குளிர்கால ஒலிம்பிக்: ரஷியாவுக்கு முதல் தங்கம்

பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிக்கிழமை ரஷியா தங்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் ரஷியா இதுவரை 5 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ள நிலையில்,
குளிர்கால ஒலிம்பிக்: ரஷியாவுக்கு முதல் தங்கம்

பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிக்கிழமை ரஷியா தங்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் ரஷியா இதுவரை 5 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ள நிலையில், தற்போது முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.
தென் கொரியாவில் 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 
இதில் வெள்ளிக்கிழமை மொத்தம் 5 பதக்கப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஃபிகர் ஸ்கேட்டிங்கில் ரஷியாவின் அலினா ஜகிடோவா முதலிடம் பிடித்தார். சகநாட்டவர் எவ்ஜெனியா மெத்வதெவா வெள்ளியும், கனடாவின் கேட்லின் ஆஸ்மன்ட் வெண்கலமும் வென்றனர்.
வெற்றி குறித்து ஜகிடோவா கூறுகையில், 'சாம்பியன் ஆனதை நம்ப இயலவில்லை. சகஜ நிலைக்கு திரும்ப சிறிது நேரம் எடுத்துக்கொண்டேன். போட்டியின்போது சற்று நடுக்கமடைந்தாலும், பயிற்சியில் கிடைத்த பக்குவத்தினால் வென்றுள்ளேன்' என்றார்.
2-ஆம் பிடித்த மற்றொரு ரஷியரும், இருமுறை உலக சாம்பியனுமான எவ்ஜெனியாவுக்கு கடந்த அக்டோபரில் பாத எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குப் போட்டிகளில் பங்கேற்காத அவர், இந்த ஒலிம்பிக்கில் தனது முழு திறனையும் வெளிப்படுத்த இயலவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சோச்சி ஒலிம்பிக் போட்டியின்போது அரசு அமைப்புகள் ஆதரவுடன் ரஷிய வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்து குற்றச்சாட்டில், அந்நாட்டு ஒலிம்பிக் கமிட்டிக்கு பியோங்சாங் ஒலிம்பிக்கில் தடை விதிக்கப்பட்டது. எனினும், கடும் சோதனைகளுக்குப் பிறகு 168 ரஷிய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் கொடியின் கீழ் இந்தப் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்பீடு ஸ்கேட்டிங்
ஆடவருக்கான ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் நெதர்லாந்தின் ஜெல்டு நுயிஸ் தங்கமும், நார்வேயின் ஹாவர்டு லோரென்ட்ஸன் வெள்ளியும், தென் கொரியாவின் கிம் டே யுன் வெண்கலமும் வென்றனர்.

பையத்லான்
ஆடவருக்கான பயத்லான் ரிலேவில் ஸ்வீடன் அணி முதலிடம் பிடித்தது. நார்வே, ஜெர்மனி முறையே அடுத்த இரு இடங்களைப் பிடித்தன.

ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங் 


இதனிடையே, மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங் போட்டியில் கனடா முதல் இரு இடங்களை தக்கவைத்துக் கொண்டது. அந்நாட்டின் கெல்சே செர்வா தங்கமும், பிரிட்டானி பெலான் வெள்ளியும் வென்றனர். ஸ்விட்சர்லாந்தின் ஃபானி ஸ்மித் வெண்கலமும் கைப்பற்றினர்.

ஊக்கமருந்து புகாரில் ரஷிய வீராங்கனை


பியோங்சாங் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள ரஷியாவின் பாப்ஸ்லெய் விளையாட்டு வீராங்கனை நெட்ஷ்தா செர்கெயேவா, ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வி அடைந்ததாக ரஷிய பாப்ஸ்லெய் விளையாட்டு சம்மேளனம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாப்ஸ்லெய் விளையாட்டு பைலட்டான நெட்ஷ்தாவின் மாதிரிகளில் கடந்த 18-ஆம் தேதி மேற்கொண்ட ஊக்கமருந்து பரிசோதனையில், அவர் தோல்வி அடைந்தார். அவர் பயன்படுத்தியிருந்த இதயம் சம்பந்தப்பட்ட நோய்க்கான மருந்தானது, குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 13-ஆம் தேதி மேற்கொண்ட பரிசோதனையில் அவர் தோல்வியடையவில்லை' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பியோங்சாங் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களில் ஊக்கமருந்து புகாரில் சிக்கும் 4-ஆவது நபர் நெட்ஷ்தா ஆவார். முன்னதாக, ரஷிய கர்லிங் விளையாட்டு வீரர் அலெக்ஸாண்டர் கிருஷெல்நிட்ஸ்கி தாம் ஊக்கமருந்து பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவரது பதக்கம் வியாழக்கிழமை பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com