ஒருநாள் தொடரில் இந்திய அணியின் உண்மையான திறமை வெளியானது

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது இந்திய அணியின் உண்மையான திறமை வெளிப்பட்டதாக அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி கூறினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின்போது இந்திய அணியின் உண்மையான திறமை வெளிப்பட்டதாக அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சையது கிர்மானி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
தென் ஆப்பிரிக்க களத்தின் தன்மையை அறியாத காரணத்தால் இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி கண்டது. ஆனால், ஒருநாள் தொடரில் மீண்டு வந்து, தொடரைக் கைப்பற்றிய அணியினர் தங்களது உண்மையான திறமையை வெளிப்படுத்தினர். தோனியின் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் திறமை குறித்து விமர்சிப்பவர்கள் அவரது பங்களிப்பை யோசிப்பது இல்லை. உரிய இலக்கை நோக்கிய பயணத்தில் பங்களிப்பு செய்வதே முக்கியமாகும். அனைத்து விதமான கிரிக்கெட்டிலுமாக தோனி முன்னின்று அணியை உயரத்துக்கு எடுத்துச் சென்றார்.
அவரிடம் தலைமைப் பண்புக்குறிய அனைத்து தகுதிகளும் உள்ளன. போதிய பங்களிப்பை வழங்கும் அவரிடம், புதிய நுட்பங்களை ஏன் எதிர்பார்க்க வேண்டும்? ஒருநாள் போட்டிகள் தொடங்கிய காலத்திலிருந்து விக்கெட் கீப்பிங் செய்யக்கூடிய பேட்ஸ்மேனை அணியில் சேர்க்க முக்கியத்துவம் அளிக்கின்றனர். அப்போதுதான் மற்றொரு ஆல்ரவுண்டரை அணியில் சேர்க்க இயலும். ராகுல் திராவிட் 2003 உலகக் கோப்பை போட்டி வரை விக்கெட் கீப்பிங் செய்து வந்தார். எனவே, விக்கெட் கீப்பிங்கில் சிறந்த வீரரை தனியே நியமிக்கும் தேவை இல்லை. ரித்திமான் சாஹா, தினேஷ் கார்த்திக், நமன் ஓஜா ஆகியோர் சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்கின்றனர் என்று சையது கிர்மானி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com