ரன் குவிப்பாரா ரோஹித் ஷர்மா? நாளை 5-ஆவது ஒருநாள்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-ஆவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. 
ரன் குவிப்பாரா ரோஹித் ஷர்மா? நாளை 5-ஆவது ஒருநாள்

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5-ஆவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபத்தின் செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் செவ்வாய்கிழமை நடைபெறுகிறது. 

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதுவரை 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடரில் முதல் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு 4-ஆவது பிங்க் ஓடிஐ-யில் த்ரில் வெற்றிபெற்று தடை போட்டது தென் ஆப்பிரிக்கா.

இதையடுத்து 5-ஆவது போட்டியில் வெற்றிபெற்று முதன்முறையாக தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி பயிற்சிபெற்று வருகிறது. அதுபோல அடுத்த 2 போட்டியிலும் வென்று தொடரை சமன் செய்ய தென் ஆப்பிரிக்க அணி ஆர்வம் காட்டுகிறது.

இந்திய அணியின் பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலி மற்றும் துவக்க வீரர் ஷிகர் தவன் சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் பெரும்பாலான ரன்களைக் குவித்து வருகின்றனர். இந்திய அணியின் பேட்டிங் பெரும்பாலும் இவர்கள் இருவரை மட்டுமே நம்பியுள்ளது. ஆனால், இந்த தொடர் முழுவதுமே மற்றொரு துவக்க வீரரான ரோஹித் ஷர்மா தொடர்ச்சியாக ஏமாற்றத்தை அளித்து வருகிறார். 

இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் முறையே 20, 15, 0 மற்றும் 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ரபாடா பந்துவீச்சில் திணறி தனது விக்கெட்டுகளை பறிகொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் 3 முறை இரட்டைச் சதம் கண்டுள்ள ரோஹித், 5-ஆவது போட்டியிலாவது ரன்குவிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.

அதேசமயம் அவருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வியும் கிரிக்கெட் வட்டாரத்தில் எழுந்துள்ளது. நடுவரிசையிலும் ரஹானேவின் ஆட்டமும் ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்கிறது. ஹார்த்திக் பாண்டியாவின் பங்களிப்பும் பெரிய அளவில் இல்லை. முக்கிய கட்டத்தில் தோனியின் பங்களிப்பு குறிப்பிடும் வகையில் மட்டுமே அமைகிறது. 

பந்துவீச்சில் முதல் 3 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட குல்தீப், சாஹல் ஜோடிக்கு 4-ஆவது போட்டியில் சிறிய சரிவு ஏற்பட்டது. ஆனாலும் 5-ஆவது ஒருநாள் நடைபெறும் ஆட்டம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இவர்கள் மீண்டும் மிரட்டத் துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புவனேஸ்வர் குமார், பும்ரா ஜோடியின் பந்துவீச்சும் நன்றாகவே அமைந்துள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் திரும்பியுள்ளது அந்த அணியின் இளம் வீரர்களுக்கு புதிய வேகத்தையும், நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர்கள் இந்த போட்டியிலும் கடும் சவால் அளிக்கும் விதமாகவே செயல்படுவார்கள். அந்த அணியின் பந்துவீச்சில் ரபாடா, மோரிஸ் போன்றோர் பலம் சேர்க்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com