உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார் அருணா

உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி (22) சனிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை
உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார் அருணா

உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்திய வீராங்கனை அருணா புத்தா ரெட்டி (22) சனிக்கிழமை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் தனிநபர் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இது முதல் முறையாகும்.
 ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான வால்ட் பிரிவு இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அருணா புத்தார ரெட்டி 13.64 சராசரி புள்ளிகளைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். கடந்த 1975 முதல் 43 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸில் இந்தியாவுக்கு இது முதல் பதக்கமாகும்.
 இப்பிரிவில் ஸ்லோவேனியாவின் ஜாசா கைஸ்லெஃப் 13.80 சராசரி புள்ளிகளுடன் தங்கமும், ஆஸ்திரேலியாவின் எமிலி ஒயிட்ஹெட் 13.69 சராசரி புள்ளிகளுடன் வெள்ளியும் வென்றனர். இப்பிரிவில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வீராங்கனையான பிரனதி நாயக், 13.41 சராசரி புள்ளிகளுடன் 6-ஆவது இடம் பிடித்தார்.
 இதுகுறித்து இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் சம்மேளன பிரிவு செயலர் சாந்திகுமார் சிங் கூறுகையில், "உலகக் கோப்பை போட்டியில் பதக்கம் வென்ற முதல் மற்றும் ஒரே இந்தியர் அருணா புத்தா ரெட்டி ஆவார். அவருக்காக பெருமை கொள்கிறோம்' என்றார்.
 சர்வதேச போட்டிகளில் அருணாவுக்கு இது முதல் பதக்கமாகும். இதற்கு முன்பு அவர் 2013 உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப், 2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, அதே ஆண்டின் ஆசிய விளையாட்டுப் போட்டி, 2017 ஆசிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளார்.
 இதில் 2017 ஆசிய சாம்பியன்ஷிப்பில் 6-ஆவதாக வந்ததே இதற்கு முன்பு சர்வதேச போட்டிகளில் அவரது அதிகபட்சமாக இருந்தது. இதர போட்டிகளில் அவர் தகுதிச்சுற்றைக் கூட கடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்நிலையில், மகளிருக்கான ஃப்ளோர் பிரிவு போட்டியின் இறுதிச்சுற்றில் அருணா புத்தா ரெட்டி ஞாயிற்றுக்கிழமை பங்கேற்கிறார்.
 முன்னதாக, 2016 ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் மகளிருக்கான வால்ட் பிரிவில் 4-ஆவதாக வந்த இந்தியாவின் தீபா கர்மாகர், ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் 2014 காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 இதர இந்தியர்கள்: இந்த உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர் ராகேஷ் பத்ரா, ஆடவருக்கான ரிங்ஸ் பிரிவில் 4-ஆவது இடம் பிடித்தார். அவரே, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள பேரலல் பார் பிரிவு இறுதிச்சுற்றிலும் பங்கேற்கிறார். அதேபோல், ஆஷிஷ் குமார் ஆடவருக்கான வால்ட் பிரிவு இறுதிச்சுற்றில் ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறார்.
 ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு அடுத்த மதிப்பு மிக்க போட்டியாக உலகக் கோப்பை போட்டிகள் உள்ளன. ஜிம்னாஸ்டிக்ஸில் ஓர் ஆண்டில் பல்வேறு உலகக் கோப்பை போட்டிகள் நடத்தபடுவது குறிப்பிடத்தக்கது.
 பிரபலங்கள் வாழ்த்து...
 * தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை)
 உங்களுக்காக பெருமை கொள்கிறேன் அருணா. உங்களது சிறப்பான சாதனைக்கு எனது வாழ்த்துகள்.
 * மஞ்சிந்தர் சிங் சிர்சா
 (பாஜக எம்எல்ஏ)
 நமது வீராங்கனைகள் நம்மை தொடர்ந்து பெருமை அடையச் செய்து வருகின்றனர். உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸில் வெண்கலம் வென்ற அருணா ரெட்டிக்கு வாழ்த்துகள்.
 * நந்த் கோபால் குப்தா நந்தி
 (மத்திய அமைச்சர்)
 உலகக் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துகள் அருணா புத்தா ரெட்டி.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com