குளிர்கால ஒலிம்பிக் : ஊக்கமருந்து பயன்படுத்திய ரஷிய வீரர் அலெக்ஸாண்டர் பதக்கம் பறிப்பு

பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள ரஷிய கர்லிங் விளையாட்டு வீரர் அலெக்ஸாண்டர் கிருஷெல்நிட்ஸ்கி ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதாக
குளிர்கால ஒலிம்பிக் : ஊக்கமருந்து பயன்படுத்திய ரஷிய வீரர் அலெக்ஸாண்டர் பதக்கம் பறிப்பு

பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள ரஷிய கர்லிங் விளையாட்டு வீரர் அலெக்ஸாண்டர் கிருஷெல்நிட்ஸ்கி ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதாக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கர்லிங் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் அலெக்ஸாண்டர் தனது மனைவி அனஸ்தாசியா பிரைஸ்காலோவாவுடன் இணைந்து வென்ற வெண்கலப் பதக்கம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் பங்கேற்க ரஷிய ஒலிம்பிக் சங்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 2014 சோச்சி ஒலிம்பிக்கின்போது அரசு அமைப்புகளின் ஆதரவுடன் ரஷிய வீரர்/வீராங்கனைகள் ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், கடும் பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்ட 168 ரஷிய வீரர்/வீராங்கனைகள் மட்டும் பொதுவான வீரர்களாக பியோங்சாங் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கர்லிங் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் போட்டியிட்ட அலெக்ஸாண்டர், 'மெல்டோனியம்' வகை ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்தக் குற்றச்சாட்டை அலெக்ஸாண்டர் மறுத்தபோதும், அவர் உண்மையை மறைப்பதாக அதிகாரிகள் தரப்பில் கண்டறியப்பட்டது. இச்சூழலில், அலெக்ஸாண்டர் ஊக்கமருந்து பயன்படுத்தியதை அவரே ஒப்புக்கொண்டதாக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து போட்டியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள அலெக்ஸாண்டரின் வெண்கலப் பதக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பதக்கத்துக்கான போட்டியில் அலெக்ஸாண்டர்-அனஸ்தாசியா ஜோடியிடம் வீழ்ந்த நார்வேயின் கிறிஸ்டின் ஸ்காஸ்லியன்-மேக்னஸ் நெட்ரெகாட்டன் ஜோடிக்கு அந்தப் பதக்கத்தை வழங்குவது தொடர்பாக உலக கர்லிங் சம்மேளனமும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும் முடிவு செய்யும் என்று நடுவர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாம்பியன் ஆன அதிக வயது வீரர்

ஆல்பைன் ஸ்கையிங் போட்டியில் ஆடவருக்கான ஸ்லாலம் பிரிவில் தங்கம் வென்ற ஸ்வீடனின் ஆன்ட்ரே மைரர், இப்பிரிவில் சாம்பியன் ஆன மூத்த வீரர் 
(35 ஆண்டு, 42 நாள்கள்) என்ற பெருமையை பெற்றார். 
ஸ்விட்சர்லாந்தின் ரமோன் ஜென்ஹேன்சரன் வெள்ளியும், ஆஸ்திரியாவின் மிக்கெலே மாட் வெண்கலமும் வென்றனர்.


மகளிர் ஐஸ் ஹாக்கியில் அமெரிக்கா சாம்பியன்

இதனிடையே, மகளிருக்கான ஐஸ் ஹாக்கி போட்டியில் அமெரிக்கா 3-2 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. ஒலிம்பிக் ஐஸ் ஹாக்கியில் அமெரிக்கா தங்கம் வெல்வது கடந்த 20 ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.
இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 2 கோல் அடித்து ஆட்டம் டிரா ஆன நிலையில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் ஒரு கோல் அடித்து அமெரிக்கா வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com