ஆஷஸ் தொடர்: இன்று கடைசி டெஸ்ட்

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இத்தொடரின் முதல் 3 ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா ஏற்கெனவே தொடரை கைப்பற்றிய நிலையில், 4-ஆவது ஆட்டத்தை டிரா செய்தது இங்கிலாந்து. கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்த ஆஸ்திரேலியா முனைய, ஆறுதல் வெற்றியாவது அடைய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலிய அணியில் காயம் காரணமாக 4-ஆவது டெஸ்டில் பங்கேற்காத வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், கடைசி டெஸ்டில் பங்கேற்கத் தயார் என்று கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார். அவ்வாறு அவர் களம் காணும் பட்சத்தில் சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்டன் அகருக்கு ஓய்வளிக்கப்படலாம்.
முதல் 3 போட்டிகளில் 19 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டார்க் அணிக்குத் திரும்புவது, ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய சாதகமாம். இதனிடையே, இத்தொடரில் இதுவரை 604 ரன்கள் குவித்துள்ள ஸ்மித், முதுகுப் பகுதியில் இந்த வாரம் காயம் கண்டிருந்தார். எனினும், தற்போது நலமுடன் இருப்பதாகவும், கடைசி டெஸ்டில் நிச்சயம் விளையாடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக கிறிஸ் வோக்ஸுக்கு பதிலாக, சுழற்பந்துவீச்சாளர் மேசன் கிரேன் களம் காண்கிறார். இது மேசனுக்கு முதல் சர்வதேச டெஸ்டாகும்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்துவிட்ட நிலையில், அடுத்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. ஒருநாள் போட்டிகளில் முக்கிய வீரரான வோக்ஸ் அப்போட்டிகளுக்கு முன்பாக மீளும் வகையில், அவருக்கு தற்போது ஓய்வளித்துள்ளது இங்கிலாந்து.
ஒருநாள் தொடர்: ஆஸி. அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ வேட் போன்ற வழக்கமான வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஒருநாள் போட்டிகளிலும் டிம் பெய்னே விக்கெட் கீப்பிங் செய்ய உள்ளார். பேட்ஸ்மேன் கிறிஸ் லின் அணியில் இணைந்துள்ளார்.
அணி விவரம்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், பேட்ரிக் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன், ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆன்ட்ரு டை, ஆடம் ஸம்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com