வோஸ்னியாக்கியின் வெற்றிக்கான தாரக மந்திரம்...

2012 ஆஸ்திரேலிய ஓபன். இந்த முறையாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் பங்கேற்றார் டென்மார்க் தேசத்தின் டென்னிஸ் தேவதையும், அப்போதைய உலகின் முதல் நிலை வீராங்கனையுமான
வோஸ்னியாக்கியின் வெற்றிக்கான தாரக மந்திரம்...

2012 ஆஸ்திரேலிய ஓபன். இந்த முறையாவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் பங்கேற்றார் டென்மார்க் தேசத்தின் டென்னிஸ் தேவதையும், அப்போதைய உலகின் முதல் நிலை வீராங்கனையுமான கரோலின் வோஸ்னியாக்கி.
காலிறுதி வரை முன்னேறிய அவர், பெல்ஜியத்தின் கிம் கிளிஜ்ஸ்டர்ஸிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். அத்துடன், நம்பர் 1 அந்தஸ்தையும் இழந்தார்.
'ஒரு கிராண்ட்ஸ்லாம் கூட வெல்லாத வோஸ்னியாக்கி, தரவரிசையில் முதலிடம் வகிக்க என்ன தகுதி இருக்கிறது?' என்று ஏற்கெனவே அவருக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், இந்தத் தோல்வி அவரை சற்று துவளச் செய்தது.
செய்தியாளர்கள் சந்திப்பில், 'இந்தத் தோல்வி குறித்தும், நம்பர் 1 அந்தஸ்தை இழந்தது குறித்தும் எந்தக் கவலையும் இல்லை. தரவரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு வருவேன். எனது டென்னிஸ் பயணம் இத்துடன் முடிந்துவிட்டதாக சிலர் பேசுகின்றனர். என் முன்னால் இன்னும் சிறப்பான ஆண்டுகள் காத்திருக்கின்றன' என்று கூறிவிட்டு சென்றார்.
காலங்கள் கடந்து, இந்த ஆண்டு (2018) அதே ஆஸ்திரேலிய ஓபன் சிறப்பாகத் தொடங்கியது. நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இருமுறை ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியனான பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா உள்ளிட்ட வீராங்கனைகள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் போட்டியிலிருந்து விலகினர். எனினும், ஊக்கமருத்து குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட தடைக் காலம் முடிவடைந்த முன்னாள் சாம்பியனான ரஷியாவின் மரியா ஷரபோவா பங்கேற்றார்.
'நம்பர் 1' இடத்தில் இருந்த ருமேனியாவின் சைமோனா ஹேலப், ஸ்பெயினின் கார்பைன் முகுருசா ஆகியோரோடு, வோஸ்னியாக்கியும் களம் கண்டார்.
யார் ஜெயிப்பார்கள்? என்ற எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே தொற்றிக் கொண்டது. தடைகளை தகர்த்து, இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி. எதிர்பார்த்தது போல நம்பர் 1 நாயகியான சைமோனாவும் அந்தச் சுற்றுக்கு வந்தார். இருவருமே இதுவரை ஒரு கிராண்ட்ஸ்லாம்கூட வென்றதில்லை.
வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதி ஆட்டத்தில், சைமோனாவை சாய்ப்பது வோஸ்னியாக்கிக்கு அவ்வளவு சாதாரணமாக இருக்கவில்லை. இருப்பினும், ஆற்றல் அனைத்தையும் திரட்டி ஆக்ரோஷமாக ஆடி வாகை சூடி வரலாறு படைத்தார் இக்கட்டுரையின் கதாநாயகியான வோஸ்னியாக்கி. ரசிகர்கள் ஆரவாரத்தில் அரங்கம் அதிர்ந்தது.
வோஸ்னியாக்கியின் பயிற்சியாளரும், அவரது தந்தையுமான பியோட்டரும் சாதனை மகளின் சாட்சியாக அரங்கில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்திருந்தார். இந்த தருணத்தில், வாகை சூடிய வோஸ்னியாக்கியின் வரலாற்றை சற்று திரும்பிப் பார்ப்போம். 
இளமைக் காலம்: வோஸ்னியாக்கி, டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் 1990-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பிறந்தார். தந்தை பியோட்டர் கால்பந்து வீரர். தாயார் கைப்பந்து வீராங்கனை. போலந்து நாட்டைச் சேர்ந்த இருவரும், பின்னர், டென்மார்க்குக்கு குடிபெயர்ந்தனர். சகோதரர் பாட்ரிக், டென்மார்க் கால்பந்து அணியின் முன்னாள் வீரர். குடும்பத்தில் அனைவரும் விளையாட்டுத் துறையில் இருந்ததால், வோஸ்னியாக்கிக்கு இயல்பாகவே விளையாட்டின் மீது ஆர்வம் பிறந்தது.
ஏழு வயதில் டென்னிஸ் மட்டையைக் கையில் எடுத்தார். டென்னிஸ் மீது கட்டுக்கடங்காத காதல் பிறந்தது. ஆட்ட நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்து அவரது தந்தை ஊக்கப்படுத்தினார். குருவை மிஞ்சிய சிஷ்யையாக 9-ஆவது வயதில் உருவெடுத்தார் வோஸ்னியாக்கி. அந்த வயதிலேயே அவரது பெற்றோரையும், உடன் பிறந்தவரையும் டென்னிஸில் வீழ்த்தியிருந்தார். பின்னர், முறையாக பயிற்சி பெறத் தொடங்கினார்.
அந்த வயதிலேயே அவர் கடுமையான பயிற்சிகள் மேற்கொள்வதை கண்ட தந்தை பியோட்டர், மகள் 'நம்பர் 1' டென்னிஸ் வீராங்கனையாக உருவெடுக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை என நினைத்துக் கொண்டார். சர்வதேச மகளிர் டென்னிஸ் சங்கம் (டபிள்யூடிஏ) சார்பில் ஜூனியர் பிரிவில் நடத்தப்பட்ட போட்டிகளில் 15-ஆவது வயதில் பங்கெடுக்கத் தொடங்கினார் வோஸ்னியாக்கி.
அதற்கு அடுத்த ஆண்டே ஆஸ்திரேலியன் ஓபன் ஜூனியர் பிரிவில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார். பிரெஞ்ச் ஓபன் ஜூனியர் இரட்டையர் பிரிவிலும் இறுதிச் சுற்று வரை முன்னேறினார். இறுதியில், விம்பிள்டன் ஜூனியர் ஒற்றையர் பிரிவில் சாம்பியனாகி தனது திறமையை நிரூபித்தார்.
அந்த 2006-ஆம் ஆண்டு, தான் ஒரு தொழில்முறை வீராங்கனை என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பும் வோஸ்னியாக்கிக்கு அமைந்தது. 17 வயதில் சர்வதேச தரவரிசையில் 64-ஆவது இடம்பிடித்த வோஸ்னியாக்கி, 2008-இல் 12-ஆவது இடத்துக்கு முன்னேறி அசுர வளர்ச்சி அடைந்திருந்தார். அடுத்ததாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு இலக்கு நிர்ணயித்த வோஸ்னியாக்கி, அதற்காக தீவிர பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2009 விம்பிள்டனில் 4-ஆவது சுற்று வரையும், அதே ஆண்டு அமெரிக்க ஓபனில் இறுதிச்சுற்று வரையும் முன்னேறினார். ஆனால், கிராண்ட்ஸ்லாம் கனவு, கனவாகவே நீடித்தது. அதே நேரம், தரவரிசையில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறி 'டாப் 5' வீராங்கனைகள் வரிசையில் இடம்பிடித்தார்.
நம்பர் 1: 2010-ஆம் ஆண்டில் டபிள்யூடிஏ போட்டிகளில் 6 பட்டங்களை வென்று ஆண்டின் இறுதியில் தரவரிசையில் முதல் முறையாக முதலிடத்துக்கு வந்தார் வோஸ்னியாக்கி. முதலிடம் என்பது டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் லட்சியங்களில் ஒன்றாயிற்றே. அந்த இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் 67 வாரங்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார் வோஸ்னியாக்கி.
பிறகு வெற்றி-தோல்விகளை கலந்து சந்தித்து வந்த நிலையில், 2012-13 காலகட்டத்தில் சரிவைச் சந்தித்தார். கிராண்ட்ஸ்லாம் கனவும் தள்ளிப்போனது. ஆனாலும் சோர்ந்து போகாத வோஸ்னியாக்கி, தனது பெற்றோர் கூறிய வெற்றிக்கான தாரக மந்திரத்தை தன்னுள் கூறிக்கொண்டார். தீவிர பயிற்சி செய்தார். கிராண்ட்ஸ்லாமை வென்றே தீர வேண்டும் என்ற வைராக்கியம் மனதில் கனன்று கொண்டிருந்தது. 
2014-ஆம் ஆண்டு முதல் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பினார். டென்னிஸ் உலகம் அவரை உற்று நோக்க ஆரம்பித்தது. அந்த ஆண்டு விம்பிள்டனில் 4-ஆவது சுற்று வரை சென்றதுடன், அமெரிக்க ஓபனில் மீண்டும் இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.
ஓய்வு நேரங்களில் புது மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஃபேஷன் ஷோக்களில் ஆர்வம் காட்டினார். நடிகையாகவும் உருவெடுத்தார். ஆனால், டென்னிஸில் இருந்து மட்டும் அவர் கவனம் சிதறவில்லை. ஆண்டுகள் உருண்டோடின. முன்னணி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்கும் டபிள்யூடிஏ ஃபைனலில் 2017-ஆம் ஆண்டில் சாம்பியன் ஆனார். ஆண்டின் முடிவில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
2018 தனக்கான ஆண்டு என்று முடிவு செய்தார். கிராண்ட்ஸ்லாம் வென்றே ஆக வேண்டும் என்ற உறுதியுடன் ஆஸ்திரேலியன் ஓபனில் பங்கேற்றார்.
இறுதிச்சுற்றில், ஹேலப்பை போராடி வென்றார். முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் வென்ற டென்மார்க் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். நீண்டகால கனவு நிறைவேறியதுடன், மீண்டும் 'நம்பர் 1' இடத்துக்கு வந்துவிட்டார். கண்களின் ஓரம் கண்ணீர்த் துளி எட்டிப் பார்த்தது. பின்னர், இதழோரம் புன்னகை படர ஆரம்பித்தது. கோப்பைக்கு முத்தமிட்டார். 'கனவு நிறைவேறிவிட்டது' என்று தெரிவித்தார். ரசிகர்கள் கைதட்ட அரங்கம் அதிர்ந்தது.
'உன் மீது நம்பிக்கை கொள்'- வோஸ்னியாக்கியின் பெற்றோர் கூறிய தாரக மந்திரம் இதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com