இந்திய ரசிகர் மீது தாஹிர் புகார்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 4-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தின்போது இந்திய ரசிகர் ஒருவர் இன ரீதியாக தன்னை திட்டியதாக தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான 4-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தின்போது இந்திய ரசிகர் ஒருவர் இன ரீதியாக தன்னை திட்டியதாக தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் இம்ரான் தாஹிர் புகார் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது. வான்டரர்ஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தாஹிர், தென் ஆப்பிரிக்காவின் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. அவர், அணி வீரர்களுக்கு உதவியாக செயல்பட்டபோது வார்த்தைகளால் விமர்சிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க அணி மேலாளர் முகமது மூசாஜீ கூறியதாவது:
தாஹிர் அளித்த தகவலின்படி, மைதானத்தையும், வீரர்களின் ஓய்வு அறையையும் இணைக்கும் பாதையில் அவர் சென்றுவந்தபோதெல்லாம் சம்பந்தப்பட்ட இந்திய ரசிகர் இனரீதியாக தாஹிரை விமர்சித்துள்ளார். இதையடுத்து தாஹிர் மைதான பாதுகாவலர்கள் இருவருடன் அவர் இருந்த இடத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வர பாதுகாவலர்கள் அந்த ரசிகரை மைதானத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர். அவர்களிடையே எந்தவொரு மோதலும் ஏற்படவில்லை.
மேலும், தாஹிரின் வாக்குமூலத்தை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று முகமது மூசாஜீ கூறினார்.
இதனிடையே, மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பாக எடுத்த விடியோ பதிவு சமூக வலைதளங்களில் உலவுவதாகத் தெரிகிறது. அதில் ரசிகர் குழு ஒன்றோடு தாஹிர் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போலவும், ரசிகர்களில் ஒருவர் 
இந்திய ஜெர்ஸியை அணிந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com