பெர்த் டெஸ்ட்: முதல் நாளில் ஆஸ்திரேலியா நிதானம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது.
பெர்த் டெஸ்ட்: முதல் நாளில் ஆஸ்திரேலியா நிதானம்

இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் முதலில் சற்று தடுமாறினாலும், பிறகு ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தினர். எனினும் ஆஸ்திரேலியா நிதானமாக ஆடி வருகிறது.
அந்த அணியில் மார்கஸ் ஹாரிஸ் - ஆரோன் ஃபிஞ்ச் இணை அருமையான தொடக்கத்தை ஏற்படுத்த, இந்தியத் தரப்பில் இஷாந்த் சர்மா, ஹனுமா விஹாரி சிறப்பாக பந்துவீசினர்.
இந்த ஆட்டத்தில் இந்தியா பிளேயிங் லெவனில் மாற்றம் செய்திருந்தது. காயமடைந்த ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஹனுமா விஹாரியும், ரவிச்சந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக உமேஷ் யாதவும் களமிறக்கப்பட்டனர். ஆஸ்திரேலிய லெவனில் மாற்றம் செய்யப்படவில்லை.
பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பேட் செய்யத் தீர்மானித்தது. தொடக்க வீரர்களில் ஒருவரான மார்கஸ் ஹாரிஸ், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு அரைசதம் கண்டார். இது, சர்வதேச டெஸ்டில் அவரது முதல் அரைசதமாகும்.
மறுமுனையில் ஆரோன் ஃபிஞ்சும் அரைசதம் அடித்திருந்த நிலையில், வலுவான இந்த கூட்டணியை பிரித்தார் ஜஸ்பிரீத் பும்ரா. அவர் வீசிய 36-ஆவது ஓவரில் ஃபிஞ்ச் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். மார்கஸ்-ஃபிஞ்ச் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்திருந்தது.
அடுத்து வந்த உஸ்மான் கவாஜா 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். உமேஷ் யாதவ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்தார் கவாஜா. அவரைத் தொடர்ந்து ஷான் மார்ஷ் களம் காண, மறுமுனையில் 10 பவுண்டரிகளுடன் 70 ரன்களை எட்டியிருந்த மார்கஸ் ஹாரிஸ் விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா.
ஹனுமா விஹாரி வீசிய 49-ஆவது ஓவரில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஹாரிஸ். பின்னர் வந்த பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 7 ரன்களுக்கு வெளியேறினார். இஷாந்த் சர்மா வீசிய 55-ஆவது ஓவரில் அவரடித்த பந்தை ஸ்லிப்பில் நின்ற கோலி ஒரு கையால் கேட்ச் பிடித்தார்.
தொடர்ந்து ஷான் மார்ஷ் 45 ரன்களுக்கு வெளியேறினார். 69-ஆவது ஓவரில் 200 ரன்களை எட்டியது ஆஸ்திரேலியா. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து 6 பவுண்டரிகள் உள்பட 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் டிம் பெய்ன் 16, பேட்ரிக் கம்மின்ஸ் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் இஷாந்த், விஹாரி தலா 2, பும்ரா, உமேஷ் தலா ஒரு விக்கெட் சாய்த்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com