தென் கொரியாவில் ஒளிரப்போகும் அமைதிக்கான ஜோதி...

முதல் முறையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது தென் கொரியா. அந்நாட்டின் பியோங்சாங் நகரில் இப்போட்டியை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) அனுமதி அளித்துள்ளது.
தென் கொரியாவில் ஒளிரப்போகும் அமைதிக்கான ஜோதி...

முதல் முறையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது தென் கொரியா. அந்நாட்டின் பியோங்சாங் நகரில் இப்போட்டியை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) அனுமதி அளித்துள்ளது. இதற்காக ஐஓசி நடத்திய வாக்கெடுப்பில் பிரான்ஸ், ஜெர்மனி நாடுகளுடன் தென் கொரியாவும் பங்கேற்றது. 63 வாக்குகளைப் பெற்ற தென் கொரியா இரண்டாவது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பைப் பெற்றது. முன்னதாக, தலைநகர் சியோலில் கடந்த 1988-ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டியை தென் கொரியா நடத்தியுள்ளது.
கடந்த 2010, 2014-ஆம் ஆண்டுகளிலும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த முயற்சித்த தென் கொரியா, இறுதிச்சுற்று வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகளைப் பெற்று அந்த வாய்ப்பை இழந்திருந்தது.
23-ஆவது குளிர்கால ஒலிம்பிக்: இந்நிலையில், இந்த 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை அந்நாடு பெற்றுள்ளது. முதல் குளிர்கால ஒலிம்பிக் பிரான்ஸின் சமோனிக்ஸ் நகரில் கடந்த 1924-ஆம் ஆண்டு நடைபெற்றது. (நவீன ஒலிம்பிக் 1896-ஆம் ஆண்டு கிரீஸின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது).
இந்த பியோங்சாங் ஒலிம்பிக்கில் மொத்தம் 92 நாடுகளும், 2,952 வீரர்/வீராங்கனைகளும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் போட்டிகள் தொடங்கினாலும், தொடக்க விழா நிகழ்ச்சிகள் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. 25-ஆம் தேதி நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒலிம்பிக் கிராமம்: பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்குவதற்காக சகல வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமங்கள் பியோங்சாங்கிலும், கங்நியாங்கிலும் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அதிவேக ரயில்: ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள பியோங்சாங், தலைநகர் சியோலில் இருந்து 125 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்தப் போட்டிக்காகவே சியோல் - பியோங்சாங் இடையே அதிவேக ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சியோலில் இருந்து 90 நிமிடங்களில் பியாங்சாங் நகரை வந்தடையலாம்.
சின்னம்: ஒலிம்பிக் போட்டிக்கான சின்னமாக வெள்ளைப் புலியை தென்கொரியா அறிவித்துள்ளது. வெள்ளைப் புலி, அந்நாட்டு புராணக் கதைகளிலும், கலாசாரத்திலும் நெருங்கிய தொடர்புடையதாகும்.
ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பு, கிரீஸின் ஒலிம்பியா நகரில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு பல நாடுகளைக் கடந்து, போட்டியை நடத்தும் தேசத்துக்கு வந்து சேரும். அதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் 24-ஆம் தேதி ஏற்றப்பட்ட ஒலிம்பிக் ஜோதி, போட்டியை நடத்தும் தென் கொரியாவின் மக்கள் தொகையை (7.5 கோடி பேர்) பிரதிபலிக்கும் வகையில் 7,500 பேரின் கைகளுக்குச் சென்று, பிறகு ஒலிம்பிக் மைதானத்துக்கு வந்து சேருகிறது.
புதிதாக 6 நாடுகள்: இந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஈகுவடார், எரித்ரியா, கொசோவா, நைஜீரியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய 6 நாடுகள் முதல் முறையாகப் பங்கேற்க உள்ளன.
விளையாட்டுப் போட்டிகள்: ஆல்பைன் ஸ்கீயிங், பைத்லான் (கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங், ரைஃபிள் துப்பாக்கி சுடுதல்), பாப்ஸ்லிக், கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங், கர்லிங், ஃபிகர் ஸ்கேட்டிங், பிரீ ஸ்டைல் ஸ்கீயிங், ஐஸ் ஹாக்கி, லூஜ், நார்டிக் கம்பைன்ட், ஷார்ட் டிராக் ஸ்பீடு ஸ்கேட்டிங், ஸ்கெலட்டான், ஸ்கை ஜம்பிங், ஸ்னோ போர்டு, ஸ்பீடு ஸ்கேட்டிங் ஆகிய 15 விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன.
ரஷியாவுக்குத் தடை: ரஷியாவின் சோச்சி நகரில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அரசு அமைப்புகளின் ஆதரவுடன் அந்நாட்டு வீரர்கள் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, 2017 டிசம்பர் 5-ஆம் தேதி, தென் கொரிய ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷியாவுக்குத் தடை விதிக்கப்பட்டது.
எனினும், இதற்கு முன்பு ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்காத ரஷிய வீரர்/வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியின் கீழ் போட்டிகளில் பங்கேற்க ஐஓசி அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, 169 ரஷிய வீரர்கள் இந்த ஒலிம்பிக்ஸில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். சோச்சியில் பங்கேற்க தகுதிபெற்ற வீரர்களின் எண்ணிக்கையைவிட இது குறைவுதான்.
இந்தியா பங்கேற்பு: இந்தியாவின் சார்பில் பனிச்சறுக்கில் ஒரு வகையான லூக் விளையாட்டு வீரர் ஷிவா கேசவனும், கிராஸ் கன்ட்ரி ஸ்கீயிங் வீரர் ஜெகதீஷ் சிங்கும் பங்கேற்கின்றனர். இதில் ஷிவா, 6-ஆவது முறையாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார்.
பனிப்போரை தணிக்கும் பனிக்கால ஒலிம்பிக்?: இந்த ஒலிம்பிக்கில் குறிப்பிடத்தக்க ஒன்று, வடகொரியா இப்போட்டியில் பங்கேற்பது. இரண்டாம் உலகப் போருக்குப்பிறகு தென் கொரியாவும், வடகொரியாவும் இரண்டாகப் பிரிந்து பங்காளி சண்டை போட்டு வருகின்றன.
இச்சூழலில் பதற்றம் தணிக்கும் வகையில் வகையில் இந்த பனிக்கால ஒலிம்பிக்கில் வடகொரியா விருப்பத்துடன் பங்கேற்கிறது. அத்துடன், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கொடியின் கீழ் இரு தேச வீரர்களும் ஒன்றாக அணிவகுக்க உள்ளனர்.
முதல்முறையாக...: இவற்றுக்கெல்லாம் சிறப்பாக, மகளிருக்கான ஐஸ் ஹாக்கியில் மட்டும் தென் கொரிய, வட கொரிய வீராங்கனைகள் இணைந்து 'கொரியா' என்ற பெயரில் ஒரே அணியாக முதல் முறையாக விளையாடவுள்ளனர்.
எனினும், இதர போட்டிகளில் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தனித்தனியாகவே பங்கேற்க உள்ளனர்.
இதற்கு முன்பு, 2000-இல் சிட்னி கோடைகால ஒலிம்பிக், 2004-இல் ஏதென்ஸ் கோடைகால ஒலிம்பிக், 2006-இல் துரின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் ஒரே கொடியின் கீழ் பங்கேற்றிருந்தனர்.
2008-இல் பெய்ஜிங் கோடைகால ஒலிம்பிக் போட்டியில் மட்டும் இந்தக் கொடி பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவை அமெரிக்கா ஆதரித்து வருவதும், வடகொரியாவுக்கு சீனா துணை நிற்பதும் உலகம் அறிந்த செய்தி. இருப்பினும், இரண்டாகப் பிளவுபட்டு நிற்கும் கொரியா, ஒரே நாடாக வேண்டும் என்பது அந்நாடுகளில் வசிக்கும் பெரும்பாலானவர்களின் விருப்பமாக உள்ளது.
ஐஸ் ஹாக்கி மகளிர் அணியில் இரு கொரிய நாட்டு வீராங்கனைகளும் ஒன்று சேர்ந்து விளையாட உள்ளதை அமைதியையும், ஒற்றுமையையும் விரும்பும் அனைவரும் வரவேற்கின்றனர். இந்த பியோங்சாங் பனிக்கால ஒலிம்பிக், இருநாடுகளிடையே நிலவும் பதற்றத்தை சற்று தணிக்கும் பாலமாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com