முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனிக்கு ஓய்வு

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் எம்.எஸ்.தோனி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
முத்தரப்பு டி20 தொடர்: கோலி, தோனிக்கு ஓய்வு

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் விராட் கோலி, மூத்த வீரர் எம்.எஸ்.தோனி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
 மார்ச் 6-ஆம் தேதி தொடங்கும் இத்தொடருக்கான இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். ஷிகர் தவன் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள இந்த அணியில், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் கோலி காயமடைந்த நிலையில், அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
 அதேபோல், தென் ஆப்பிரிக்க தொடரில் பந்துவீச்சு பளுவைச் சுமந்த புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரோடு, ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் குல்தீப் யாதவும் அணியில் இடம்பெறவில்லை.
 இந்நிலையில், கடந்த டிசம்பரில் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய வீரர்கள் பலர், இலங்கை சுற்றுப் பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், சுழற்பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர், ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர்.
 மற்றொரு ஆல்ரவுண்டரான விஜய் சங்கர், பாண்டியாவுக்கு மாற்றாக சேர்க்கப்பட்டுள்ளார். தினேஷ் கார்த்திக் பிரதான கீப்பராக இருக்கும் நிலையில், ரிஷப் பந்த் முழுநேர பேட்ஸ்மேனாக களம் காணுவார்.
 வீரர்கள் தேர்வு குறித்து தேசிய தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியதாவது:
 ஓய்வு தேவை என தோனி கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவரை சேர்க்கவில்லை. அணியை தேர்வு செய்யும்போது, வீரர்களின் பணிச்சுமை, எதிர்வரும் தொடர்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டோம்.
 வேகப்பந்து வீச்சாளர்களின் திறனை அதிகரிக்கவும், காயத்திலிருந்து அவர்களை பாதுகாக்கவும் அவர்களுக்கு ஓய்வு அளிக்க, அணியின் உயர் செயல்பாட்டுக் குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டுள்ளோம்.
 உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடும் எந்தவொரு வீரரும், தேசிய அணிக்கு வருமுன்பாக இந்திய "ஏ' அணியில் விளையாடியிருக்க வேண்டும். அந்த நடைமுறை காரணமாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்படவில்லை என்று எம்எஸ்கே.பிரசாத் கூறினார்.
 அணி விவரம்
 ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவன், லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், யுவேந்திர சாஹல், அக்ஸர் படேல், விஜய் சங்கர், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உனத்கட், முகமது சிராஜ், ரிஷப் பந்த்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com