சாதனைப் பயணத்தில் ஒரு ஸ்டார் ஸ்டிரைக்கர்

இந்த தலைப்பின் விவரத்தை அறிய, முதலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தமிழக மகளிர் கால்பந்து அணி, சமீபத்தில் சத்தமின்றி ஓர் சாதனை நிகழ்த்தியிருக்கிறது.
சாதனைப் பயணத்தில் ஒரு ஸ்டார் ஸ்டிரைக்கர்

இந்த தலைப்பின் விவரத்தை அறிய, முதலில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை நாம் அறிந்துகொள்ள வேண்டும். தமிழக மகளிர் கால்பந்து அணி, சமீபத்தில் சத்தமின்றி ஓர் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. ஒடிஸா மாநிலம், கட்டாக்கில் நடைபெற்ற 23-ஆவது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து போட்டியில் சாம்பியன் ஆகியிருக்கிறது கேப்டன் நந்தினி தலைமையிலான அணி.
சிறப்பு என்னவென்றால், தேசிய சாம்பியன்ஷிப்பில் தமிழக மகளிர் அணி சாம்பியன் ஆவது இது முதல் முறையாகும். அதுவும் சாதாரணமாக அல்ல; 18 முறை சாம்பியனான மணிப்பூரை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி வாகை சூடியுள்ளது.

முன்னதாக, லீக் சுற்றுகளில் சிக்கிம், உத்தரகண்ட் ஆகிய அணிகளை வீழ்த்தியதோடு, கோவா அணிக்கு எதிரான ஆட்டத்தை மட்டும் டிரா செய்தது. காலிறுதியில் ஒடிஸாவையும், அரையிறுதியில் மேற்கு வங்கத்தையும் தோற்கடித்தது.

போட்டி என்னவோ சீனியர்களுக்கானது தான். ஆனாலும் தமிழக அணியில் இருந்த வீராங்கனைகளில் பலர் இளம் வீராங்கனைகளே. கடுகு சிறுத்தாலும், காரம் குறையாது என்பதை அவர்கள் களத்தில் நிரூபித்தனர்.

தமிழக அணியின் இந்த சாதனைப் பயணத்தில் 'ஸ்டார் ஸ்டிரைக்கர்' என்று இந்துமதியை குறிப்பிடலாம். இந்த சாம்பியன்ஷிப்பில் தமிழக அணி மொத்தமாக 25 கோல்கள் அடித்திருக்க, அதில் 10 கோல்களை அவரே அடித்து பலமான பங்களிப்பு செய்துள்ளார். இறுதி ஆட்டத்தில் முதல் கோலும் இவருடையதுதான்.

முன்பு புதுச்சேரி அணியில் புகுந்து விளையாடிய இந்துமதி, இன்று தமிழக அணியில் முதல் முறையாக தடம் பதித்திருக்கிறார். தமிழக காவல் பணியில் துணை ஆய்வாளராக அவர் இணைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சென்னை ராஜமங்களம் காவல் நிலையத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.
அவர் களமாடிய பொழுதுகளை 'தினமணி'யுடன் பகிர்ந்துகொண்டபோது...
'கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் கிராமம் தான் சொந்த ஊர். அப்பா கதிரேசன் கூலி வேலை செய்கிறார். அம்மா அமுதா இல்லத்தரசி. உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரர், ஒரு சகோதரி. குடும்பத்திலேயே 'விளையாட்டாக' வாழ்க்கையைத் தொடங்கிய முதல் நபர் நான் தான். 7-ஆம் வகுப்பில் இருந்து கால்பந்து பயணத்தை தொடங்கினேன்.

தொடக்கத்தில் சாதாரணமாக தடகளம் விளையாடிக் கொண்டிருந்தேன். பள்ளி உடற்கல்வி ஆசிரியையின் உந்துதலில் கால்பந்தில் கவனம் செலுத்தினேன். பின்னர், முன்னாள் இந்திய கால்பந்து வீரர் மாரியப்பன் சாரிடம் பயிற்சியைத் தொடங்கினேன். எனக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்த அவரது பயிற்சியிலேயே முறையான கால்பந்து வீராங்கனையாக மாறினேன். பள்ளி, கல்லூரி அணிகளைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட அணிக்காகவும், அதன்பிறகு, புதுச்சேரி அணிக்காகவும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தேசிய அளவிலான போட்டிகளில் புதுச்சேரிக்காக 10 ஆண்டுகள் விளையாடினேன். இடையில், குடும்பச் சூழல் காரணமாக பணிக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. கால்பந்தில் எனது விருப்பம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்து, தற்போது தொடர்ந்து விளையாடி வருகிறேன்' என்றார்.

மாநில அணிகளில் அதிரடி காட்டிய இந்துமதிக்கு, இந்திய மகளிர் கால்பந்து அணியின் கதவுகளும் திறந்தன. இந்திய அணிக்காக நான்கு முறை விளையாடியுள்ள இந்துமதி, தெற்காசிய கால்பந்து சம்மேளன போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இவற்றில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற்று கோல்கள் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பயணத்தினூடே தமிழக அணிக்கு திசை திரும்பி சாதனைச் சாம்பியன் ஆன விதம் சொல்கிறார் இந்துமதி.

'தமிழக காவல்துறைப் பணியில் சேர்ந்த பிறகு முன்பைப் போல பயிற்சியில் ஈடுபடவில்லை. அந்தச் சூழலில்தான் சாம்பியன்ஷிப் அணிக்குத் தேர்வான பிறகு, 10 நாள் முகாம் உள்பட, ஒரு மாதம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆடுகையில் புதிய அனுபவம் கிடைத்தது. ஆடவர் அணிகளுடன் பயிற்சி எடுத்துக்கொண்டோம்.

தேசிய சாம்பியன்ஷிப்பும் தொடங்கியது. லீக் சுற்று, காலிறுதி, அரையிறுதியில் வென்று கடைசியாக இறுதி ஆட்டத்துக்கு வந்தோம். அதில் வென்றுவிட்டால் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும் என்று முழு மூச்சுடன் முயற்சித்தோம்' என்றார் அவர்.

இறுதி ஆட்டத்தில் 18 முறை சாம்பியனான மணிப்பூரை எதிர்கொண்டது தமிழகம். இந்தச் சூழல் சற்றே மலைப்பை ஏற்படுத்தினாலும், அதைச் சாதகமான கண்ணோட்டத்தில் நோக்கிய இந்துமதி, அணியினரையும் அதற்குத் தயார்படுத்தினார். அவர் மேலும் கூறுகையில், ''தேசிய அளவிலான போட்டிகளின்போது மணிப்பூர் அணி வீராங்கனைகளுடன் விளையாடிய அனுபவம் உள்ளது. எனவே, அவர்களின் ஆட்ட நுட்பங்கள் தெரியும். எனவே அணியின் சக வீராங்கனைகளுக்கு, 'அவர்களும் நம்மைப் போன்ற வீராங்கனைகள் தான். அவர்களை வீழ்த்த இயலும்' என்று ஆலோசனைகள் வழங்கினேன். சாம்பியனாகினால், அங்கீகாரம், பணி வாய்ப்புகள் கிடைக்கும் என்ற உத்வேகத்துடன் ஆடினோம். சாம்பியனும் ஆகினோம். தேசிய சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக சாம்பியனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்ற அவர், கால்பந்து வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்புகள் இல்லாத நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார். 'வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், குடும்பச்சூழல் காரணமாக பலர் விளையாட்டு வாய்ப்பை கைவிடுகின்றனர். திறமையான வீராங்கனைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுகிறது. 

அணியின் முன்னேற்றத்துக்கும் அது பின்னடைவாகிறது. அரசு தரப்பில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தால் வீராங்கனைகளுக்கு அங்கீகாரமாக இருக்கும். மாவட்ட, மாநில, தேசிய அணிகளுக்காக விளையாடி விட்டேன். 
வெளிநாட்டு வீராங்கனைகளின் ஆட்டத்தை அறியும் வகையில், கிளப் அணிகளுக்காக விளையாடவும் விரும்புகிறேன்' என்று முடித்தார் இந்துமதி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com