எனக்கு வாய்ப்பளிப்பதாக தோனி கூறியுள்ளார்: ரவீந்திர ஜடேஜா

வருகிற ஐபிஎல் போட்டிகளில் எனக்கு அதிக நேரம் பேட்டிங் செய்யும் விதமாக வாய்ப்பளிப்பதாக தோனி கூறியுள்ளார் என்று ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
எனக்கு வாய்ப்பளிப்பதாக தோனி கூறியுள்ளார்: ரவீந்திர ஜடேஜா

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக திகழ்பவர் ரவீந்திர ஜடேஜா. ஐசிசி தரவரிசையில் முதல் 2 இடங்களை தக்க வைத்து வருகிறார். இந்நிலையில், சமீபகால போட்டிகளில் இந்திய அணியில் இருந்து ஜடேஜாவுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹஸாரே தொடரும் ஜடேஜாவுக்கு எதிராகவே அமைந்துள்ளன. சௌராஷ்டிர அணிக்காக விளையாடி வரும் ஜடேஜாவின் பந்துவீச்சு 0/43, 0/59, 0/39, 0/16 என அமைந்துள்ளது. பிப்ரவரி 5-11 வரையிலான இந்த போட்டிகளின் போது அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் இந்திய அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி மற்றொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார்.

இருப்பினும் சௌராஷ்டிர அணி ஜார்கண்ட் அணியுடன் ஞாயிற்றுக்கிழமை மோதிய ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜா சதமடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இதனிடையே தனக்கு பேட்டிங்கில் வாய்ப்பளிப்பதாக தோனி கூறியுள்ளதாகவும் ஜடேஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

ஜார்கண்ட் அணிக்கு எதிராக 113 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் சௌராஷ்டிர அணிக்கு 330 ரன்கள் வெற்றி இலக்கை துரத்தி வெற்றிதேடித்தந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இந்த போட்டியின் போது பந்துவீசுகையில் எனக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும், மனஉறுதியுடன் பேட் செய்ய வந்தேன். அதற்கு தக்க பலன் கிடைத்தது. இது என்னுடைய தன்நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது. 

தற்போது எனது பந்துவீச்சில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் நன்றாகவே பந்துவீசி வருகிறேன். ஆனால் எனது பேட்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். கடைசிகட்ட அதிரடி வீரராக மட்டும் இருப்பதை நான் விரும்பவில்லை. இதுபோன்ற இன்னிங்ஸ்களை விளையாட விரும்புகிறேன். 

அடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் போது எனக்கு பேட்டிங்கில் வாய்ப்பளிப்பதாக தோனி கூறியுள்ளார். என்னிடம் ஒரு சிறந்த பேட்ஸ்மேனுக்கான தகுதி இருப்பதாகவும் அவர் கூறினார். தோனியின் வார்த்தை எனக்கு நம்பிக்கை அளித்துள்ளது. 

பந்துவீச்சு முறையிலும் சில மாற்றங்களை செய்துள்ளேன். அவற்றை தற்போது பரிசோதித்து வருகிறேன். பேட்ஸ்மேனின் தவறால் எனக்கு விக்கெட் கிடைப்பதில் எதுவும் இல்லை. ஆனால் கடும் நெருக்கடி கொடுத்து விக்கெட் வீழ்த்தவே விரும்புகிறேன் என்றார்.

முன்னதாக, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் கடந்த ஜூலை 6-ந் தேதி நடைபெற்ற போட்டியில் ரவீந்திர ஜடேஜா கடைசியாக பங்கேற்றார். உலகக் கோப்பைக்கு இன்னும் 16 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதற்கான திட்டத்தில் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் இருக்கிறார்கள் என்று சமீபத்தில் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். எனவே விரைவில் இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com