'எ செஞ்சுரி ஈஸ் நாட் இனஃப்'- புத்தகம் வெளியிடும் சௌரவ் கங்குலி

தனது கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட அனைத்து சம்பவங்களையும் தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறார் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி.
'எ செஞ்சுரி ஈஸ் நாட் இனஃப்'- புத்தகம் வெளியிடும் சௌரவ் கங்குலி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, விரைவில் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த முக்கிய சம்பவங்களை தொகுத்து புத்தகமாக வெளியிட உள்ளார்.

சௌரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டதில் தொடர்ந்து கிரேக் சாப்பலை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமித்தது வரை பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்தவர்.

இந்திய அணியின் கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் ஜொலிக்காத போது அணியும் பெரும் சரிவில் இருந்த தருணத்தில் கேப்டன் பதவியை ஏற்றுக்கொண்டவர். இருப்பினும் அந்நிய மண்ணில் நடைபெற்ற தொடர்களில் இந்திய அணி இவரது தலைமையின் கீழ் பிரகாசிக்கத் தொடங்கியது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் கும்ப்ளேவை சேர்ப்பதற்கு தேர்வுக்குழுவினர் மறுப்பு தெரிவித்த போது, அந்த தொடரில் கும்ப்ளே சரியாக விளையாடவில்லை என்றால் தான் கிரிக்கெட்டை விட்டு விலகுவதாக சவால் விடுத்தார். பின்னர் இந்திய அணியில் இடம்பிடித்த கும்ப்ளே சிறப்பாகவும் செயல்பட்டார். இதனால் தனது அணியின் மீதான நம்பிக்கையை கங்குலி நிரூபித்தார். 

2003-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை வழிநடத்தியவர். பின்னர் 2005-06 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கிரேக் சாப்பலை இந்திய பயிற்சியாளராக நியமிக்க கோரிக்கை வைத்தார். பின்னாளில் கங்குலி இந்திய அணியில் இருந்து சாப்பலால் நீக்கப்பட்டார்.

இந்த புத்தகம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் சௌரவ் கங்குலி பேசியதாவது:

தற்சமயம் வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்று கொண்டிருக்கிறது. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு முதன்முறையாக இந்திய அணிக்காக களமிறங்கினேன். தற்போது அதே இந்திய அணிக்கு பயிற்சியாளரை நியமிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளேன். துரதிருஷ்டவசமாக கடந்த 2005-06 காலகட்டத்தில் சரிவும் ஏற்பட்டது. இதுவரை இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருப்பது குறித்து யோசித்தது இல்லை. அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் சரியான முடிவை எடுப்பேன். எனது கிரிக்கெட் வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களை மையப்படுத்தி 'எ செஞ்சுரி ஈஸ் நாட் இனஃப்' என்ற புத்தகத்தை வெளியிடுகிறேன். இதற்கு எனக்கு உறுதுணையாக இருந்த எழுத்தாளர் கௌதம் பட்டாச்சார்யா மற்றும் ஜக்கர்னாட் பதிப்பகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புத்தகத்தில் எந்த ஒளிவு, மறைவும் இல்லாமல் அனைத்து உண்மையும் இடம்பெறும். இந்த புத்தகம் என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் அனுபவமே தவிர இது எனது சுயசரிதை இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com