ஆஸ்திரேலியாவுக்கு பயிற்சியளிக்க விருப்பம்: ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சியளிக்க விரும்புவதாக முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு பயிற்சியளிக்க விருப்பம்: ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய அணிக்கு 2 முறை 50 ஓவர் உலகக் கோப்பையை பெற்றுத்தந்த பெருமைக்குரிய கேப்டனாக திகழ்பவர் ரிக்கி பாண்டிங். தனது ஓய்வுக்கு பின்பு தற்போது டி20 வகை போட்டிகளில் பங்கேற்கும் அணிகளுக்குப் பயிற்சியளிப்பதில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

அவ்வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டுள்ளார். தற்போது நடைபெறும் 11-ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ஆலோசகராக செயல்படுகிறார்.

மேலும், தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேனுக்கு உதவி செய்து வருகிறார். 

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ள ரிக்கி பாண்டிங், அதுகுறித்து மேலும் கூறியதாவது:

50 ஓவர் போட்டிகளில் நடப்பு சாம்பியனாக உள்ள ஆஸ்திரேலிய அணி, டி20 போட்டிகளில் பெரிதாக ஜொலிப்பதில்லை. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என 3 வகைப் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா மிகச்சிறந்த அணியாக இருப்பதையே ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் விரும்புகிறது. அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது வரவேற்கத்தக்கது. 

இந்த நிலையில், ஆஸ்திரேலிய டி20 அணிக்கு நான் பயிற்சி அளிக்க விரும்புகிறேன். அதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டால் நான் நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். இதில் எனது விருப்பம், செயலாக்கம் மற்றும் நிலைப்பாடு குறித்து கிரிக்கெட் வாரியம் விருப்பப்பட்டால் தெரிவிப்பேன். 

ஆஸ்திரேலிய வீரர்கள் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர். அது வீண்போகக்கூடாது. டி20 வகை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து அதிரடியாக விளையாடி வெற்றிகளைக் குவித்து ஆளுமை செலுத்த வேண்டும் என்பதுதான் எனது நோக்கம்.

இதற்கான அணியை சரியாக உருவாக்கி அந்த உயரங்களை எட்ட வைத்து, வருகிற 2020 டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலிய அணிக்கு பெற வைப்பது நிச்சயம் பெரிய சவாலாக இருக்கும். அதுவே எனது தற்போதைய இலக்கும் கூட என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com