நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட்: பதிலடி தருமா இந்திய அணி?

நாளை செஞ்சுரியனில் 2-ஆவது டெஸ்டில் களம் காண்கிறது இந்தியா...
நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட்: பதிலடி தருமா இந்திய அணி?

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 போட்டிகளைக் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றுள்ளது. இரு இன்னிங்ஸ்களிலுமாக 9 விக்கெட்டுகள் வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் பிலாண்டர் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், நாளை செஞ்சுரியனில் 2-ஆவது டெஸ்டில் களம் காண்கிறது இந்தியா.

இந்தியா, கடந்த 25 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வென்றதில்லை. அதிகபட்சமாக, 2010-11 காலகட்டத்தில் 2 போட்டிகளைக் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்துள்ளது இந்தியா. இந்நிலையில், தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களைக் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது இந்திய அணி.

இந்திய அணிக்கு 7 பேட்ஸ்மேன்கள், 7 பந்துவீச்சாளர்கள், ஒரு ஆல்ரவுண்டர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் டெஸ்டில் தோற்றுப்போனதால் இரண்டாவது டெஸ்டில் வென்று சமன் செய்யவேண்டும் என்கிற முனைப்பில் இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம், தென் ஆப்பிரிக்க அணியும் டெஸ்ட் தொடரை வென்று தன் பலத்தை நிரூபிக்க ஆவலாக உள்ளது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. தொடர்நாயகன் விருதை இந்திய கேப்டன் விராட் கோலி தட்டிச் சென்றார். ஆனால், கோலி தனக்கான உண்மையான சவாலை தென் ஆப்பிரிக்க தொடரில் எதிர்கொண்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாததால் இந்த டெஸ்ட் போட்டியில் ஒரு கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்ஸ்மேனாகவும் தன்னை நிரூபிக்கக் காத்திருக்கிறார் கோலி.

இந்திய அணியில் தவனுக்குப் பதிலாக ராகுல் இடம்பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ரஹானே இடம்பெறக்கூடும். ஆனால் ஒரே டெஸ்டில் உண்டான தோல்விக்காக நீக்குவார்களா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும் ரஹானேவை அணியில் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்கிறார் ஆலன் டொனால்ட்.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரஹானே இடம்பெறவில்லை. இந்த முடிவுக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஆலன் டொனால்ட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:

ரஹானாவை அணியிலிருந்து வெளியேற்றியது தவறானது. கடந்தமுறை இங்கு வந்தபோது மிகச்சிறப்பாக விளையாடினார். என்னைப் பொறுத்தவரை, கப்பலை நிலைநிறுத்த ரஹானே முக்கியமானவர். பொறுப்புடன் விளையாடி ரன்கள் எடுக்கக் கூடியவர். ரஹானே அணியில் இல்லாததைக் கண்டு தென் ஆப்பிரிக்க வீரர்கள் நிச்சயம் உற்சாகமாகியிருப்பார்கள். மிகவும் உலகத் தரமான
வீரர் அவர். 

இந்திய அணியின் பந்துவீச்சு அமர்க்களமாக உள்ளது. முதல் டெஸ்டில் மிகச்சிறப்பாக, மிகுந்த ஆர்வத்துடன் பந்துவீசினார்கள். முதல் டெஸ்டில் அவர்களுக்குக் கிடைத்த பலன்களை அடுத்த டெஸ்டிலும் கொண்டுசெல்வார்கள். தென் ஆப்பிரிக்க அணி வேகமான பந்துவீச்சை நம்பியுள்ளது. ஆனால் இந்திய அணி பல்வேறு வகையான பந்துவீச்சுகளைக் கொண்டுள்ளது என்று கூறியுள்ளார்.

புவனேஸ்வர் குமார், முகமது ஷமி, பூம்ரா, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்தமுறையும் பந்துவீச்சு அணிக்குப் பக்கபலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் செய்த தவறை சரிசெய்துவிட்டோம் என்கிறார் பூம்ரா.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒரு தோல்விக்காக நம்பிக்கையை இழக்கக் கூடாது. அப்படி இழந்தால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தகுதியற்றவர்களாகி விடுவோம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். தவறு செய்யாத வீரர் எவருமே கிடையாது. தென் ஆப்பிரிக்காவில் நான் இதுவரை விளையாடியதில்லை. எனவே, முதல் போட்டியில் கற்றுக் கொண்ட அனுபவத்தின் மூலமாக, 2-ஆவது போட்டியை எதிர்கொள்ள உள்ளேன். எனது முதல் விக்கெட்டாக டி வில்லியர்ஸை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், ஒரு பந்துவீச்சாளராக ஒவ்வொரு போட்டிக்குப் பிறகு அதிகம் மகிழ்ச்சி அடையாமலும், அதிகம் துவண்டு விடாமலும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு அடுத்த ஆட்டத்துக்கு தயாராக வேண்டும் என்பது எனது மந்திரம். அந்நிய மண்ணில் புதிதாக விளையாடும்போது சவாலாகவே இருக்கும். ஏனெனில் ஆடுகளமும், வானிலையும் வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் புதிய சவால்களை சந்திப்பது நல்லது. அதிகம் விளையாடும்போது, அதிகம் தெரிந்துகொள்ள இயலும். பின்னர் அந்த அனுபவத்தின் மூலம் தகுந்த முறையில் பந்துவீச இயலும். முதல் போட்டியை பொருத்த அளவில், முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சின்போது நாங்கள் செய்த தவறை உணர்ந்து கொண்டோம். அதை சரி செய்ததாலேயே 2-ஆவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்த முடிந்தது என்று பூம்ரா கூறியுள்ளார். 

முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற உற்சாகத்தில் உள்ளது தென் ஆப்பிரிக்க அணி. முதல் டெஸ்ட் போட்டியில் ஸ்டெய்ன், பிலாண்டர், மார்கல், ரபடா என நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பிடித்தார்கள். ஸ்டெய்ன் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியதால் தென் ஆப்பிரிக்காவின் அணுகுமுறை மாறாது என்கிறார் தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் ஒடிஸ் கிப்ஸன்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: வேகப்பந்து வீச்சாளர்களை மனத்தில் கொண்டு திட்டமிடும் பயிற்சியாளர் நான். அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை நுழைக்கமுடியுமா என்றுதான் பார்ப்பேன். ஆடுகளத்தின் தன்மை அதற்குப் பொருந்துமா என்று சோதித்துப் பார்க்கவேண்டும். இல்லையென்றில் அதற்கேற்றபடி அணியின் வடிவத்தை மாற்றிக்கொள்வோம். சொந்த மண்ணில் விளையாடும்போது உங்கள் பலத்துக்கு ஏற்றவாறு விளையாடவேண்டும். இந்தியா போன்ற சிறந்த அணியைத் தோற்கடிக்க விரும்பினால், முன்பு செய்ததை விடவும் அதில் சிறிது மாற்றம் செய்து முயற்சி செய்யவேண்டும். 

முதல் இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடியது போல தொடர்ந்து விளையாடுவதை நான் ஊக்குவிப்பேன். இதுபோன்ற விக்கெட்டுகளில் உங்கள் பெயரைத் தாங்கிய பந்துகள் உங்களை நோக்கி வரும். அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அது நம்மை வீழ்த்திவிடும். 15 ஓவர்கள் விளையாடி ரன்கள் எதுவும் எடுக்காவிட்டால் பயன் இல்லை. களத்தில் இருக்கும்போது நமக்கான பந்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார்.

15 பேர் கொண்ட இந்த அணியில் மோர்னே மோர்கெல், ககிசோ ரபாடா, வெர்னான் பிலாண்டர், அன்டிலே பெலுக்வாயோ, கிறிஸ் மோரிஸ் என பந்துவீச்சுக்கான முழு படையும் களம் காண்கிறது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். கேப்டவுன் டெஸ்டில் ரபாடா, ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனைத் தாண்டி முதலிடம் பெற்றுள்ளார். இடது குதிகாலில் தசை நார் கிழிந்ததால் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் பங்கேற்று அவரால் பந்துவீச இயலவில்லை. காயத்திலிருந்து அடுத்த 6 வாரங்களில் மீண்டு வருவேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் நம்பிக்கையுடன் தெரிவித்தார். இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணியில் இரு வேகப்பந்து வீச்சாளர்கள் புதிதாக இடம்பெற்றுள்ளார்கள். டுயன் ஆலிவியர், லங்கி நிஜிடி என இரு இளம் வேகப்பந்துவீச்சாளர்களும் ஸ்டெய்னுக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆலிவியர் 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். நிஜிடி ஒரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.

முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்திருந்த தென் ஆப்பிரிக்கா, 2-ஆவது இன்னிங்ஸில் 130 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்தியாவுக்கு 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு நாள் கைவசம் இருந்தபோதிலும், இந்திய அணியால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்தியாவால் வெறும் 135 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்நிலையில், முதல் டெஸ்ட் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளெஸ்ஸில் கூறியதாவது:
 இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் பதற்றமாக இருந்தது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், மிகச் சிறப்பான பந்துவீச்சு மூலம் இந்திய அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தினோம். காயம் காரணமாக அணியில் இடம்பெறாத வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் இருந்திருந்தால் இன்னும் குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியிருக்க முடியும்.
எனினும், அவரது இடத்தை பிலாண்டர் பூர்த்தி செய்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார் என்றார் டு பிளெஸ்ஸிஸ்.

2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி திருப்பி அடிக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அது எதிர்கொள்வது மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கும் தென் ஆப்பிரிக்க அணியை? இதைவிடவும் ஒரு பரபரப்பான டெஸ்ட் போட்டி ஒன்று இருக்கமுடியுமா? அடுத்த 5 நாள்களும் கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கொண்டாட்டமாகவே அமையும். 

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், ஷிகர் தவன், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ரித்திமான் சாஹா, பார்திவ் படேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்டியா.

தென் ஆப்பிரிக்க அணி: ஃபா டூ பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ஹசீம் ஆம்லா, டெம்பா பவுமா, குவிண்டன் டி காக், தியுனிஸ் டி பிரைன், டி வில்லியர்ஸ், டீன் எல்கர், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், மோர்னே மோர்கெல், கிறிஸ் மோரிஸ், அன்டிலே பெலுக்வாயோ, வெர்னான் பிலாண்டர், ககிசோ ரபாடா, டுயன் ஆலிவியர், லங்கி நிஜிடி.

டெஸ்ட் தொடங்கும் நேரம்: இந்திய நேரம் மதியம் 1.30 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com