தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா: ரோஹித் அசத்தல் சதம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா: ரோஹித் அசத்தல் சதம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
அத்துடன், தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றி இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
6 ஒரு நாள் ஆட்டங்கள் கொண்ட இத்தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா விளையாடியது. 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.
போர்ட் எலிசபெத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. இதையடுத்து, முதலில் இந்தியா பேட் செய்தது.
ஷிகர் தவன், ரோஹித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தவன் 7.2-ஆவது ஓவரில் ரபாடா பந்துவீச்சில் பெலுக்வாயோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 34 ரன்கள் எடுத்து அரை சத வாய்ப்பை நழுவ விட்டார்.
இதையடுத்து, ரோஹித்துடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் விராட் கோலி. இவர்களது கூட்டணியைப் பிரிக்க எதிரணியினர் உக்திகளை வகுக்கத் தொடங்கினர். மறுபுறம், இந்தத் தொடரில் முந்தைய ஆட்டங்களில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டுவந்த ரோஹித் சர்மா, இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார். 18.1-ஆவது ஓவரில் அரை சதத்தைப் பதிவு செய்தார். அணியின் ஸ்கோரும் 3 இலக்கங்களைக் கடந்தது. இந்தச் சூழலில் 25.3-ஆவது ஓவரில் ரன் அவுட் ஆகி 36 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார் கோலி. அடுத்து களம் இறங்கிய ரஹானே 18 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்களுடன் வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். இதையடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர், ரோஹித்துக்குத் தோள் கொடுத்தார். 
17-ஆவது சதம்: 36-ஆவது ஓவரில் தனது ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 17-ஆவது சதத்தைப் பதிவு செய்தார் ரோஹித் சர்மா. இது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவர் பதிவு செய்யும் இரண்டாவது சதம் ஆகும்.
126 பந்துகளில் 115 ரன்கள் எடுத்திருந்தபோது எல்.கிடி வீசிய பந்தில் கிளாசென்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ரோஹித். ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா வந்த வேகத்தில் நடையைக் கட்ட, ஸ்ரேயஸ் ஐயரும் கிடி பந்து வீச்சில் கிளாசென்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் அப்போது 6 விக்கெட் இழப்புக்கு 238-ஐ எட்டியிருந்தது.
தோனி17 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தபோது கிடியின் வேகத்தில் சிக்கி மார்க்ரமிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார். புவனேஸ்வர் குமார் (20 பந்துகளில் 19 ரன்கள்), குல்தீப் யாதவ் (4 பந்துகளில் 2 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இவ்வாறு, 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களை இந்தியா குவித்தது. அதிகபட்சமாக, எல்.கிடி 9 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ரபாடா 9 ஓவர்கள் வீசி 58 ரன்களைக் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
தென் ஆப்பிரிக்கா 201: இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஹஸிம் ஆம்லாவும், கேப்டன் எய்டன் மார்க்ரமும் களம் இறங்கினர்.
9.4-ஆவது ஓவரில் இந்தக் கூட்டணியை பும்ரா பிரித்தார். 32 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்தபோது கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் மார்க்ரம். அடுத்து வந்த டுமினி, ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். அதைத் தொடர்ந்து, டிவில்லியர்ஸ் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஆம்லாவுடன் ஜோடி சேர்ந்தார் டேவிட் மில்லர். 51 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹல் ஓவரில் அவரும் ஆட்டமிழந்தார். 28.6-ஆவது ஓவரில் அரை சதம் அடித்த ஆம்லாவுக்கு கிளாசென் தோள் கொடுத்தார். எனினும், 34.3-ஆவது ஓவரில் ஆம்லாவை ரன் அவுட் ஆக்கினார் ஹார்திக். கிளாசென் (39 ரன்கள்), ரபாடா (3 ரன்கள்), ஷாம்ஸியும், பெலுக்வாயோவும் ரன்களின்றியும் ஆட்டமிழந்தனர். சாஹல் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார் மோர்கெல். 
இவ்வாறு 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 201 ரன்களில் ஆட்டமிழந்தது தென் ஆப்பிரிக்கா.
அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், சாஹல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
டெஸ்ட் தொடரை 2-1 என்று இந்தியா இழந்தபோதிலும், ஒரு நாள் தொடரை வென்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. கடைசி ஒரு நாள் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
சுருக்கமான ஸ்கோர்
இந்தியா

ஷிகர் தவன் 34, ரோஹித் சர்மா 115, விராட் கோலி 36, ஷ்ரேயஸ் ஐயர் 30, 
எம்.எஸ்.தோனி 13, புவனேஸ்வர் குமார் 19, 
பந்து வீச்சு: 
மோர்கெல் 10-2-44-0, ககிசோ ரபாடா 9-0-58-1, எல்.கிடி 9-1-51-4.
தென் ஆப்பிரிக்கா
ஹஸிம் ஆம்லா 71, எய்டன் மார்க்ரம் 32, டேவிட் மில்லர் 36, கிளாசென் 39.
பந்துவீச்சு: 
புவனேஸ்வர் குமார் 7-0-43-0, ஜஸ்பிரீத் பும்ரா 7-0-22-1, பாண்டியா 9-0-30-2, 
குல்தீப் யாதவ் 10-0-57-4, சாஹல் 9.2 -0-43-2
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com