வெளிநாட்டில் பெற்ற மிகப் பெரிய வெற்றி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் வெற்றியை வெளிநாட்டில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன் என்று இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
வெளிநாட்டில் பெற்ற மிகப் பெரிய வெற்றி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் வெற்றியை வெளிநாட்டில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகக் கருதுகிறேன் என்று இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
இந்தத் தொடரில் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்களை எதிர்கொண்டுவந்த ரோஹித் சர்மா, இந்திய அணியின் வரலாற்று வெற்றிக்கு காரணமாகத் திகழ்ந்தார் என்றால் மிகையல்ல. போர்ட் எலிசபெத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5 ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி, 126 பந்துகளை எதிர்கொண்டு 115 ரன்களைக் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்துவதற்கு பெரும் பங்களிப்பு அளித்தார் ரோஹித்.
சிறப்பான ஆட்டக்காரர் என்று தன்னை மீண்டும் நிரூபித்து விட்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில், ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவே இந்தத் தொடர் வெற்றியைக் கருதுகிறேன். இரு அணிகளுக்கு இடையேயான வெற்றி என்பதால் இது சிறப்பான வெற்றியாகும்.
இதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரிலும் (2007-08) நாங்கள் வென்றிருக்கிறோம். அந்தத் தொடர் மிகவும் கடினமானதாக இருந்தது. 
முதல் ஆட்டத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வருகிறோம். அதற்கான பலன் கிடைத்து விட்டது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க மண்ணில் முதல்முறையாக தொடரை வென்று சரித்திரம் படைத்திருக்கிறோம். இந்நாட்டில் உள்ள ஆடுகளங்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமானதாக இருக்கும். நிச்சயம் இது சாதாரண வெற்றியல்ல. அனைத்து புகழும் அணியின் வீரர்களுக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீரரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கடும் சவாலை சாதித்துக் காட்டி விட்டனர்.
நான் கடந்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன்.
இது அனைத்து வீரர்களும் எதிர்கொள்ளக் கூடிய ஒன்றுதான். ஒரு ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நேரிட்டுவிட்டால் அவரது ஆட்டத்திறன் குறித்து கேள்வி எழுப்பப்படுகிறது. 3 ஆட்டங்களில் சோபிக்கத் தவறும்பட்சத்தில் அவர் நல்ல ஆட்டத்திறனில் இல்லை என்ற குற்றச்சாட்டையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எந்த வீரரையும் அதுபோல் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. 
டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது வருத்தமாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்ததை நினைத்து பெருமை கொளள்கிறோம் என்று ரோஹித் தெரிவித்தார். 
குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றி
அணியில் இடம்பெற்றுள்ள ஒட்டுமொத்த வீரர்களின் கூட்டு முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெருமிதம் தெரிவித்தார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் தற்போது விளையாடி வரும் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
அந்நாட்டு மண்ணில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது இதுவே முதல் முறையாகும்.
வெற்றி குறித்து கேப்டன் கோலி, செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
6 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிவிட்டோம். இருப்பினும், ஆட்டத்தின்போது எந்த இடத்தில் தவறிழைக்கிறோமோ அதையெல்லாம் சரி செய்ய வேண்டியுள்ளது. 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இருந்தாலும், கடைசி ஆட்டத்திலும் வென்று 5-1 என்ற கணக்கில் வெற்றி நடை போட வேண்டும். வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சில வீரர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்து சிந்தித்து வருகிறோம்.
அனைத்து வீரர்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே தொடரைக் கைப்பற்றி வரலாறு படைக்க முடிந்தது. வீரர்களின் செயல்பாடு திருப்தி அளிக்கும் விதமாக இருக்கிறது என்றார் விராட் கோலி.
தென் ஆப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறியதாவது:
இந்திய அணிக்கு புகழ் கூடியிருக்கிறது. எங்களுடைய பேட்டிங் போதிய அளவு சிறப்பாக அமையவில்லை.விக்கெட்டுகளை பறிகொடுக்கும்போது பின்வரும் வீரர்கள் உத்வேகத்துடன் விளையாட வேண்டும். இந்திய அணி உக்திகளை வகுத்து செயல்பட்டது. எதிரணியின் சுழற்பந்து வீச்சை சிறப்பாகவே எதிர்கொண்டோம். இந்தத் தொடர் எங்களுக்கு ஒரு பாடம் என்றார் மார்க்ரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com