வாழ்வா சாவா நிலைமை: தெ.ஆ. டி20 தொடர் வாய்ப்பு குறித்து ரெய்னா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட கிடைத்த வாய்ப்பு, எனக்கு வாழ்வா சாவா நிலைமைதான்...
வாழ்வா சாவா நிலைமை: தெ.ஆ. டி20 தொடர் வாய்ப்பு குறித்து ரெய்னா!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா சுமார் ஓராண்டுக்குப் பிறகு அணியில் மீண்டும் இடம்பிடித்தார்.

கடைசியாக அவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றிருந்தார். அதன் பிறகு உடற்தகுதி பிரச்னைகள் காரணமாக அணிக்கு திரும்பாமல் நீடித்து வந்தவர், சமீபத்தில் சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். அத்துடன், உடற்தகுதிக்கான "யோ யோ' சோதனையிலும் தேர்ச்சி பெற்ற நிலையில் தற்போது அணிக்குத் திரும்பியுள்ளார்.

இந்திய அணிக்கு மீண்டும் தேர்வானது குறித்து சுரேஷ் ரெய்னா கூறியதாவது:

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட கிடைத்த வாய்ப்பு, எனக்கு வாழ்வா சாவா நிலைமைதான். இந்திய அணிக்கு முதல்முறையாகத் தேர்வானதுபோல உணர்கிறேன். கடந்த இரண்டு வருடங்களாகக் கடுமையாக உழைத்தேன். இப்போது இந்திய அணிக்கான உடையைப் பார்த்தவுடன் உணர்வுபூர்வமாகிவிட்டேன். எனவே 3 டி20 ஆட்டங்களும் எனக்கு மிக முக்கியமானவை. சமீபகாலமாக எனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் சிறப்பாக விளையாடியுள்ளேன். இந்தத் தொடரும் முத்தரப்பு டி20 தொடரும் ஐபிஎல் போட்டிகளும் என் அடுத்தக்கட்டத்தைத் தீர்மானிக்கும். இதன்மூலம் இந்திய ஒருநாள் அணிக்குத் தேர்வாகலாம். 2019 உலகக் கோப்பையில் இடம்பிடிக்கவேண்டும் என்பது என் விருப்பமாக உள்ளது.

ஒருநாள் அணியில் 4 அல்லது 5-ம் நிலைகளில் களமிறங்க விருப்பப்படுகிறேன். நான் இடக்கை பேட்ஸ்மேனாக உள்ளதால் அணிக்குச் சாதகமாக இருக்கும். 

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டபோது வருத்தமாக இருந்தது. எதனால் நான் தேர்வாகவில்லை என எனக்குப் புரியவில்லை. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நான் அரை சதம் எடுத்தேன். இதனால் துவண்டு விடக்கூடாது, தொடர்ந்து போராடவேண்டும் என்று முடிவெடுத்தேன். நாட்டுக்காக ஆடவேண்டும் என்பது என் குறிக்கோளாக இருந்தது என்றார். 

3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் பிப்ரவரி 18-ஆம் தேதி ஜோஹன்னஸ்பர்க்கிலும், அடுத்த ஆட்டம் 21-ஆம் தேதி செஞ்சுரியனிலும், கடைசி ஆட்டம் 24-இல் கேப் டவுனிலும் நடைபெறுகிறது.

டி20 அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி, தினேஷ் கார்த்திக், ஹார்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, அக்ஸர் படேல், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்குர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com