பாராட்டுகள் அல்ல, அணியினரின் கருத்துகளே எனக்கு முக்கியம்: விராட் கோலி ஆச்சர்ய பேச்சு!

அணியைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் அவை. செய்தியாளர் சந்திப்பில் அவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை...
பாராட்டுகள் அல்ல, அணியினரின் கருத்துகளே எனக்கு முக்கியம்: விராட் கோலி ஆச்சர்ய பேச்சு!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 6-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 6 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 5-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா ஒருநாள் தொடரை வென்றது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

செஞ்சுரியனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியா 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வென்றது. தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸின் போது ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியும், இந்திய இன்னிங்ஸின்போது கேப்டன் கோலி 129 ரன்கள் விளாசியும் அணியின் வெற்றிக்கு அடிக்கோலினர். கோலி 19 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 129 ரன்களுடனும், ரஹானே 34 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் கிடி 2 விக்கெட் வீழ்த்தினார். கோலி ஆட்டநாயகன், தொடர் நாயகன் விருது வென்றார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மொத்தமாக கோலி 558 ரன்கள் விளாசியுள்ளார். இதன்மூலமாக, இருதரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 500 ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். முன்னதாக, சகநாட்டவரான ரோஹித் சர்மா கடந்த 2013-14 காலகட்டத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 6 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 491 ரன்கள் விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

ஒருநாள் தொடரை வென்றபிறகு செய்தியாளர் சந்திப்பில் விராட் கோலி கூறியதாவது:

மீண்டும் சதமடித்ததால் கனவுலகில் வாழ நான் விரும்பவில்லை. அனைத்து பாராட்டுகளையும் ஏற்றுக்கொண்டு அதைப் பற்றி நல்லவிதமாக நான் எண்ணப் போவதில்லை. ஏனெனில் அவை எனக்கு முக்கியமல்ல. உண்மையாகத்தான் சொல்கிறேன். நாங்கள் 0-2 என டெஸ்ட் தொடரில் பின்தங்கியிருந்தபோதும் ஒருநாள் தொடரில் 5-1 என வென்றபோதும் இவை எனக்கு முக்கியமில்லை. இரண்டு டெஸ்டுகளில் தோற்றபிறகு 90% பேர் எங்களை நம்பவில்லை. எங்கிருந்து நாங்கள் வந்துள்ளோம் என்பதை நன்கு அறிந்துள்ளோம். அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் என்னைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பதே எனக்கு முக்கியம். 

பாராட்டுகள் எனக்கு முக்கியமல்ல. ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்திகள் மாறும். நாளை நான் ஒரு மோசமான ஷாட் ஆடிவிட்டால் தங்களுக்குத் தோன்றியதை எழுதுவார்கள். எனவே நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றி சொல்வது என் வேலையல்ல. நான் ஒரு தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்வேன். அதற்குக் காரணங்கள் சொல்லமாட்டேன். செய்தியாளர்கள் சந்திப்பில் என்னைப் பற்றி புகழ்ந்துகொள்வதற்காக வரமாட்டேன். என்னால் அப்படிச் செய்யவே முடியாது. இது என் வேலை. யாருக்கும் சாதகமாக நடந்துகொள்வதில்லை. என் நாட்டுக்காக விளையாடுகிறேன். இது எனக்குப் பெருமை. என் பணியைச் செய்வதற்காகவே களமிறங்குகிறேன். 

அணியில் எவை எவையெல்லாம் சரிசெய்யவேண்டும் என்பதை செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தமாட்டேன். அணியைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்கள் அவை. செய்தியாளர் சந்திப்பில் அவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com