சாஹாவுக்குப் பதிலாக பார்தீவ் படேலா? ஹர்ஷா போக்ளே கோபம்!

நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஒரு விக்கெட் கீப்பர் அதிகமாக எடுக்கும் 20, 30 ரன்கள் அவர் தவறவிடும் கேட்சுகளால் கூடுதலாக அனுமதிக்கக்கூடிய...
சாஹாவுக்குப் பதிலாக பார்தீவ் படேலா? ஹர்ஷா போக்ளே கோபம்!

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியை 3 டெஸ்ட், 6 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் எதிர்கொள்கிறது. டந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியா, முதல் டெஸ்டில் தோற்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவன், சாஹாவுக்குப் பதிலாக ராகுல், பார்தீவ் படேல் அணியில் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பேட்டிங்கைப் பலம் சேர்க்க இந்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. 

ரஹானேவைக் களம் இறக்க வேண்டாம் என்று முன்பு கூறியவர்கள் இப்போது அவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது என்று இந்திய கேப்டன் கோலி பேசியிருப்பதும் விமரிசனங்களுக்கு ஆளாகியிருக்கிறது.

சஹாவுக்குப் பதிலாக பார்தீவ் படேலைத் தேர்வு செய்தால் அது சரியான நடவடிக்கையாக இருக்காது என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஹர்ஷா போக்ளேவும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

ட்விட்டரில் அவர் கூறியதாவது: நன்றாக நினைவில் கொள்ளுங்கள். ஒரு விக்கெட் கீப்பர் அதிகமாக எடுக்கும் 20, 30 ரன்கள் அவர் தவறவிடும் கேட்சுகளால் கூடுதலாக அனுமதிக்கக்கூடிய 60, 70 ரன்களைச் சரிசெய்யவேண்டும். சாஹாவுக்குக் காயம் எதுவும் இருந்தாலொழிய, அவரை மாற்றுவது குறித்து யோசிக்கக்கூடவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதேபோல பாண்டியா குறித்து ட்வீட் செய்துள்ள ஹர்ஷா, வெளிநாடுகளில் பாண்டியா குறித்து இந்திய அணி முடிவெடுக்கவேண்டும். அவர் 6 பேட்ஸ்மேன்களில் ஒருவரா அல்லது 4 வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரா என்று. இந்த இரண்டும் இல்லையெனில், அவரைத் தேர்வு செய்தபிறகு அணியின் தன்மை குறித்து நீங்கள் திருப்திகொள்ளத்தான் வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com