இங்கிலாந்து செல்கிறார் இஷாந்த்: முதன்முறையாக உள்ளூர் போட்டியில் பங்கேற்பு

இங்கிலாந்து உள்ளூர் அணிக்காக இந்திய வீரர் இஷாந்த் ஷர்மா, முதன்முறையாக விளையாடவுள்ளார்.
இங்கிலாந்து செல்கிறார் இஷாந்த்: முதன்முறையாக உள்ளூர் போட்டியில் பங்கேற்பு

இங்கிலாந்தின் பழமையான உள்ளூர் அணிகளில் ஒன்றான சசக்ஸ், அடுத்து நடைபெறவுள்ள உள்ளூர் போட்டித் தொடர்களுக்காக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ஏப்ரல் 4-ந் தேதி முதல் ஜூன் 4-ந் தேதி வரை நடைபெறும் முதல் 5 கௌன்டி சாம்பியன்ஷிப் போட்டிகள் மற்றும் இதையடுத்து நடைபெறும் ராயல் லண்டன் ஒருநாள் தொடர்களில் சசக்ஸ் அணிக்காக இஷாந்த் ஷர்மா பங்கேற்கிறார்.

இதன்மூலம் எம்.ஏ.கே.பட்டௌடி மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோருக்கு அடுத்தபடியாக சசக்ஸ் அணிக்காக விளையாடும் 3-ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். மேலும் நடப்பு சீசனில் இங்கிலாந்து உள்ளூர் தொடரில் புஜாராவுக்கு (யார்க்ஷைர்) அடுத்தபடியாக பங்கேற்கும் 2-ஆவது இந்தியர் ஆவார். இவர்கள் இருவரும் அடுத்து நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இஷாந்த் ஷ்ரமா கூறியதாவது:

மிகவும் பழமையான, பாரம்பரியமிக்க உள்ளூர் அணியான சசக்ஸுக்கு விளையாடுவதில் பெருமை அடைகிறேன். என்னை தேர்வு செய்ததற்காக சசக்ஸ் அணி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அந்த அணிக்காக எனது சிறந்த பங்களிப்பை நிச்சயம் அளிப்பேன் என்றார்.

இஷாந்த் வருகை குறித்து சசக்ஸ் அணி நிர்வாக இயக்குநர் கீய்த் க்ரீண்ஃபீல்ட் தெரிவித்ததாவது:

அடுத்து நடைபெறும் ஐபிஎல் தொடர் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் இல்லாத சூழலில் இஷாந்தின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவிலான வேகப்பந்துவீச்சாளர் எங்கள் அணியுடன் இணைந்துள்ளது வரவேற்கத்தக்கது. அனுபவ ரீதியல் இஷாந்த் நிச்சயம் சிறந்த முன் உதாரணமாக திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை. இந்த வகை ஆடுகளத்தில் அவருடைய பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமையும் என்றார்.

இஷாந்த் ஷர்மா போன்ற சர்வதேச வீரரின் வருகை சிறப்பானதாகும். அவரின் அனுபவம் அணிக்கு உதவிகரமாக அமையும். சசக்ஸ் அணியில் அவர் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். அவரை நான் வரவேற்கிறேன் என்று சசக்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஜேஸன் கில்லஸ்பி கூறியுள்ளார். இவர் முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com