2-வது ஒருநாள் போட்டி: கப்தில் அபார பேட்டிங்! நியூஸிலாந்து வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது... 
2-வது ஒருநாள் போட்டி: கப்தில் அபார பேட்டிங்! நியூஸிலாந்து வெற்றி!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

நெல்சனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆனால் அது சரியான முடிவாக அமையவில்லை. அந்த அணி 141 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிறகு 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது ஹபிஸும் ஷதாப் கானும் அரை சதமெடுத்து அணியை சரிவிலிருந்து காப்பாற்றினார்கள். 9-வதாகக் களமிறங்கிய ஹசன் அலி 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 31 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் என்கிற கெளரவமான ஸ்கோரை எடுத்தது.

இதன்பிறகு விளையாடிய நியூஸிலாந்து 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது. மழையால் ஆட்டம் அப்போது நிறுத்தப்பட்டது.

இதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கியபோது நியூஸிலாந்து அணிக்கு 25 ஓவர்களில் 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் அந்த ஸ்கோரை 2 விக்கெட் இழப்புக்கு 23.5 ஓவர்களில் எட்டியது நியூஸிலாந்து. கப்தில் 86, டெய்லர் 45 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். கப்தில் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. 3-வது ஒருநாள் போட்டி ஜனவரி 13 அன்று டுனேடினில் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com