பிரபல வீரர் யூசுப் பதான் 5 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கத் தடை! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

தடை செய்யப்பட்ட ஊக்கமருத்தைப் பயன்படுத்திய குற்றத்துக்காக பிரபல கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு 5 மாதம் இடைக்காலத் தடை விதித்துள்ளது பிசிசிஐ...
பிரபல வீரர் யூசுப் பதான் 5 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கத் தடை! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

தடை செய்யப்பட்ட ஊக்கமருத்தைப் பயன்படுத்திய குற்றத்துக்காக பிரபல கிரிக்கெட் வீரர் யூசுப் பதானுக்கு 5 மாதம் இடைக்காலத் தடை விதித்துள்ளது பிசிசிஐ.

கிரிக்கெட் வீரர் யூசுப் பதான், ஊக்கமருந்து பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது. கடந்த மார்ச் 16 அன்று எடுக்கப்பட்ட சோதனையில் டெர்பியூட்டலின் (Terbutaline) என்கிற மருந்தை அவர் உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டதால் பதான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெர்பியூட்டலின் இருமல் மருந்தில் உள்ள வேதிப்பொருள். இதுதான் பதானுக்குச் சிக்கலை வரவழைத்துள்ளது. இதைப் பயன்படுத்த வேண்டுமென்றால் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும். ஆனால் பதான் அதுபோன்ற அனுமதி எதுவும் பெறாததால் இந்த நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்.

எனினும் பதான் அளித்த விளக்கத்தில் பிசிசிஐ திருப்தியடைந்ததால் ஐபிஎல்-லில் பதான் பங்கேற்பதில் எவ்விதச் சிக்கலும் ஏற்படாது. இந்த விவகாரம் குறித்து பிசிசிஐ அளித்த அறிக்கையில் கூறியதாவது:

அக்டோபர் 27 அன்று பதான், ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கு விளக்கமளித்த பதான், பரிந்துரைக்கப்பட்ட மருந்துக்குப் பதிலாகத் தவறான இருமல் மருந்து தனக்குச் செலுத்தப்பட்டதால் இதுபோல நடந்துள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார். அவருடைய இந்த விளக்கம் திருப்திகரமாக உள்ளது. உடல்நலக்குறைவுக்காகத்தான் அந்த மருந்தைப் பயன்படுத்தியுள்ளார். தனது திறமையை மேம்படுத்திக்கொள்ள அல்ல. எனவே தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதற்காக ஆகஸ்ட் 15 முதல் ஜனவரி 14 வரை யூசுப் பதானுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று பிசிசிஐ இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதுபற்றி ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள பதான், இந்திய அணிக்காகவும் பரோடாவுக்காகவும் விளையாடுவதில் எப்போதும் பெருமையடைவேன். என் தாய்நாட்டுக்கும் பரோடாவுக்கு இழுக்கு நேரும் வகையில் எக்காரியத்தையும் நான் செய்யமாட்டேன். ஆனால் மருந்தை உட்கொள்ளும்போது இன்னும் கவனமாக இருந்திருக்கவேண்டும். மருந்து குறித்த விவரங்களை விசாரித்திருக்கவேண்டும் என்று கூறியுள்ளார். 

யூசுப் பதான் இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டிகளிலும் 22 டி20 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார். ஐபிஎல்-லில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். ஜனவரி 14 உடன் தடைக்காலம் முடிவடைவதால் யூசுப் பதான் ஐபிஎல்-லில் பங்கேற்க எவ்விதச் சிக்கலும் ஏற்படாது.

2012 ஐபிஎல்-லின்போது ஊக்க மருந்தைப் பயன்படுத்தியதாக தில்லி பந்துவீச்சாளர் பிரதீப் சங்வானுக்கு 18 மாதம் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது பதானுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com