ஆஸ்திரேலியன் ஓபன்: முதல் சுற்றில் ஃபெடரர், ஜோகோவிச், ஷரபோவா வெற்றி

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவரும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில்
ஆஸ்திரேலியன் ஓபன்: முதல் சுற்றில் ஃபெடரர், ஜோகோவிச், ஷரபோவா வெற்றி

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்றுவரும் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் மரியா ஷரபோவா, 6-1, 6-4 என்ற நேர் செட் கணக்கில், ஜெர்மனியின் டி.மரியாவை வீழ்த்தினார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், செர்பியாவின் ஜோகோவிச் உள்ளிட்ட வீரர்கள் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் இத்தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், சர்வதேச தரவரிசையில் 48-ஆவது இடத்தில் உள்ள முன்னாள் 'நம்பர் 1' வீராங்கனை மரியா ஷரபோவா, தரவரிசையில் 47-ஆவது இடத்தில் இருக்கும் டி.மரியாவை எதிர்கொண்டார். ஆக்ரோஷமாகவும், சாதுரியமாகவும் விளையாடிய ஷரபோவின் ஆட்டத்தை எதிர்கொள்ள திணறினார் டி.மரியா. இதனால், முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் 32 நிமிடங்களில் எளிதில் கைப்பற்றினார் ஷரபோவா.
இரண்டாவது செட் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. ஷரபோவாவுக்கு எதிராக திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் டி.மரியா. இருப்பினும், அந்த செட்டை 6-4 என்ற கணக்கில் தன்வசமாக்கினார் ஷரபோவா.
கடந்த 2016-ஆம் ஆண்டில் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்ததை அடுத்து, அவருக்கு 15 மாதங்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. தடைக்காலம் முடிவடைந்த பிறகு, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்ற ஷரபோவா, அந்தத் தொடரில் காலிறுதிக்கு முந்தைய சுற்று வரை முன்னேறியிருந்தார். முதல் வெற்றி குறித்து அவர் கூறுகையில், 'பழைய நிலைக்குத் திரும்பி விட்டேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார். 2-ஆவது சுற்றில், லாத்வியாவின் ஏ.செவஸ்டோவாவை வியாழக்கிழமை எதிர்கொள்கிறார் ஷரபோவா.
முகுருசா வெற்றி: மற்றொரு மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், தரவரிசையில் 3-ஆவது இடம் வகிப்பவரான ஸ்பெயினின் முகுருசா, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில், பிரான்சின் ஜெஸிகாவை வீழ்த்தினார்.
மற்ற ஆட்டங்களில் பௌச்சர்டு (கனடா), ஏ.கெர்பர் (ஜெர்மனி), ஏ.சாஸ்னோவிச் (பெலாரஸ்), அலெக்ஸாண்ட்ரோவா (ரஷியா) ஆகிய வீராங்கனைகள் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.
2-ஆவது சுற்றில் ஃபெடரர்: ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில், நடப்பு சாம்பியனும், 5 முறை ஆஸ்திரேலியன் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவருமான ரோஜர் ஃபெடரர், ஸ்லோவேனியாவின் ஏ.பெடேனேவை 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு ஆட்டத்தில், 6 முறை ஆஸ்திரேலியன் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள செர்பியாவின் ஜோகோவிச், 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில், அமெரிக்காவின் டொனால்டு யங்கை வீழ்த்தினார்.
இதேபோல், தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவும் முதல் சுற்றில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com