இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
இரண்டாவது டெஸ்ட்: இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்கு

2-ஆவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா 258
 தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 91.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் எடுத்தது.
இன்னும் ஒரு நாள் எஞ்சியிருக்கும் நிலையில், அந்த இலக்கை எட்ட இந்திய அணி போராடி வருகிறது.
நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில், 23 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
கேப்டன் விராட் கோலியின் அதிரடி சதத்துடன் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 92.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. 28 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்க்ரம், ஆம்லா ஆகியோர் தலா 1 ரன்னுடன் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். அடுத்து களம் இறங்கிய ஏபி டி வில்லியர்ஸ் அரை சதத்துடனும், எல்கர் 78 பந்துகளில் 36 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நான்காவது நாள் ஆட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
அணி 144 ரன்களை எட்டியிருந்தபோது முகமது சமியின் பந்துவீச்சில் டி வில்லியர்ஸ் 80 ரன்களில் விக்கெட் கீப்பர் பார்திவ் படேலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, டீன் எல்கரும் 61 ரன்களில் சமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் நிதானமாக விளையாட, மறுமறும் குவிண்டன் டி காக், சமி பந்துவீச்சில் நடையைக் கட்டினார். பிலாண்டர் (85 பந்துகளில் 26 ரன்கள்), கேசவ் மஹராஜ் (6 ரன்கள்), ரபாடா (4 ரன்கள்), பிளெஸ்ஸிஸ் (141 பந்துகளில் 48 ரன்கள்), எல்.கிடி (1 ரன்) ஆட்டமிழந்தனர். மோர்னே மோர்கெல் மட்டும் ஆட்டமிழக்காமல் 10 ரன்களுடன் இருந்தார். இவ்வாறாக அந்த அணி 91.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்கள் சேர்த்தது.
அதிகபட்சமாக முகமது சமி 4 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 
2-ஆவது இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற 28 ரன்களுடன் சேர்த்து இந்திய அணிக்கு 287 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்தியா தடுமாற்றம்: செவ்வாய்க்கிழமை 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா தொடக்கம் முதலே தடுமாறி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அணி 11 ரன்கள் எடுத்திருந்தபோது, 7.5-ஆவது ஓவரில் ரபாடா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் விஜய். அப்போது அவர் 9 ரன்கள் எடுத்திருந்தார்.
பிறகு, ராகுலுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 11.1-ஆவது ஓவரில், எல்.கிடி பந்துவீச்சில் மஹராஜிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களில் நடையைக் கட்டினார் ராகுல்.
ஏமாற்றம் அளித்த கோலி: முதல் இன்னிங்ஸில் 217 பந்துகளில் 153 ரன்கள் குவித்த கேப்டன் விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸில் சோபிக்க தவறிவிட்டார். எல்.கிடி வீசிய 15.6-ஆவது ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி பெவிலியன் திரும்பினார் கோலி (20 பந்துகளில் 5 ரன்கள்). அடுத்து விக்கெட் கீப்பர் பார்திவ் படேல் களம் கண்டார். பார்திவ் (5 ரன்கள்), புஜாரா (11 ரன்கள்) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
252 எடுத்தால் வெற்றி: 4-ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது.
7 விக்கெட்டுகள் கையிறுப்பில் உள்ள நிலையில், கடைசி நாளான புதன்கிழமை இந்தியா 252 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
 

ஸ்கோர் போர்டு
முதல் இன்னிங்ஸ்
தென் ஆப்பிரிக்கா
113.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 335
எய்டன் மார்க்ரம்-94,
ஹசிம் ஆம்லா-82, 
ஃபாப் டூ பிளெஸ்ஸிஸ்-63.
பந்துவீச்சு: 
இஷாந்த் சர்மா: 22-4-46-3, 
அஸ்வின் 38.5-10-113-4.
இந்தியா 
92.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 307 
பந்துவீச்சு: கேசவ் மஹராஜ் 20-1-67-1, மோர்னே மோர்கல் 22.1-5-60-4.
இரண்டாவது இன்னிங்ஸ் 
தென் ஆப்பிரிக்கா

91.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 258
விக்கெட் வீழ்ச்சி: 
1-1 (மார்க்ரம்), 3-2 (ஆம்லா), 144-3 (டி வில்லியர்ஸ்), 
151-4 (டீன் எல்கர்), 
163-5 (குவிண்டன் டி காக்), 209-6 (பிலாண்டர்), 
215-7 (கேசவ் மஹராஜ்), 
245-8 (ரபாடா), 
245-9 (டூ பிளெஸ்ஸிஸ்), 258-10 (எல்.கிடி).
பந்து வீச்சு: 
அஸ்வின் 29.3-6-78-1, 
ஜஸ்பிரீத் பும்ரா 20-3-70-3, இஷாந்த் சர்மா 17-3-40-2, 
முகமது சமி 16-3-49-4, 
ஹார்திக் பாண்டியா 9-1-14-0. 
இந்தியா 
விக்கெட் வீழ்ச்சி: 
11-1 (முரளி விஜய்), 
16-2 (லோகேஷ் ராகுல்), 
26-3 (விராட் கோலி).
பந்து வீச்சு: 
பிலாண்டர் 6-3-6-0, 
ரபாடா 5-2-9-1, 
எல்.கிடி 6-2-14-2, 
மோர்னே மோர்கெல் 5-3-4-0, கேசவ் மஹராஜ் 1-0-1-0.

கோலிக்கு அபராதம் 
மூன்றாவது நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் மைதானம் ஈரப்பதம் ஆனதாகவும், அதனால் பந்து சேதமடைவதாகவும் நடுவரிடம் கேப்டன் கோலி முறையிட்டார்.
அப்போது பந்தை ஆக்ரோஷமாக தரையில் வீசி எறிந்து அவர் கோபத்தையும் வெளிப்படுத்தியதாகவும், இது ஐசிசியின் விதிமுறைகளை மீறியச் செயல் என்றும் கூறி நடுவர் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், இந்த டெஸ்ட் போட்டியில் தரப்படும் ஊதியத்தில் 25 சதவீதத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்று கோலிக்கு ஐசிசி உத்தரவிட்டது. அத்துடன், அவருக்கு அபராதப் புள்ளி (டிமெரிட் பாய்ண்ட்) ஒன்றும் விதிக்கப்பட்டது.

3-ஆவது டெஸ்டில் தினேஷ் கார்த்திக்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெறுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் இரண்டாவது டெஸ்டில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்தில் விக்கெட் கீப்பராக பார்திவ் படேல் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், வரும் 24-ஆம் தேதி தொடங்கும் 3-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்படுவார் என்று பிசிசிஐ தாற்காலிக செயலர் அமிதாப் சௌதரி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com