எழுச்சி பெறுமா இந்தியா?: இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது.
எழுச்சி பெறுமா இந்தியா?: இரண்டாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் சனிக்கிழமை தொடங்குகிறது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டு அணியை 3 டெஸ்ட், 6 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் எதிர்கொள்கிறது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இந்தியா, முதல் டெஸ்டில் தோற்றது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதல் டெஸ்டில் தவன், ரோஹித் சர்மா ஆகியோருக்கு பதிலாக லோகேஷ் ராகுல், ரஹானே ஆகியோரை அணியில் சேர்த்திருக்க வேண்டும் என்றும் பரவலாகக் கூறப்பட்டது.

இருப்பினும், வீரர்களின் சமீபகால ஆட்டத்திறனை வைத்தே அவர்களைத் தேர்வு செய்ததாக கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்திருந்தார்.
தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் பந்து நன்கு பவுன்ஸ் ஆகும். பந்துவீச்சாளர்களின் பங்கு அந்நாட்டு ஆடுகளங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அணியில் இஷாந்த்?: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால், முதல் டெஸ்ட்டில் அவரால் பங்கேற்க இயலவில்லை.
அவர் உடல்நலம் தேறிவிட்டதால் இரண்டாவது டெஸ்டில் அணியில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.
முதல் டெஸ்டில் புவனேஸ்வர் குமார் மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சமி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினைப் பொறுத்தவரை முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அவரால் விக்கெட் எதுவும் வீழ்த்த இயலவில்லை.
இந்த முறை இன்னும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியை ரன்கள் அதிகம் சேர்க்காமல் நமது பந்துவீச்சாளர்கள் தடுக்க வேண்டும்.
பேட்டிங்கைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய், தவன் ஆகிய இருவரும் முதல் டெஸ்டில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டெஸ்ட் பேட்ஸ்மேனான புஜாராவும் அதிக ரன்களை முதல் டெஸ்டில் சேர்க்கவில்லை.
ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மட்டுமே முதல் இன்னிங்ஸில் அரை சதம் கடந்த இந்திய வீரர் ஆவார்.
எனவே, இனிவரும் போட்டிகளில் பேட்டிங்கில் இந்திய வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு அணியின் ஸ்கோரை உயர்த்த வேண்டும்.
பந்து வீச்சில் ஆளுமை: தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்த வரையில் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்டில் பங்கேற்க மாட்டார். ககிசோ ரபாடா, பிலாண்டர், மோர்னே மோர்கெல் ஆகியோருடன் சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மஹராஜ் களம் கண்டு இந்திய வீரர்களுக்கு களத்தில் அச்சுறுத்தல் அளிக்கலாம். முதல் டெஸ்டில் பிலாண்டர் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல ஃபார்மில் உள்ளார்.
முதல் டெஸ்ட்டில் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எட்டிப் பிடிக்க இந்திய அணி தவறிவிட்டது பல ரசிகர்களை சோகத்தில் தள்ளிவிட்டது.
இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொரை இந்திய அணி கைப்பற்ற வாய்ப்புள்ளது. ஒருவேளை தென் ஆப்பிரிக்கா 2 டெஸ்ட்களிலும் வெற்றி பெற்றுவிட்டால் தொடரை 2-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றிவிடும்.
இதுவரை 9 டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து வென்றுள்ள இந்தியா, இந்த டெஸ்ட் தொடரையும் வென்று சாதனை படைக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


மைதானம் எப்படி?
செஞ்சுரியன் பார்க் மைதானத்தில் 22 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க வசதி உள்ளது. இந்த மைதானத்தில் மொத்தம் 22 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய அணி இதுவரை 9 முறையும், பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடிய அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணிக்கு எதிராக விளையாடியபோது 130.1 ஓவர்களில் 620/4 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோர் ஆகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 34.4 ஓவர்களில் 101 ரன்களை இங்கிலாந்து எடுத்ததே குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.


துணை கேப்டன் 
ரஹானேவை களம் இறக்க வேண்டாம் என்று முன்பு கூறியவர்கள் இப்போது அவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது
- இந்திய கேப்டன் 
விராட் கோலி 

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை கொடுத்து விளையாடுவோம் 
-தென் ஆப்பிரிக்கா 
கேப்டன் ஃபா டூ பிளெஸ்ஸிஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com