பிஹார் எம்.பி. மகன் தில்லி அணியில் இடம்பிடித்ததில் சர்ச்சை! தேர்வுக்குழுத் தலைவர் விளக்கம்!

ஒரு வீரரின் தந்தை அரசியல்வாதி என்பதால் அவர் கூடுதல் கவனம் பெற்றுள்ளார்...
ராஜேஷ் ரஞ்சன்
ராஜேஷ் ரஞ்சன்

சையத் முஸ்டாக் அலி டி20 போட்டிக்கான தில்லி அணியில் பிஹார் எம்.பி. மகன் இடம்பிடித்திருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

சர்தக் ரஞ்சன் என்கிற 25 வயது வீரர், பிஹார் எம்.பி. பப்பு யாதவ் என்றழைக்கப்படும் ராஜேஷ் ரஞ்சனின் மகன். ராஜேஷ் ரஞ்சன், மதேபுரா தொகுதியின் எம்.பி.-யாக உள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்தவர் தற்போது ஜன் அதிகார் பார்ட்டி என்கிற தனிக்கட்சியை ஆரம்பித்துள்ளார். அவருடைய மனைவி ரஞ்ஜீத் ரஞ்சன், காங்கிரஸ் எம்.பி.யாக உள்ளார். சர்தக் ரஞ்சன் கடந்த ஒருவருட காலமாக எந்தவொரு போட்டியிலும் பங்கேற்காத நிலையில் திடீரென தில்லி டி20 அணியில் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

உன்முக்த் சந்த், ஹிதன் தலால் போன்ற முக்கிய வீரர்களுக்கு தில்லி அணியில் இடமளிக்கப்படாத நிலையில் சர்தக் ரஞ்சன் தேர்வாகியிருப்பது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது. கடந்த வருடமும் முஸ்டாக் அலி போட்டியில் இடம்பெற்ற சர்தக், 3 போட்டிகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

தேசிய அளவிலான 23 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியை தில்லி அணி வென்றது. அதில் அதிக ரன்கள் எடுத்த தில்லி வீரர் ஹிதன் தலாலுக்குத் தற்போது தில்லி அணியில் இடமளிக்கப்படவில்லை!

சர்ச்சைகள் எழுந்ததையடுத்து தில்லி கிரிக்கெட் சங்கம் இந்த விவகாரம் குறித்து பதில் அளித்துள்ளது. எந்தவொரு அழுத்தமுமின்றி தேர்வுக்குழுவினர் அணியைத் தேர்வு செய்துள்ளார்கள் என நம்புகிறோம். ஒரு வீரரின் தந்தை அரசியல்வாதி என்பதால் அவர் கூடுதல் கவனம் பெற்றுள்ளார் என தில்லி கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் விக்ரம்ஜித் சென் கூறியுள்ளார். 

சர்தக்கைத் தேர்வு செய்த முன்னாள் வீரரும் தேர்வுக்குழுத் தலைவருமான அதுல் வாசன் ஒரு பேட்டியில் கூறியதாவது: சர்தக் ரஞ்சனின் தந்தை யார் என்றே எனக்குத் தெரியாது. கடந்த வருடம் அவரைத் தேர்வு செய்தோம். ஒரு போட்டியில் 37 ரன்கள் எடுத்தார். தனிப்பட்ட காரணங்களால் இந்த சீசனில் அவர் விளையாடவில்லை. 23 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இடம்பெற்று பயிற்சிகள் மேற்கொண்டார். ஒருவரைத் தேர்வுசெய்துவிட்டால் அவருக்குக் கூடுதல் வாய்ப்புகள் அளிக்கப்படவேண்டும் என நினைக்கிறோம் என்று பதில் அளித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com