டி20: இந்தியாவுக்கு முதல் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
டி20: இந்தியாவுக்கு முதல் வெற்றி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
ஜோஹன்னஸ்பர்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் அடித்து வீழ்ந்தது.
முன்னதாக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச தீர்மானித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ரோஹித் சர்மா முதல் விக்கெட்டாக 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 21 ரன்களுக்கு வெளியேறினார். அவர் 1.5-ஆவது ஓவரில் ஜூனியர் டலா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசெனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
3-ஆவது வீரராக களமிறங்கிய ரெய்னா 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 15 ரன்கள் எடுத்திருந்தபோது ஜூனியர் டலா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். தொடர்ந்து வந்த விராட் கோலி 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 20 ரன்கள் எடுத்த நிலையில், டப்ரைஸ் ஷம்ஸி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். இந்நிலையில் தவன் 27 பந்துகளில் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் அரைசதம் எட்டினார்.
பின்னர் தோனி களமிறங்கிய நிலையில், 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் எடுத்திருந்த தவன் பெலுக்வாயோ பந்துவீச்சில் கீப்பர் கிளாசெனிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 
கடைசி விக்கெட்டாக தோனி 2 பவுண்டரிகள் உள்பட 16 ரன்களுக்கு கிறிஸ் மோரிஸ் ஓவரில்போல்டானார்.
மணீஷ் பாண்டே 29, ஹார்திக் பாண்டியா 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் ஜூனியர் டலா 2 விக்கெட்டுகளும், கிறிஸ் மோரிஸ், டப்ரைஸ் ஷம்ஸி, அன்டிலே பெலுக்வாயோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
புவனேஷ்வர் அசத்தல்: இதையடுத்து 204 ரன்களை இலக்காகக் கொண்டு ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான ரீஸா ஹென்ட்ரிக்ஸ் மட்டும் அதிகபட்சமாக 8 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 70 ரன்கள் எடுத்தார். அவர் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
எஞ்சிய வீரர்களில் ஃபர்ஹான் பெஹார்டியன் 39, ஹென்ரிச் கிளாசென் 16, ஜோன் ஸ்மட்ஸ் 14, அன்டிலே பெலுக்வாயோ 13 ரன்கள் எடுத்தனர். கேப்டன் டுமினி, டேவிட் மில்லர், டேன் பேடர்சன் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, கிறிஸ் மோரிஸ் டக் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் ஜூனியர் டலா 2 ரன்களுடனும், டப்ரைஸ் ஷம்ஸி ரன்கள் இன்றியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய தரப்பில் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளும், ஜெயதேவ் உனத்கட், ஹார்திக் பாண்டியா, யுவேந்திர சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.

சுருக்கமான ஸ்கோர்

இந்தியா

20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 203
தவன்-72, கோலி-26, ரோஹித்-21, மணீஷ்-29*, பாண்டியா-13*
பந்துவீச்சு: டலா-2/47, அன்டிலே-1/16, ஷம்ஸி-1/37
தென் ஆப்பிரிக்கா
20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 175
ஹென்ட்ரிக்ஸ்-70, பெஹார்டியன்-39, டலா-2*, ஷம்ஸி-0*
பந்துவீச்சு: புவனேஷ்வர்-5/24, உனத்கட்-1/33, 
சாஹல்-1/39, பாண்டியா-1/45.

205 இத்துடன் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 11 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்தியா, முதல் முறையாக 200 ரன்களுக்கு மேலாக ஸ்கோர் செய்துள்ளது.

78 இந்த ஆட்டத்தில் இந்தியா தனது பவர் பிளேயில் 78 ரன்கள் எடுத்தது. இதுவரையிலான டி20 ஆட்டங்களின் பவர் பிளேயில் இது அதிகபட்சமாகும். முன்னதாக, 2009-இல் நாகபுரியில் இலங்கைக்கு எதிராக இந்தியா தனது பவர் பிளேயில் 77 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

5 டி20 கிரிக்கெட்டில் ஓர் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை புவனேஷ்வர் குமார் பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com