நிறைவடைந்தது குளிர்கால ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் நார்வே முதலிடம்

தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வந்த 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தன.
நிறைவடைந்தது குளிர்கால ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் நார்வே முதலிடம்

தென் கொரியாவின் பியோங்சாங் நகரில் நடைபெற்று வந்த 23-ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தன.
 கடந்த 9-ஆம் தேதி தொடங்கி 17 நாள்கள் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டியின் பதக்கப் பட்டியலில் நார்வே 39 பதக்கங்களுடன் (14 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம்) முதலிடம் பிடித்தது. ஜெர்மனி 31 பதக்கங்களுடன் (14 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலம்) 2-ஆம் இடமும், கனடா 29 பதக்கங்களுடன் (11 தங்கம், 8 வெள்ளி, 10 வெண்கலம்) 3-ஆம் இடமும் பிடித்தன. போட்டியை நடத்திய தென் கொரியா 5 தங்கம், 8 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் 7-ஆவது இடம் பிடித்தது.
 நிறைவு விழா நிகழ்ச்சியில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகளும், அவரது ஆலோசகருமான இவான்கா டிரம்ப், வட கொரிய ஆளும் கட்சி துணைத் தலைவரான கிம் யோங் சோல் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
 பங்கேற்பு நாடுகளின் அணிவகுப்பின்போது தென் கொரிய மற்றும் வட கொரிய போட்டியாளர்கள் தங்களது நாட்டு கொடியுடனேயே பங்கேற்றனர். முன்னதாக, தொடக்க விழா நிகழ்ச்சியில் இரு நாட்டு அணிகளும் ஒருங்கிணைந்த கொடியின் கீழ் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ரஷிய ஒலிம்பிக் சங்கம் தடை செய்யப்பட்டிருந்ததால், அந்நாட்டு போட்டியாளர்கள் ரஷிய கொடியை பயன்படுத்தவில்லை. இதனிடையே, குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நாடுகளில் நிலவிய வெப்ப நிலையிலேயே, பியோங்சாங் ஒலிம்பிக்கில் தான் மிகக் குறைந்தபட்ச வெப்பம் நிலவியதாக தெரிவிக்கப்பட்டது.
 பியோங்சாங் ஒலிம்பிக்கின் கடைசி தங்கப் பதக்கத்தை நார்வே தடகள வீராங்கனையான மரிட் ஜோர்கென், மகளிருக்கான கிராஸ் கன்ட்ரி ஸ்கையிங்கில் வென்றார். இத்துடன் தனது ஒலிம்பிக் பயணத்தை நிறைவு செய்துள்ள ஜோர்கென், அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலுமாக 15 பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 நிறைவு நிகழ்வாக, ஒலிம்பிக் போட்டிக்கான கொடியை பியோங்சாங் நகர மேயர் சிம் ஜே குக்கிடம் இருந்து பெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச், அடுத்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள சீனாவின் பெய்ஜிங் நகர மேயர் சென் ஜின்னிங்கிடம் அதை ஒப்படைத்தார். இறுதியில், பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைவதாக அறிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com