இன்றைய டி20 ஆட்டத்தில் இரு சாதனைகளை நிகழ்த்துவாரா விராட் கோலி?

இதற்கு முன்பு ஒரேயொரு பேட்ஸ்மேன் மட்டுமே ஒரு சுற்றுப்பயணத்தில் 1000 ரன்கள் எடுத்துள்ளார்... 
இன்றைய டி20 ஆட்டத்தில் இரு சாதனைகளை நிகழ்த்துவாரா விராட் கோலி?

டி20 தொடரில் கோலி 156 ரன்கள் எடுத்துவிட்டால் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் 1000 ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைவார் என்கிற நிலைமை டி20 தொடர் ஆரம்பிக்கும் முன்பு இருந்தது. ஆனால் முதலிரண்டு டி20 ஆட்டங்களிலும் அவர் 26,1 என மொத்தமாக 27 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். எனவே இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆயிரம் ரன்களை எடுக்க 129 ரன்கள் தேவைப்படுகிறது. சர்வதேச டி20-யில் கோலி அதிகபட்சமாக 90 ரன்கள் எடுத்துள்ளார். அதைத் தாண்டி இன்றைய ஆட்டத்தில் 129 ரன்கள் எடுத்துவிட்டால் தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற பெருமையைப் பெறுவார். இதை நிறைவேற்றுவது கடினம் என்றாலும் ஒரேடியாகச் சாத்தியமில்லை என்று சொல்லமுடியாது.

இதற்கு முன்பு ஒரேயொரு பேட்ஸ்மேன் மட்டுமே ஒரு சுற்றுப்பயணத்தில் 1000 ரன்கள் எடுத்துள்ளார். 1976-ல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்த மே.இ. வீரர் விவ் ரிச்சர்ட்ஸ், டெஸ்டுகளில் 829 ரன்களும் ஒருநாள் தொடரில் 216 ரன்களும் என ஒட்டுமொத்த அந்தச் சுற்றுப்பயணத்தில் மட்டும் 1045 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார். 

அடுத்ததாக டி20 சர்வதேச ஆட்டங்களில் இதுவரை 1983 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. 17 ரன்கள் எடுத்துவிட்டால் டி20 ஆட்டங்களில் 2000 ரன்களை எட்டிய முதல் இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெறுவார். 

டி20 - அதிக ரன்கள்

கப்தில் - 2271 ரன்கள் (75 ஆட்டங்கள்)
மெக்கலம் - 2140 ரன்கள் (71 ஆட்டங்கள்)
விராட் கோலி - 1983 ரன்கள் (57 ஆட்டங்கள்)

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3-ஆவது மற்றும் கடைசி டி20 ஆட்டம் கேப் டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் சனிக்கிழமை இரவு (இந்திய நேரப்படி) நடைபெறுகிறது. மொத்தம் 3 ஆட்டங்களைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் ஆட்டத்தில் இந்தியாவும், 2-ஆவது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி கண்டு தொடர் சமநிலையில் உள்ளது. எனவே தொடரைக் கைப்பற்ற இரு அணிகளுமே தீவிர முனைப்பு காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியாவின் தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணம் இந்த ஆட்டத்துடன் நிறைவடைகிறது. இந்த சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை தென் ஆப்பிரிக்க வெல்ல, ஒருநாள் தொடரை இந்தியா வரலாற்றுச் சாதனையுடன் வென்றது. எனவே, எஞ்சியிருக்கும் இந்த டி20 தொடரை வெல்வதற்கு இரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com