பெங்களூர் ஐபிஎல் அணியின் பயிற்சியாளர்களாக ஆஷிஷ் நெஹ்ரா, கேரி கிறிஸ்டன் நியமனம்!

கடந்த வருட ஐபிஎல்-லில் கடைசி இடத்தைப் பிடித்தது பெங்களூர். இதனால் இவ்விரு பொறுப்புகளுக்கு...
பெங்களூர் ஐபிஎல் அணியின் பயிற்சியாளர்களாக ஆஷிஷ் நெஹ்ரா, கேரி கிறிஸ்டன் நியமனம்!

கடந்த நவம்பர் மாதம் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்துடன், இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இதையடுத்து பெங்களூர் ஐபிஎல் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அறிவுரைகள் கூறி வழிநடத்தியதால் விராட் கோலியின் நம்பிக்கையைப் பெற்றார் நெஹ்ரா. இதனால் இந்தப் பதவி நெஹ்ராவைத் தேடிவந்துள்ளது.

அதேபோல புகழ்பெற்ற பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன், பெங்களூர் ஐபிஎல் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகத் தேர்வாகியுள்ளார். ஆஸ்திரேலிய டி20 லீக் போட்டியான பிக் பாஷ் லீகில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியின் பயிற்சியாளராக கிரிஸ்டன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து கிர்ஸ்டனுக்கு ஐபிஎல்-லிலும் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டெல்லி ஐபிஎல் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ள கிரிஸ்டன், 2015-ல் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். முதலில் மூன்று வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கிரிஸ்டன், டெல்லி அணி இரு வருடங்களாக மோசமாக விளையாடி எட்டாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்ததால் ஒப்பந்தம் முடிவதற்குள்ளாக இரு வருடங்களில் நீக்கப்பட்டார். அவர் பயிற்சியாளராக இருந்தபோது டெல்லி அணி, 28 போட்டிகளில் 7-ல் மட்டுமே வெற்றி பெற்றது.

கடந்த வருடம் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பணியாற்றிய டேனியல் வெட்டோரி, அப்பணியில் தொடர்ந்து நீடிக்கவுள்ளார். கடந்த வருட ஐபிஎல்-லில் கடைசி இடத்தைப் பிடித்தது பெங்களூர். இதனால் இவ்விரு பொறுப்புகளுக்குப் புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com