கிராண்ட்ஹோம் அதிரடியால் நியூஸிலாந்து எளிதாக வெற்றி!

தன்னுடைய அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார் கிராண்ட்ஹோம்...
கிராண்ட்ஹோம் அதிரடியால் நியூஸிலாந்து எளிதாக வெற்றி!

கிராண்ட்ஹோம் விளையாட வந்தபோது நியூஸிலாந்து அணிக்கு 15 ஓவர்களில் 109 ரன்கள் தேவையாக இருந்தது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. 

45.5 ஓவர்களில் அதாவது 4.1 ஓவர்கள் மீதமிருக்க பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து. எல்லாம் கிராண்ட்ஹோமின் அதிரடி ஆட்டத்தால் உண்டான மாற்றம். 

வில்லியம்சன் 32 ரன்களில் வீழ்ந்தபோது களமிறங்கிய கிராண்ட்ஹோம், கடகடவென்று சிக்ஸ், பவுண்டரிகள் வழியாக ரன்களை எடுத்தார். இதனால் அவரால் 25 பந்துகளில் அரை சதத்தை எட்டமுடிந்தது. அப்போது நியூஸிலாந்தின் வெற்றிக்கு 51 பந்துகளில் 42 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்தளவுக்கு தன்னுடைய அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றினார் கிராண்ட்ஹோம்.

பாகிஸ்தானுக்கு எதிராக நியூஸிலாந்து வீரர் எடுத்த அதிகவேக அரை சதமாகும். இதற்கு முன்பு 2011-ல், ஜெஸ்ஸி ரைடர் 31 பந்துகளில் அரை சதம் எடுத்தார். அச்சாதனையைத் தாண்டியுள்ளார் கிராண்ட்ஹோம். 

கடைசியில் நிகோல்ஸும் அரை சதமடிக்க, 45.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்து நான்காவது ஒருநாள் போட்டியையும் வென்றுள்ளது நியூஸிலாந்து. அந்த அணியின் கப்தில் 31 ரன்கள், மன்ரோ 56 ரன்கள் எடுத்து அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தார்கள். கிராண்ட்ஹோம் 74 (45 பந்துகளில்), நிகோல்ஸ் 52 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து 4-0 என முன்னிலை வகிக்கிறது. 

முன்னதாக, ஹாமில்டனில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஃபகார் ஸமான் (54 ரன்கள்), ஹாரிஸ் சோஹைல் (50 ரன்கள்), முகமது ஹபீஸ் (81 ரன்கள்), சர்பராஸ் அகமது (51 ரன்கள்) என நான்கு பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அரை சதம் எடுத்தார்கள். இதில் முகமது ஹபீஸ் 4 சிக்ஸர்களும் சர்பராஸ் 3 சிக்ஸர்களும் அடித்தார்கள். போல்ட் வீசிய 50-வது ஓவரில் ஹபீஸ் 3 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடித்து கடைசிப் பந்தில் ரன் அவுட் ஆனார். அந்த ஓவரில் மட்டும் பாகிஸ்தானுக்கு 22 ரன்கள் கிடைத்தன. கடைசி 5 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்ததால் பாகிஸ்தான் அணி கெளரவமான ஸ்கோரை அடையமுடிந்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்துத் தரப்பில் செளதி 3 விக்கெட்டுகள் எடுத்தார். 

ஆட்ட நாயகன் விருது கிராண்ட்ஹோமுக்கு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com