தென் கொரிய ஹாக்கி தொடர்: ராணி ராம்பால் தலைமையில் இந்தியா

தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஹாக்கி தொடர் போட்டிக்கான இந்திய மகளிர் அணி, ராணி ராம்பால் தலைமையில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
தென் கொரிய தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய மகளிர் அணி.
தென் கொரிய தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய மகளிர் அணி.

தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஹாக்கி தொடர் போட்டிக்கான இந்திய மகளிர் அணி, ராணி ராம்பால் தலைமையில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
தென் கொரியாவில் மார்ச் 3 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் ஹாக்கி தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு, தடுப்பாட்ட வீராங்கனை சுனிதா லக்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோல்கீப்பர் சவிதாவுக்கு இந்த சுற்றுப்பயணத்தில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், ரஜனி எடிமர்பு, ஸ்வாதி ஆகியோர் இந்திய கோல்போஸ்டுகளை பாதுகாக்க உள்ளனர். இதில் ஸ்வாதி முதல் முறையாக சர்வதேச போட்டியில் களம் காண்கிறார்.
கடந்த ஆண்டு முழங்கால் அறுவைச்சிகிச்சை செய்துகொண்ட தடுப்பாட்ட வீராங்கனை தீபிகா இந்தத் தொடர் மூலமாக அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த நவம்பரில் சீனாவை வீழ்த்தி ஆசிய கோப்பை வென்ற இந்திய அணி, அதன்பிறகு சர்வதேச போட்டியில் களம் காண்பது இது முதல் முறையாகும்.
இதுகுறித்து இந்திய அணி பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறியதாவது:
சீசனின் தொடக்க போட்டியில் வெற்றி காணும்போது கிடைக்கும் நம்பிக்கை, அந்த ஆண்டு முழுவதுமான போட்டிகளுக்கு ஊக்குவிப்பாக இருக்கும். அதேவேளையில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி எதிர்வரும் நிலையில், அணியில் மேம்படுத்த வேண்டிய இடங்களை அறிந்துகொள்ள தென் கொரிய தொடர் உதவியாக இருக்கும்.
இந்த அணியை அனுபவம் வாய்ந்த சீனியர் வீராங்கனைகள், ஜூனியர் வீராங்கனைகள் கலந்து தேர்வு செய்துள்ளோம். இதன்மூலமாக, சர்வதேச போட்டிகளில் களம் காணும் ஜூனியர்களுக்கு சீனியர்கள் தகுந்த வழிகாட்டுதல் வழங்க ஏதுவாக இருக்கும். யோயோ சோதனையின் மூலமாக வீராங்கனைகளின் வேகம், உடற்தகுதி ஆகியவை மேம்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்று ஹரேந்திர சிங் கூறினார்.
அணி விவரம்: ரஜனி எடிமர்பு, ஸ்வாதி (கோல்கீப்பர்கள்). தீபிகா, சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, சுமன் தேவி தெளடம், குர்ஜித் கெளர், சுஷிலா சானு (தடுப்பாட்டக்காரர்கள்). மோனிகா, நமிதா டோப்போ, நிக்கி பிரதான், நேஹா கோயல், லிலிமா மின்ஸ், உதிதா (நடுகள வீராங்கனைகள்). ராணி ராம்பால், வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்ஜோத் கெளர், நவ்னீத் கெளர், பூனம் ராணி (முன்கள வீராங்கனைகள்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com