடனான ஆட்டத்தை டிரா (2-2) செய்தது. உலகின் 7-ஆம் நிலையிலுள்ள இங்கிலாந்து, அயர்லாந்து (4-2), நியூஸிலாந்து (2-0), ஆர்ஜென்டீனா (3-2) அணிகளுக்கு எதிராக வென்ற நிலையில், சீனாவுக்கு எதிரான ஆட்டத்தை டிரா (2-2) 
செய்துள்ளது.


அரையிறுதி

இங்கிலாந்து-பெல்ஜியம் மாலை 4 மணி
ஆஸ்திரேலியா- நெதர்லாந்து மாலை 6.30 மணி
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், டி.டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com