கோலியின் மனநிலையில் மாற்றம்: ரஹானே 4-வதாகக் களமிறங்குவார் என அறிவிப்பு!

இதற்கு முன்பு மூன்றாவது தொடக்க வீரராக ரஹானே கருதப்படுவார் எனக் கூறியிருந்தேன்...
கோலியின் மனநிலையில் மாற்றம்: ரஹானே 4-வதாகக் களமிறங்குவார் என அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரஹானே 4-வதாகக் களமிறங்குவார் என்று கேப்டன் கோலி கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றாத இந்தியா, சமீபத்தில் நிறைவடைந்த டெஸ்ட் தொடரையும் 2-1 என இழந்தது. ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதே கனவு தொடரும் நிலையில், இந்தத் தொடர் முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்காவில் இதுவரை ஆடிய 28 ஒருநாள் ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா 21 வெற்றிகளையும், இந்தியா 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எனினும், கடந்த 2016 ஜனவரிக்குப் பிறகு உள்நாடு மற்றும் வெளிநாட்டிலுமாக அனைத்து ஒருநாள் தொடர்களிலும் இந்தியா தோல்வியே காணாதது அணிக்கான பலம்.

தொடர் வெற்றிக் கனவு ஒருபுறம் இருக்க, ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பெறுவதற்கான வாய்ப்பும் இந்தத் தொடரின் மூலம் இந்தியாவுக்கு உள்ளது. 6 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரை 4-2 என இந்தியா வென்றால், முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்காவை பின்னுக்குத்தள்ளி, இந்திய முதல் அணியாக மாறும். டர்பனின் கிங்ஸ்மீட் மைதானத்தில் இதுவரை 7 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதியுள்ள இந்தியா, ஒரு வெற்றியை கூட சுவைத்ததில்லை. 6 ஆட்டங்களில் தோற்ற நிலையில், ஒரு ஆட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை. 

இந்நிலையில் ஒருநாள் போட்டியில் ரஹானேவைத் தொடக்க வீரராக மட்டுமே கருதமுடியும் என்று சமீபகாலமாகச் சொல்லிவந்த கேப்டன் கோலி தன் முடிவை மாற்றியுள்ளார். தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் ரஹானே, 4-வதாகக் களமிறங்க வாய்ப்புண்டு என்று கருத்து தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்திய ஒருநாள் அணியில் ரஹானேவுக்கு மீண்டும் நிரந்தரம் இடம் கிடைக்கவுள்ளது. இதுகுறித்து கோலி கூறியதாவது:

இதற்கு முன்பு மூன்றாவது தொடக்க வீரராக ரஹானே கருதப்படுவார் எனக் கூறியிருந்தேன். இந்தச் சூழல் மாறலாம். ஏனெனில் உலகக் கோப்பைப் போட்டியில் ஏற்கெனவே 4-வதாக ரஹானே ஆடியுள்ளார். தென் ஆப்பிரிக்கச் சூழலில் இன்னிங்ஸ் முழுக்க வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். எனவே 4-வதாகக் களமிறங்க அவர் முதன்மைத் தேர்வாக இருப்பார். அதன்பிறகு ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கெதர் ஜாதவ் ஆகியோரில் ஒருவர் 5-வதாக களமிறங்கலாம். அதன்பிறகு பாண்டியாவும் தோனியும் களமிறங்குவார்கள். குறிப்பிட்ட அந்த ஓர் இடத்தை யார் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியமானது. அதற்கு முன்பும் அதற்குப் பிறகும் பிரச்னையில்லை. பின்வரிசை வீரர்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டார்கள். பாண்டியா, ஜாதவ், தோனி ஆகியோர் மாறி மாறியும் ஒன்றாகவும் ஆடிவருகிறார்கள். 4-வதாகக் களமிறங்கும் வீரர் குறித்துதான் பலவிதங்களில் பரிசோதனை செய்துவருகிறோம்.  அந்த ஓர் இடம்தான் முடிவு செய்யப்படாமல் உள்ளது. மற்றபடி அணியில் மாற்றம் செய்வதற்கு ஒன்றுமில்லை என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com