ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர்!

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர்!

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டித் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஓர் ஆண்டில் மொத்தம் 4 கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் நடைபெறும். முதலில் வருவது ஆஸ்திரேலியன் ஓபன்.
இந்தப் போட்டி கடந்த 1905-ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் மிகப் பழைமையான போட்டிகளில் ஒன்றாகும்.
மே முதல் ஜூன் வரையில் பிரெஞ்ச் ஓபனும், ஜூன்-ஜூலையில் விம்பிள்டன் ஓபனும் நடைபெறும். ஆண்டின் இறுதியில் (ஆகஸ்ட்-செப்டம்பர்) அமெரிக்கன் ஓபன் நடைபெறும்.
ஓர் ஆண்டில் இந்த 4 கிராண்ட்ஸ்லாம்களையும் வெல்ல வேண்டும் என்பதே ஒவ்வொரு டென்னிஸ் வீரரின் மிகப் பெரிய கனவாக இருக்கும். அதிலும், ஒரே காலண்டர் ஆண்டில் இந்த 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வெல்வதுடன், அதே ஆண்டில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று ""கோல்டன்ஸ்லாம்'" சாதனையாளர் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கனவு என்று கூறினால் மிகையல்ல.
ஆனால், இத்தகைய சாதனை அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால், ஒவ்வொரு போட்டியும் மிகக் கடுமையாக இருக்கும். நன்கு பயிற்சி பெற்ற பல நாடுகளைச் சேர்ந்த வீரர்/வீராங்கனைகளுடன் மோத வேண்டியிருக்கும்.
அத்துடன், விளையாடும்போது ஏற்படும் காயங்களால் வீரர்களால் சில போட்டிகளில் பங்கேற்க இயலாமலும் போய்விட வாய்ப்புண்டு. (டென்னிஸ் உலகில் கோல்டன்ஸ்லாம்" சாதனையைப் படைத்த ஒரே ஒருவர் ஜெர்மனி வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1988-ஆம் ஆண்டில் இந்தச் சாதனையை அவர் புரிந்தார்).
இந்தச் சாதனையைப் படைப்பதற்கு ஆஸ்திரேலியன் ஓபன் தொடர்தான் தொடக்கம் ஆகும்.
ஆடவர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர், மகளிர் ஒற்றையர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்.
களம் இறங்கும் முன்னாள் சாம்பியன்கள்: இந்த முறை ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், ""ஓபன் எரா'வில் 5 முறை (2004, 2006, 2007, 2010, 2017) ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவருமான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், கடந்த ஆண்டு (2017) இறுதிப்போட்டி வரை முன்னேறியவரும், ஒரே ஒரு முறை (2009) ஆஸ்திரேலியன் ஓபனில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவருமான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஆஸ்திரேலியாவில் 6 முறை (2008, 2011, 2012, 2013, 2015, 2016 ) கிராண்ட்ஸ்லாம் வென்று அதிகமுறை இங்கு பட்டம் வென்றவர் என்ற பட்டியலில் முதலிடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்கா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வலது முழங்கையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக, கடந்த 6 மாதங்களாக எந்தவொரு டென்னிஸ் போட்டியிலும் ஜோகோவிச்சால் பங்கேற்க இயலவில்லை. தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ரஃபேல் நடால், காயம் காரணமாக தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிப்போர் மட்டும் ஆண்டின் இறுதியில் போட்டியிடும் ஏடிபி உலக டூர் பைனல்ஸ் போட்டியில் இருந்து விலகினார். பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியிலும் அவரால் பங்கேற்க இயலவில்லை. இந்நிலையில், காயத்திலிருந்து மீண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரில் பங்கேற்கிறார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில், கடந்த ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறிய அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ரஷியாவின் மரியா ஷரபோவா, செக்கோஸ்லேவியாவின் கரோலினா பிலிஸ்கோவா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
முதல் முறையாக 4 இந்திய வீரர்கள்: ஆஸ்திரேலியன் ஓபன் தகுதிச் சுற்றில் முன்னெப்போது இல்லாத வகையில்
இந்தியாவின் நம்பர் ஒன் வீரரும், தரவரிசையில் 121-ஆவது இடத்தில் இருப்பவருமான யூகி பாம்ப்ரி, வளரும் நம்பிக்கை நட்சத்திரங்களான தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல், பிரஜ்நேஷ் குனேஷ்வரன் ஆகிய 4 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். தகுதிச்சுற்றில் 3 சுற்று ஆட்டங்களில் வெற்றி பெற்றால்தான் பிரதான போட்டியில் பங்கேற்க முடியும்.
செரீனா விலகல்: நடப்பு சாம்பியனும் , ஆஸ்திரேலியாவில் 7 முறை (2003, 2005, 2007, 2009, 2010, 2015, 2017) கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முழு உடல் தகுதியுடன் இல்லை என்று கூறி இந்த முறை போட்டியிலிருந்து விலகி விட்டார். காயம் காரணமாக இங்கிலாந்தின் பிரபல டென்னிஸ் வீரர் ஆண்டி முர்ரேவும் இந்த முறை ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் பங்கேற்கவில்லை. ஜப்பானின் கே.நிஷிகோரி, முன்னாள் "நம்பர் 1" வீராங்கனையும், 2 முறை (2012, 2013) தொடர்ந்து ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பெலாரஸின் விக்டோரியா அஸரென்கா ஆகியோர் காயம் காரணமாக இந்த முறை இப்போட்டியில் பங்கேற்கவில்லை.
சானியா மிர்ஸா விலகல்: மகளிர் இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், மகளிர் இரட்டையர் பிரிவில் கடந்த 2016-ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் பட்டம் வென்றவருமான இந்தியாவின் சானியா மிர்ஸா, இந்த ஆண்டு காயம் காரணமாக பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸூடன் இணைந்து இவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
மேலும், கலப்பு இரட்டையர் பிரிவில் சக நாட்டவரான மகேஷ் பூபதியுடன் இணைந்து இவர் ஆஸ்திரேலியாவில் கடந்த 2009-இல் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் என்பது நினைவுகூரத்தக்கது.
மொத்தம் 14 தினங்கள் நடக்கும் இந்தப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஜனவரி 27-ஆம் தேதியும், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் அதற்கு மறுநாளும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com